திருத்தணி, ஜூலை 26: திருத்தணியில் ஏற்பட்டு வந்த கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக ₹52 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புறவழிச் சாலையை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று திறந்து வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹52 கோடி மதிப்பீட்டில் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பட்டாபிராமாபுரம் முதல் அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை கார்த்திகேயபுரம் வரை 3.2 கி.மீ. தூரம் வரை சாலை அமைக்கப்பட்டது.
புறவழிச்சாலைக்கு இடையில் நந்தி ஆறு மற்றும் ரயில் தண்டவாளத்தின் இடையில் உயர்மட்ட மேம்பாலங்கள் நிறைவு பெற்றது. மேலும் வாகன விபத்து தடுக்கும் வகையில் சாலையில் ஒளிரும் விளக்குகள், எச்சரிக்கை பலகை, பெயர் பலகை வைக்கப்பட்டு சாலையோரத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருத்தணியில் ஆடி கிருத்திகை விழாவுக்கு முன்பாக பக்தர்கள் வசதிக்காக புதிய புறவழிச் சாலையை திறக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் புறவழிச் சாலை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் வகித்தார். நெடுஞ்சாலைத்துறை திருத்தணி உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன் முன்னிலை வகித்தார். திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புறவழிச் சாலையை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசுகையில், திருத்தணி பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்ற பொதுமக்கள் பயன்பாட்டிற்கு புறவழிச்சாலையை திறந்துவைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இச்சாலை பயன்பாட்டுக்கு வருவது மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பதி, சித்தூர் ஆகிய பகுதிகளுக்கு சென்று வரும் பயணிகள், பள்ளி கல்லூரி மாணவர்கள் பயனடைவார்கள். இதனால் திருத்தணியில் போக்குவரத்து பாதிப்பு வெகுவாக குறையும். இவ்வாறு அவர் கூறினார். தொடக்க விழா நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பூபதி, திருத்தணி நகர மன்ற துணைத் தலைவர் சாமிராஜ், நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளர் ஞான அருள்ராஜ், திருக்கோவில் அறங்காவலர்கள் மோகனன், உஷா ரவி, நாகன், நகர திமுக செயலாளர் வினோத்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஆர்த்தி ரவி, சி.ஜெ.சீனிவாசன், கிருஷ்ணன், சண்முகம், பழனி, மாவட்ட பொருளாளர் மிதுன் சக்கரவர்த்தி, நெசவாளரணி மாவட்டத் தலைவர் சி.எம்.ரவி, பேரூர் செயலாளர் ஜோதி குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திருத்தணியில் ₹52 கோடி மதிப்பீட்டில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அமைக்கப்பட்ட புறவழிச்சாலை: அமைச்சர் காந்தி திறந்து வைத்தார் appeared first on Dinakaran.