திருநெல்வேலி: தென் மாவட்டங்களில் ரூ.262 கோடி மானியம், ரூ.769 கோடி வங்கி கடனுதவி மற்றும் 9,564 புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் அன்பரசன் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று (26.07.2024) சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு , மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமையில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறைக்கான அரசு செயலர் அர்ச்சனா பட்நாயக் இ.ஆ.ப, , தொழில் வணிக ஆணையர் இல.நிர்மல்ராஜ் இ.ஆ.ப, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் பிரபாகரன், இ.ஆ.ப., திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா.ப.கார்த்திகேயன், இ.ஆ.ப, , தொழில் வணிகத் துறை கூடுதல் ஆணையர் சிவ சௌந்தர வள்ளி, இ.ஆ.ப., பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல் வஹாப், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி.ஆர்.மனோகரன், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற தொழில் வணிக ஆணையரகத்தின் செயல்படுத்தப்படும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், தென் மாவட்டங்களில் 5 சுய வேலை வாய்ப்புத் திட்டங்களின் கீழ் 123 பயனாளிகளுக்கு ரூ.47.20கோடி திட்ட மதிப்பீட்டில் ரூ.6.91கோடி மானியத்துடன் கூடிய கடனுதவிகளை வழங்கினார்கள்.
ஆய்வு கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்ததாவது, தென் மாவட்டங்களில் மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக கடந்த 3 ஆண்டுகளில் சுய வேலை வாய்ப்புத் திட்டங்களான படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ரூ.262 கோடி மானியத்துடன், ரூ.769 கோடி வங்கி கடனுதவி வழங்கப்பட்டு, 9,564 புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். மேலும் 2174 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.129.42 கோடி சிறு, குறு நடுத்தர தொழில் கொள்கையின் படி மானியமாக வழங்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் நடப்பு நிதியாண்டில் (2024-25) படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் 242 பயனாளிகளுக்கு ரூ.1304.68 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.994.82 இலட்சம் கடன் வழங்கப்பட்டு மானியம் ரூ.326.17 இலட்சமும், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் மூலம் 39 பயனாளிகளுக்கு ரூ.967.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.787.50 லட்சம் கடன் வழங்கப்பட்டு மானியம் ரூ.225.00 லட்சமும், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.101.50 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.85.75 லட்சம் கடன் வழங்கப்பட்டு மானியம் ரூ.35 லட்சமும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் மூலம் 44 பயனாளிகளுக்கு ரூ.718.99 லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரூ.467.35 லட்சம் கடன் வழங்கப்பட்டு மானியம் ரூ.252.28 லட்சம் பெற்று வழங்கப்பட்டது.
பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் முறைப்படுத்தும் திட்டம் மூலம் 119 பயனாளிகளுக்கு ரூ.244.58 லட்சம் மானியத்திற்கான கடன் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதி ஆண்டில் 93 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3.33 கோடி சிறு குறு நடுத்தர தொழில் கொள்கை மானியமாக பெற்று வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டு மாவட்ட தொழில் மைய அலுவலர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை அடைய வேண்டும். அதே வேளையில், மகளிர், மாற்றுத்திறனாளிகள், பட்டியலினத்தவர், பழங்குடியினர், சிறுபான்மையினர் பிரிவைச் சேர்ந்தவர்களும், தொழில்முனைவோராக உருவாக்கும் வகையில் பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிக்கப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் பொது மேலாளர்கள் தனி கவனம் செலுத்தி, சென்ற ஆண்டைக் காட்டிலும் அதிகளவில் பயனாளிகளைக் கண்டறிந்து பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தின் அடித்தட்டு மக்களை தொழில்முனைவோர்களாக மாற்ற முழு முயற்சியுடன் பணிபுரிய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
இத்துறையால் செயல்படுத்தப்படும் முதலீட்டு மானியம், ஊதிய பட்டியல் மானியம், பின் முனை வட்டி மானியம் போன்ற 10 வகை மானியங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றினை குறித்த காலத்தில் எந்த காலதாமதமும் இன்றி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த திட்டங்கள் குறித்து புதிய தொழில்முனைவோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்கள். முதலமைச்சர் சமச்சீர் பொருளாதாரத்தினை செயல்படுத்துவதில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது. அதனை செயல்படுத்தும் விதமாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மானியங்கள் மற்றும் கடனுதவிகளை உரிய நேரத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பொது மேலாளர்களை அறிவுறுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில், முன்னாள் சட்டமன்ற பேரவைத் தலைவர் ஆவுடையப்பன் , முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், கிறித்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத் தலைவர் விஜிலா சத்தியானந்த், நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் ஜெகநாதன் மற்றும் தென் மாவட்டங்களின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொது மேலாளர்கள், துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post தென் மாவட்டங்களில் ரூ.262 கோடி மானியம், ரூ.769 கோடி வங்கி கடனுதவி மற்றும் 9,564 புதிய தொழில்முனைவோர்கள் உருவாக்கம்: அமைச்சர் அன்பரசன் தகவல் appeared first on Dinakaran.