- நெமிலி தாலுகா
- கொசஸ்தலா நதி
- நெமிலி
- சந்திரகல
- நெமிலி தாலுக்கா
- கூட்டுறவு பால் சங்கம்
- பில்லிப்பாக்கம்
- தின மலர்
*கலெக்டர் எச்சரிக்கை
நெமிலி : நெமிலி தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் நேற்று 2வது நாளாக கலெக்டர் சந்திரகலா ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, பிள்ளைப்பாக்கம் பகுதியில் உள்ள கூட்டுறவு பால் சொசைட்டியை அதிகாலை கலெக்டர் ஆய்வு செய்து, பால் கொள்முதல் செய்வது குறித்தும், பால் தரம் மற்றும் விற்பனை குறித்தும் கேட்டறிந்தார். அதைத்தொடர்ந்து, பனப்பாக்கம் சென்ற கலெக்டர், அங்கு பேருராட்சி சார்பில் நடந்துவரும் தூய்மை பணிகளை பார்வையிட்டார்.
மேலும், குப்பைகளை வீடு வீடாக சென்று தரம் பிரித்து வாங்கவேண்டும். பொதுமக்களுக்கு மக்கும், மக்காத குப்பைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். பின்னர், பனப்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த அவர், குப்பைகளை ஆங்காங்கே வியாபாரிகள் கொட்டிவிடுவதால் தேவையான இடத்தில் குப்பை தொட்டி அமைக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து நெமிலி அடுத்த அகவலம் பகுதியில் திடீர் ஆய்வு செய்து பொதுமக்களிடையே மகளிர் உரிமைத்தொகை மற்றும் முதியோர் தொகைகள் வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தார்.தொடர்ந்து நெமிலி பேரூராட்சி வன்னியர் தெருவில் கலெக்டர் சந்திரகலா திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் மழை நீர் வடிகால்வாய் முறையாக சீரமைக்கப்படாமல் அதில் குப்பைகள் மற்றும் கழிவுகள் இருந்ததால் உடனடியாக சீரமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், நெமிலி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு உணவை பரிமாறினார். மேலும் அங்கு உள்ள சமையலறையை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
மேலும் அங்கு பயன்படுத்தப்படாமல் இருந்த கழிப்பறை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து நெமிலி கொசஸ்தலை ஆற்றில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டு, ஆற்றில் குப்பைகளை கொட்டும் நபருக்கு அபராதம் விதித்து, கழிவுகளை கொட்டும் கடைக்கு சீல் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது டிஆர்ஓ சுரேஷ், தாசில்தார் ஜெயபிரகாஷ், பனப்பாக்கம் செயல் அலுவலர் குமார், பேரூராட்சிகளின் செயல் பொறியாளர் அம்சா, நெமிலி செயல் அலுவலர் பூவேந்திரன், அகவளம் ஊராட்சி மன்ற தலைவர் ஆஷா மார்க்கண்டேயன், மற்றும் வரை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மாற்றுத்திறனாளிக்கு நலத்திட்ட உதவி
நெமிலி அடுத்த கீழ் வெங்கடாபுரம் பகுதியில் மாற்றுத்திறனாளி அலுவலர் சரவணகுமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விஜய்காந்த் என்ற மாற்றுத்திறனாளி மூன்று சக்கர ைசக்கிள் ஊண்றுகோல் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதன் பேரில் உடனடியாக கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு நேற்று ஊராட்சி மன்ற தலைவர் அம்மு தட்சிணாமூர்த்தி ஒன்றிய குழு உறுப்பினர் விநாயகம் முன்னிலையில் மாற்றுத்திறனாளி அலுவலர் நலத்திட்ட உதவிகளை வழங்கி, உதவிக்தொகை மாதம் ரூ.2 ஆயிரம்வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினார்.
நலத்திட்ட உதவி பெற்ற மாற்றுத்திறனாளி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆனந்த கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். அப்போது, ஊராட்சி மன்ற தலைவர் அம்மு தட்சிணாமூர்த்தி ஒன்றிய கவுன்சிலர் விநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.
கலெக்டர் டென்ஷன்
அகவலம் தொடக்கப்பள்ளி வளாகத்தை 9ம் வகுப்பு மாணவி தூய்மைபடுத்திக் கொண்டிருந்தார். இதைக் கண்ட கலெக்டர், அந்த மாணவியை அழைத்து விசாரித்தார். அதற்கு அந்த மாணவி, ‘இந்த பள்ளியில் எனது தாயார் தூய்மை பணி செய்து வருகிறார். அவருக்கு உடல்நலம் சரியில்லாததால் என்னை அனுப்பி வைத்தார்’ எனக்கூறினார். இதைக்கேட்ட கலெக்டர், அங்கிருந்த அதிகாரிகளை அழைத்து, தூய்மை பணியாளர் விடுப்பு என்றால் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியது தானே? எதற்காக பள்ளி மாணவியை அனுமதிக்கிறீர்கள் என கேட்டார்.
இதுபோன்று சம்பவம் இனி நடைபெற்றால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். தொடர்ந்து, புன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆயவுக்கு சென்ற கலெக்டரிடம் அப்பகுதி மக்கள் மருத்துவமனை அருகே உள்ள 2 மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
The post நெமிலி தாலுகாவில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில்’ ஆய்வு கொசஸ்தலை ஆற்றில் கழிவுகளை கொட்டும் கடைக்கு ‘சீல்’ appeared first on Dinakaran.