- 33வது ஒலிம்பிக் போட்டிகள்
- பாரிஸ்
- இந்தியா
- ஒலிம்பிக் விளையாட்டுகள்
- பிரஞ்சு
- கோடைகால ஒலிம்பிக் விளையாட்டுகள்
- தின மலர்
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி வண்ணமயமான தொடக்க விழா, கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கையுடன் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கோடை கால ஒலிம்பிக் போட்டியின் 33வது தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று தொடங்குகிறது. இந்தியா உட்பட 206 நாடுகளில் இருந்து 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டித் தொடரில் கால்பந்து, ஹாக்கி, தடளன் என 32 வகை விளையாட்டுகள் நடைபெற உள்ளன.
இந்திய நேரப்படி இன்று இரவு 11.00க்கு தொடங்கி நடைபெறும் தொடக்க விழாவில் கிரீசின் பண்டைய நகரமான ஒலிம்பியாவில் இருந்து உலகம் முழுவதும் பயணித்து கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் சுடர், ஜார்டின் டூ ட்ரோகேடேரோ அரங்கில் ஏற்றப்படும். தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும், போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பும் சென் ஆற்றங்கரையோரம் நடைபெறும்.
மொத்தம் 16 நாட்கள் நடைபெறும் இந்தப்போட்டியில் பங்கேற்க உலகின் முழுவதிலும் இருந்து வீரர், வீராங்கனைகள், ரசிகர்கள் என ஏராளமானவர்கள் கலை நகரமான பாரிசில் குவிந்துள்ளனர்.
அதனால் பாரிஸ் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதுவரை நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஒன்றில் கூட இந்தியா இரட்டை இலக்கத்தில் பதக்கங்களை வென்றதில்லை. பல ஒலிம்பிக் போட்டிகளில் ஒரு பதக்கம் மட்டுமே வென்ற சம்பவங்களும், சில போட்டிகளில் ஒரு பதக்கம் கூட இல்லாமல் நாடு திரும்பிய சோகங்களும் அரங்கேறி உள்ளன.
அதிகபட்சமாக 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 7 பதக்கங்களை வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. அது மட்டுமல்ல பதக்கப்பட்டியலிலும் 1900ம் ஆண்டு அதிகபட்சமாக 17வது இடத்தை இந்தியா பிடித்தது. கடைசியாக நடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 48வது இடத்தை பிடித்தது. அதனால் இந்த முறை இந்தியாவின் பதக்க வேட்டை இரட்டை இலக்கத்தை தொட வேண்டும் என்பதே இலக்காகவும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
தொடக்க விழா ஹைலைட்ஸ்
* ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக, தொடக்க விழாவில் பங்கேற்கும் நாடுகளின் வீரர், வீராங்கனைகள் அணிவகுப்பு அரங்கத்தில் இல்லாமல், பாரிஸ் நகரின் புகழ் பெற்ற ‘சென்’ ஆற்றில் நடைபெற உள்ளது.
* சுமார் 10,000 வீரர், வீராங்கனைகள் 100க்கும் அதிகமான படகுகளில் ஏறி ‘சென்’ ஆற்றில் பாரிஸ் நகரின் முக்கிய இடங்கள் வழியாக பயணம் செய்ய உள்ளனர். இந்த ‘மிதக்கும் அணிவகுப்பு’ ஆஸ்டர்லிட்ஸ் பாலத்தில் தொடங்கி ட்ரோகடெரோ பகுதியில் நிறைவடைய உள்ளது. இங்குதான் ஒலிம்பிக் பாரம்பரிய முறையிலான தொடக்கவிழா நிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கை நடக்க உள்ளது.
* இந்திய நேரப்படி இரவு 11.00 மணிக்கு தொடங்கும் தொடக்க விழா மூன்று மணி நேரத்துக்கு பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்த காத்திருக்கிறது. இந்த விழாவுக்கான கலை இயக்குனராக புகழ் பெற்ற பிரெஞ்ச் நாடக இயக்குனர் மற்றும் நடிகரான தாமஸ் ஜாலி பொறுப்பேற்றுள்ளார்.
* இந்திய குழுவினர் சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), பி.வி.சிந்து (பேட்மின்டன்) தலைமையில் அணிவகுக்க உள்ளனர். இந்த விளையாட்டுகளை சேர்ந்த நட்சத்திரங்களுக்கு முதல் முறையாக இந்த கவுரவம் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* இந்திய வீரர்கள் பைஜாமா குர்தா அணிந்தும், வீராங்கனைகள் தேசியக் கொடியின் நிறங்களை பிரதிபலிக்கும் புடவை அணிந்தும் அணிவகுப்பில் பங்கேற்கின்றனர். ஆடைகளை தருண் தஹிலியானி வடிவமைத்துள்ளார்.
