×

பள்ளிக் குழந்தைகள் உயிர் காத்த ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சென்னை: பள்ளி வேனை ஓட்டி சென்ற டிரைவர் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார். முன்னதாக வேனை சாலையின் ஓரமாக நிறுத்தியதால் 20 குழந்தைகள் உயிர் தப்பினர். திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் கேபிசி நகரை சேர்ந்தவர் சேமலையப்பன் (49). இவர் வெள்ளகோவிலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 8 மாதங்களாக வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். அதே வேனில் இவரது மனைவி லலிதா, குழந்தைகளின் உதவியாளராக உள்ளார். நேற்று மாலை பள்ளி முடிந்த பிறகு சேமலையப்பன், வேனில் 20 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டார்.

கரூர் ரோட்டில் பழைய போலீஸ் குடியிருப்பு அருகே வந்தபோது திடீரென சேமலையப்பனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் வலியையும் பொருட்படுத்தாமல் வேனை சாலையின் ஓரமாக நிறுத்தினார். உடனே மனைவி லலிதா தண்ணீர் கொடுத்துள்ளார். அதை வாங்கி குடித்த சேமலையப்பன் மயங்கி சாய்ந்தார். உடனடியாக தனியார் ஆம்புலன்சில் சேமலையப்பனை காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழக்கப்போகும் தருவாயிலும் வேனை சாதுர்யமாக சாலையோரம் நிறுத்தியதால் 20 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

ரூ.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்த நிலையிலும் தன் பொறுப்பிலிருந்த பள்ளிக் குழந்தைகளின் விலைமதிப்பில்லாத உயிர்களை காப்பாற்றி பின்னர் தனது இன்னுயிரை இழந்த சேமலையப்பன் கடமை உணர்ச்சியையும் தியாக உள்ளத்தையும் நாம் தலைவணங்கி போற்றுகிறோம். காலம் சென்ற பள்ளி வாகன ஓட்டுநர் சேமலையப்பன் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்த சேமலையப்பன் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’’ என கூறி உள்ளார்.

The post பள்ளிக் குழந்தைகள் உயிர் காத்த ஓட்டுநர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதி: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,Samalaiappan ,KBC ,Tiruppur district ,Velakho ,Vellakoville ,CM K. Stalin ,Dinakaran ,
× RELATED கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 5 இளைஞர்கள்...