தம்புல்லா: மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடரின் அரையிறுதியில், 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை பந்தாடிய இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ராங்கிரி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 80 ரன் மட்டுமே சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் நிகர் சுல்தானா 32 ரன் (51 பந்து, 2 பவுண்டரி), ஷொர்னா அக்தர் 19* ரன் எடுத்தனர். இந்திய பந்துவீச்சில் ரேணுகா சிங் 3 விக்கெட் (4-1-10-3), ராதா யாதவ் 3 விக்கெட் (4-1-14-3), பூஜா வஸ்த்ராகர், தீப்தி ஷர்மா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அடுத்து களமிறங்கிய இந்தியா 11 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 83 ரன் எடுத்து எளிதாக வென்று பைனலுக்கு முன்னேறியது. தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா 26 ரன் (28 பந்து, 2 பவுண்டரி), ஸ்மிரிதி மந்தனா 55 ரன்னுடன் (39 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரேணுகா சிங் சிறந்த வீராங்கனை விருது பெற்றார். மகளிர் டி20ல் அதிக ரன் குவித்த வீராங்கனைகள் பட்டியலில் மந்தனா (3433 ரன்) 2வது இடத்துக்கு முன்னேறினார். கேப்டன் ஹர்மன்பிரீத் (3415) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். நியூசிலாந்தின் சூஸி பேட்ஸ் (4348 ரன்) முதலிடத்தில் உள்ளார்.
The post மகளிர் ஆசிய கோப்பை டி20 பைனலில் இந்தியா appeared first on Dinakaran.