×

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி பனிமய மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று தொடங்கியுள்ளது. தூத்துக்குடி கடற்கரை சாலையில் உலக புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம் அமைந்துள்ளது. இந்த பேராலயத்தில் உள்ள பனிமய மாதா சொரூபமானது 469 ஆண்டுகளுக்கு முன்பு புனித சவேரியரால் மனிலாவில் இருந்து கொண்டுவந்து வைக்கப்பட்டது.

இந்த திருவிழா வருடம் தோறும் 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும். ஆகஸ்ட் 5ம் தேதி 10ஆம் திருவிழா அன்று மாதாவின் சப்பர பவனி மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெறும். இந்த திருப்பலியில் தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளான இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்து பக்தர்கள் திருவிழாவை கண்டு செல்வது வழக்கம். ஜூலை 26ம் தேதியான இன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது.

இந்த குடியேற்றத்தை காண்பதற்கு காலை முதலே பள்ளி மாணவ, மாணவியர் மட்டுமல்லாமல் மீனவர்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானூர் இப்பகுதியில் குவிந்துள்ளனர். இத்தகைய திருவிழாவையொட்டி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் திருவிழாவை கண்டுகளித்தனர். பழைய துறைமுகத்திலிருந்து கப்பல் சங்கொலி ஒலிக்க பிரமாண்டமாக கொடி ஏற்றப்பட்டது. கொடி ஏற்றும் பொழுது கொடிமரத்தை சுற்றி இருந்த பக்தர்கள் புறாக்களை பறக்கவிட்டும், கைதட்டியும் மரியே வாழ்க கோஷங்களை எழுப்பியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மீனவர்கள் கடற்கரை வழியாக அங்கிருந்து கடலில் நின்றவாறு கொடியேற்றும் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். இந்த திருவிழா இன்று காலை சிறப்பு திருப்பலி, மாலை சிறப்பு தீபாராதனை என 10 நாட்களுமே வெகு சிறப்பாக நடைபெறும். 5ம் தேதி காலை சிறப்பு திருப்பலிக்கு பின் தேரோட்டம் நடைபெறும். இந்த திருவிழாவின் கொடியேற்றத்தை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டிபன் அந்தோணி ஏற்றி வைத்தார். மக்கள் பாதுகாப்பு கருதி 900 போலீசார் சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அமைச்சர், மேயர், ஆட்சியர் என அதிகாரிகளும் கொடியேற்றத்தில் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடி பனிமய மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Banimaya Mata Temple Annual Festival ,Tuticorin ,Tuticorin Banimaya Matha Temple annual festival ,Panimaya Matha Temple ,Tuticorin Beach Road ,Panimaya ,Thoothukudi ,Panimaya Mata Temple annual festival ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி ஜிஹெச் பகுதியில் ரவுடி தடுப்பு பிரிவு கூடுதல் ரோந்து பணி