முதல் பதக்கம்
ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில்தான் 1900ல் (பாரிஸ்) முதல் முறையாக இந்தியா… அதுவும் ‘பிரிட்டிஷ் இந்தியா’வாக களம் கண்டது. அதில் பங்கேற்ற கல்கத்தாவில் பிறந்த ஆங்கிலேயர் நார்மன் கில்பர்ட் பிரிட்சார்ட் 2 பதக்கங்களை வென்று இந்தியாவை பதக்கப்பட்டியலில் இடம்பெற வைத்தார். அவர் 200 மீ. ஓட்டம், 200 மீ. தடை தாண்டும் ஓட்டத்தில் அவர் வெள்ளிப் பதக்கங்களை முத்தமிட்டார். பின்னாளில் ‘ஹாலிவுட்’ நட்சத்திரமாகவும் மிளிர்ந்தவர், தனது கடைசி காலம் வரை அமெரிக்காவில் வசித்தார்.
இதுவரை இந்தியா
* 1900 முதல் 2020 வரை இந்தியா 10 தங்கம், 9 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தம் 35 பதக்கங்களை வென்றுள்ளது. நார்மன் 1900ல் களமிறங்கிய பிறகு, 1904 – 1912 வரை நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பங்கேற்கவில்லை. 1916ல் முதல் உலகப்போர் காரணமாக ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை.
* 1900க்கு பிறகு 1924 வரை பதக்கம் வென்றதில்லை என்ற சோக வரலாற்றை ஹாக்கி அணி மாற்றி எழுதியது.1928-1980 வரை நடந்த 12 ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என இதுவரை மொத்தம் 12 பதக்கங்களை அள்ளியுள்ளது. இந்தியா இதுவரை வென்ற 10 தங்கப் பதக்கங்களில் 8 பதக்கங்கள் ஆண்கள் ஹாக்கியிலும், 2 பதக்கங்கள் தனிநபர் விளையாட்டுகளிலும் வென்றவை.
* 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் 10 மீ. ஏர் ரைபிள் துப்பாக்கிசுடுதலில் இந்தியாவின் அபிநவ் பிந்த்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார்.
* 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆண்கள் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கத்தை முத்தமிட்டு தேசத்துக்கு பெருமை தேடித் தந்தார்.
* டென்னிஸ்
தடகளத்தில் நார்மன், மல்யுத்தத்தில் ஜாதவ் ஆகியோருக்கு பிறகு தனிநபர் பதக்கம் 1996, அட்லாண்டா ஒலிம்பிக்கில் வசப்பட்டது. அந்த வெண்கலப் பதக்கத்தை வென்றவர் லியாண்டர் பயஸ். டென்னிசில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே பதக்கம் இதுதான். லியாயண்டர் பயஸின் தந்தை வேஸ் பயஸ் 1972, மியூனிக் ஒலிம்பிக் ஹாக்கியில் வெண்கலம் னெ்றார். ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய தந்தை, மகன் என்ற பெருமையை இருவரும் பெற்றுள்ளனர்.
* பளுதூக்குதல்
இந்தியாவுக்காக பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமைக்குரியவர் கர்ணம் மல்லேஸ்வரி. 2000 சிட்னி ஒலிம்பிக் 69 கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். அடுத்து சாய்கோம் மீராபாய் சானு டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று அசத்தினார்.
நம்பிக்கை நட்சத்திரங்கள்…
* இந்தியாவில் இருந்து இம்முறை 112 வீரர், வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கின்றனர். கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் 124 பேரும், ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் 117 பேரும் பங்கேற்றனர். அவற்றை விட இந்த எண்ணிக்கை குறைவு என்றாலும் ஒலிம்பிக் இந்திய பங்கேற்பு எண்ணிக்கையில் இது 3வது இடத்தை பிடித்துள்ளது.
* பாரிஸ் ஒலிம்பிக்கில் மொத்தம் 32 வகை போட்டிகள் நடக்க உள்ள நிலையில், இந்தியா 16 வகையான விளையாட்டுகளில் மட்டுமே பங்கேற்கிறது.
* இந்திய குழுவில் இடம் பெற்றுள்ள 112 பேரில் 29 பேர் தடகளத்தில் களமிறங்க உள்ளனர். ஆண்கள் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா நிச்சயம் தங்கம் வெல்வார் என்ற உறுதியான நம்பிக்கை உள்ளது.
* தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய அணிக்கு அசந்தா சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), பி.வி.சிந்து (பேட்மின்டன்) ஆகியோர் தேசியக் கொடியை ஏந்தி தலைமையேற்க உள்ளனர்.
* போட்டி வாரியாக பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை: வில்வித்தை 6 (3 பெண்கள்), தடகளம் 29 (11பெண்கள்), பேட்மின்டன் 7 (3), குத்துச்சண்டை6 (பெண்கள் 4), குதிரையேற்றம் 1 (0), ஹாக்கி 16 (0), கோல்ப் 4 (2), ஜூடோ1 (1), துடுப்பு படகு 1 (0), படகு போட்டி 2 (1), துப்பாக்கிசுடுதல் 21 (11), நீச்சல் 2 (1), டேபிள் டென்னிஸ் 6 (3), டென்னிஸ் 3 (0), பளுதூக்குதல் 1 (1), மல்யுத்தம் 6 (5பெண்கள்).
(தட)களத்தில் தமிழர்கள்
* ஒலிம்பிக் தடகளத்தில் களமிறங்கும் 29 இந்தியர்களில் 6 பேர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆண்களுக்கான 4X400 தொடர் ஓட்டத்தில் மதுரையைச் சேர்ந்த சந்தோஷ் குமார் தமிழரசன் (27), ராஜேஷ் ரமேஷ்(25, திருச்சி) ஆகியோரும் மகளிர் 4X400 தொடர் ஓட்டத்தில் திருச்சியை சேர்ந்த சுபா வெங்கடேசன் (24), வித்யா ராமராஜ் (26, கோவை) ஆகியோர் தமிழர்கள்.
* ஆண்கள் நீளம் தாண்டுதலில் தூத்துக்குடியை சேர்ந்த ஜெஸ்வின் ஆல்ட்ரின் (22), ஆண்கள் மும்முறை தாண்டுதலில் பிரவீன் சித்ரவேல் (23, தஞ்சாவூர்) பதக்க வேட்டையில் இறங்குகின்றனர். இவர்களில் சுபா வெங்கடேசன் ஏற்கனவே டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றவர். கடந்த ஆண்டு சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் சுபா, வித்யா, ராஜேஷ் ஆகியோர் பதக்கங்களை அள்ளியுள்ளனர்.
* படகோட்டும் போட்டிகளில் சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன் (26), விஷ்ணு சரவணன் (25, வேலூர்) ஆகியோர் பதக்கங்களை வெல்ல காத்திருக்கின்றனர்.
* துப்பாக்கிசுடுதல் டிராப் பிரிவில் சென்னையின் பிரித்விராஜ் தொண்டைமான் (37), 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் இளவேனில் வாளறிவன் (24, கடலூர்) ஆகியோர் பதக்கத்தை குறி வைத்துள்ளனர்.
* டென்னிஸ் போட்டியில் கோவையின் ஸ்ரீராம் பாலாஜி நாரயணசாமி (34), ஆண்கள் இரட்டையர் பிரிவில் அனுபவ வீரர் ரோகன் போபண்ணா உடன் இணைந்து விளையாட உள்ளார்.
* டேபிள் டென்னிசில் மூத்த வீரர் சென்னையின் அசந்தா சரத் கமல் (42), 2004 முதல் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற அனுபவம் மிக்கவர்.
* பேட்மின்டன்
பேட்மின்டனில் முதல் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையை சாய்னா நெஹ்வால் பெற்றுள்ளார். 2012, லண்டன் ஒலிம்பிக்கில் அரையிறுதி வரை முன்னேறி வெண்கலம் வென்றார். 2016 ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெள்ளி வென்று சாதனை படைத்தார். 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் அவர் வெண்கலம் வென்று அசத்தினார்.
* குத்துச் சண்டை
2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் விஜேந்தர் சிங் வெண்கலம் வென்று பாக்சிங் பதக்க எண்ணிக்கையை தொடங்கி வைத்தார். உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை 6 முறை வென்ற மேரி கோம் 2012 ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். 2020 ஒலிம்பிக்கில் லவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலப் பதக்கம் பெற்றார். இப்போது பாரிஸ் ஒலிம்பிக்சிலும் பங்கேற்க இருக்கிறார் லவ்லினா.
The post 33 வது ஒலிம்பிக் போட்டி: பாரிசில் இன்று கோலாகல தொடக்கம்; பதக்க வேட்டையில் இரட்டை இலக்கமே இந்தியாவின் இலக்கு appeared first on Dinakaran.