×

உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வாளர்கள் பங்கேற்பு பழநியில் ஆக. 24, 25ல் முத்தமிழ் முருகன் மாநாடு: அமைச்சர்கள் ஆய்வு, ஏற்பாடுகளை தீவிரப்படுத்த அறிவுரை

பழநி: ஆக. 24, 25ம் தேதி நடைபெற உள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக பழநியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, அர.சக்கரபாணி பங்கேற்றனர். இடத்தையும் ஆய்வு செய்தனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் பிப். 27ல் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை செயல்திட்ட கூட்டத்தில், திண்டுக்கல் மாவட்டம், பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, வரும் ஆக. 24, 25 தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் நடத்தப்படவுள்ளது.

8 ஆயிரம் பக்தர்கள் அமர்ந்து பார்வையிடும் வகையில் பந்தல் அமைக்கப்படவுள்ளது. மாநாடு காலை 8.30 மணி முதல் பகல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையும் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடத்தப்படும். மாநாட்டில் 5 ஆய்வரங்கங்கள் நடத்தப்படவுள்ளன. 1,300 பேர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கின்றனர். இதில் வெளிநாட்டினர் 39 பேர் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கின்றனர். 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர், 4 நீதியரசர்கள், 15 ஆதீனங்கள், 30 ஆன்மிக சொற்பொழிவாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். விழா மலர், ஆய்வு கட்டுரை மலர் வெளியிடப்படவுள்ளன.

இதற்காக, மாநாடு நடைபெற உள்ள மைதான அரங்கம், உணவுக்கூடம், வாகனங்கள் நிறுத்துமிடம், ஆய்வரங்கம், அறுபடை வீடுகளின் அரங்கங்கள், புகைப்பட கண்காட்சி, 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சி அரங்கம் அமைக்கப்படும் இடங்களை அமைச்சர்கள் அர.சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு நேரில் பார்வையிட்டனர். பின்னர், பழநியில் உள்ள பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரி கூட்டரங்கில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக அனைத்து துறை அரசு அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது.

அமைச்சர்கள் அர.சக்கரபாணி, பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தனர். சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலாய சுவாமிகள், கலெக்டர் பூங்கொடி, பழநி எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார், எஸ்பி பிரதீப், அறநிலையத்துறை கூடுதல் ஆணையர்கள் சுகுமார் ஹரிப்ரியா முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில், மாநாட்டின் ஏற்பாடுகளை விரைவாக செய்யவும், பக்தர்களுக்கு தேவையாக அடிப்படை வசதிகளை செய்யவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டார். மாநாடு தொடர்பான கண்காட்சி, மாநாடு முடிந்த பின்னர் ஒரு வாரம் பக்தர்கள் பார்வைக்காக வைக்கப்படும்.

The post உள்நாட்டு, வெளிநாட்டு ஆய்வாளர்கள் பங்கேற்பு பழநியில் ஆக. 24, 25ல் முத்தமிழ் முருகன் மாநாடு: அமைச்சர்கள் ஆய்வு, ஏற்பாடுகளை தீவிரப்படுத்த அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Palani ,Muthamil Murugan Conference ,PK Shekharbabu ,A. Chakrapani ,International Muthamil Murugan Conference ,Chennai ,Chief Minister ,M. K. Stalin ,Palaniil ,Muthamij Murugan ,Dinakaran ,
× RELATED பழனி முத்தமிழ் முருகன் மாநாட்டு...