×

நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் தொடர் மழை: படகு சவாரி நிறுத்தம்

*கடும் குளிரால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

*விவசாய நிலங்களில் தேங்கிய மழைநீர்

*மின்விநியோகம் பாதிப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் கூடிய மழை தொடர்கிறது. கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கி 2 முதல் 3 மாதங்கள் வரை பெய்யும். இந்த மழையின் போது பலத்த சூறாவளி காற்று வீசும். மேலும், எந்நேரமும் மழை பெய்து கொண்டே இருக்கும்.

இதனால், ஆங்காங்கே மரங்கள் விழுவது, மண்சரிவுகள் ஏற்படுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். சாலையில் விழுந்த மரங்களை தீயணைப்பு துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அகற்றுவது வழக்கம்.இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெரும்பாலான பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வருகிறது. ஊட்டி, மஞ்சூர், கூடலூர் மற்றும் பந்தலூர் போன்ற பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது. இந்த சூறாவளி காற்றின் காரணமாக நேற்று முன்தினம் மாலை ஊட்டி – கூடலூர் சாலையில் சூட்டிங் மட்டம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று விழுந்தது. இதனால் இவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதேபோல், ஊட்டியில் இருந்து இத்தலார் செல்லும் சாலை முள்ளிகொரை பகுதியில் மரம் ஒன்று விழுந்தது. இதனால், இவ்வழி தடத்திலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மரத்தினை தீயணைப்பு துறையினர் உடனடியாக இந்த மரங்களை அகற்றியதால் போக்குவரத்து தொடர்ந்தது. மேலும், லவ்டேல் பகுதியில் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது மரம் ஒன்று விழுந்தது கார் முழுமையாக சேதம் அடைந்தது.

எனினும், காரில் யாரும் இல்லாத நிலையில் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்து வரும் நிலையில், நேற்று ஊட்டி அருகேயுள்ள கேத்தி காவல் நிலையம் மீது மரம் ஒன்று விழுந்தது. இதில், காவல் நிலையம் கட்டிடம் சேதம் அடைந்தது. எனினும், யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஒரு சில இடங்களில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மற்றும் மழையின் காரணமாக கால நிலை மாற்றம் ஏற்பட்டு தற்போது குளிரும் அதிகரித்துள்ளது.

குறிப்பாக, ஊட்டியில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாக காணப்படுகிறது. தொடர்ந்து காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கும் அபாயம் உள்ளது. தொடர்ந்து, காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையும் தற்போது குறைந்துள்ளது. ஊட்டியில் காற்று மற்றும் சாரல் மழை தொடர்வதால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி படகு இல்லத்தில் மிதி படகுகள் சவாரி நிறுத்தப்பட்டது.

தொடர் மழை காரணமாக ஊட்டி அருகே முத்தோரை பாலாடா மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களிலும் தற்போது மழை நீர் தேங்கி நிற்க துவங்கியுள்ளது. இதனால், கேரட், பூண்டு, பீட்ரூட் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற பயிர்கள் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது. நீலகிரியில் நேற்று பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்): ஊட்டி 27, நடுவட்டம் 42, கிளன்மார்க்கின் 57, குந்தா 49, எமரால்டு 40, அவலாஞ்சி 138, அப்பர் பவானி 64, பந்தலூர் 20, கூடலூர் 25, தேவாலா 27.

ராட்சத மரம் விழுந்து கேத்தி காவல் நிலையம் சேதம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே எல்லநள்ளியில் இருந்து பாலாடா செல்லும் வழியில் கேத்தி பகுதியில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காவல் நிலைய கட்டிடத்திற்கு சுற்றிலும் ராட்சத கற்பூர மரங்கள் உள்ளன. இந்நிலையில் ஊட்டியில் பலத்த காற்றுடன் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. பலத்த காற்று வீசுவதால் ஆங்காங்கே மரங்கள் விழுந்து வருகின்றன. இந்நிலையில் 2 நாட்கள் இடைவெளிக்கு பின்பு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் பரவலாக காற்றுடன் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் கேத்தி காவல் நிலையத்திற்கு மேற்புறமுள்ள ராட்சத கற்பூர மரம் காவல் நிலையத்தின் மேல் விழுந்தது. இதில் பழமையான காவல் நிலைய கட்டிடம் சேதமடைந்தது. அதிஷ்டவசமாக காவல் நிலையத்தில் இருந்த காவலர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. கட்டிடம் சேதமடைந்த நிலையில், அதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post நீலகிரி மாவட்டத்தில் காற்றுடன் தொடர் மழை: படகு சவாரி நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூரில் அரசு பேருந்து கடத்தல்