×

மாநகர் போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நியமனம்: டெண்டர் கோரியது எம்டிசி

சென்னை: மாநகர் போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர்களை நியமிக்க டெண்டர்கோரப்பட்டுள்ளது. சென்னையில் மாநகர போக்குவரத்து பேருந்து கழகம் மூலமாக நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 659 வழித்தடங்களில் 3,436 பேருந்துகள் தினமும் இயக்கப்படுகின்றன. 32 பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளில் தினமும் 33.60 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். இதில் தற்போதைய நிலவரப்படி 3000 பேருந்துகள் மட்டுமே தினமும் இயக்கப்படுவதாகவும் மற்ற பேருந்துகள் பணியாளர்கள் பற்றாகுறையால் இயக்கப்படாமல் இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், மாநகர் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களை நிரப்ப டெண்டர் வெளியிட்டுள்ளார். ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை ஏற்பாடு செய்ய தனியார் மனிதவள நிறுவனங்களிடம் இருந்து மின்னணு டென்டர்கள் வரவேற்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் பங்கேற்க டெபாசிட்டாக ரூ.25 லட்சம் செலுத்தவும், இந்த ஒப்பந்த படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் ஆகஸ்ட் 28ம் தேதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்த புள்ளிகள் அன்றைய தினமே மாலை 3 மணிக்கு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விபரங்களை தமிழக அரசின் டெண்டர் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசு பேருந்து ஓட்டுநர் நடத்துனர்களை தனியார் வசம் கொடுக்கக் கூடாது என தொடர்ந்து போக்குவரத்து கழக ஊழியர்களின் சங்கங்கள் வலியுறுத்தி வந்த நிலையில் இந்த அறிவிப்பு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இடையே அதிருப்தி ஏற்படுத்தி உள்ளது.

The post மாநகர் போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நியமனம்: டெண்டர் கோரியது எம்டிசி appeared first on Dinakaran.

Tags : Municipal Transport Corporation ,MTC ,Chennai ,Municipal Transport Bus Corporation ,Dinakaran ,
× RELATED மாநகர் போக்குவரத்து கழகத்தில் ரூ.14,000 உதவிதொகையுடன் தொழில் பழகுநர் பயிற்சி