×

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கம் மண்டலம் தியாகராய நகர், சிஐடி நகர், ஸ்ரீராம் காலனி பகுதியில் நடந்த மழைக்கால நோய்களுக்கான முன்னெச்சரிக்கை சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நோய் தடுப்பிற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பொதுவாகவே அதிகரிக்க தொடங்கியுள்ளது, அதனை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நேற்று முன்தினம் வரை 6,565 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பன்றிக் காய்சலினால் 390 பேரும், புளூ காய்ச்சலினால் 56 பேரும், எலிக் காய்ச்சலினால் 1,481 பேரும், உன்னி காய்ச்சலினால் 2,639 பேரும், வெறி நாய்கடியினால் 22 பேரும், மஞ்சள் காமாலையினால் 1750 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பன்றிக் காய்ச்சல், புளூ காய்ச்சல், எலிக் காய்ச்சல், உன்னி காய்ச்சல், மஞ்சள் காமாலையினால் உயிரிழப்புகள் இல்லை, டெங்கு காய்ச்சலினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். வரும் மாதங்களை பொறுத்தவரை வடகிழக்கு பருவமழையினை எதிர்நோக்கியுள்ள மாதங்களாகும், எனவே நோய் பாதிப்புகளை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, மக்களுக்கு தேவையான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 476 நடமாடும் மருத்துவ குழுக்கள் தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி கொண்டிருக்கின்றனர். அதேபோல் 805 பள்ளி மருத்துவ குழுக்கள் இயங்கி வருகின்றன.

22,384 தினசரி தற்காலிக பணியாளர்கள் புகை மருந்து அடிப்பது, கொசு மருந்து தெளிப்பது போன்ற பல்வேறு கொசுப் புழுக்களை தடுக்கும் பணியினை செய்து வருகிறார்கள். காய்ச்சல் பாதிப்புகள் யாருக்கேனும் ஏற்பட்டால் தன்னிச்சையாக மருத்துவர்களின் பரிந்துரைகள் இல்லாமல் மருந்து மாத்திரைகளை உட்கொள்ள வேண்டாம். யாருக்கேனும் அவசர உதவி தேவைப்பட்டால் 104, 108 போன்ற அவசர எண் உதவிகளை நாட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* நிபா வைரஸ் பாதிப்பு இல்லை
கடந்த வாரம் கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்புகளினால் 2 பேர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லைகளை பாதுகாக்கும் பணியில் பொது சுகாதாரத் துறை தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது. கேரள மாநிலத்தில் இருந்து வரும் போக்குவரத்து வாகனங்கள், பேருந்துகள், கார்கள் போன்ற அனைத்து வாகனங்களையும், பயணிகளை பரிசோதிக்கும் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக நடுங்கனி, சோழடி, தளுர், நம்பியார்குன்னு, பட்டாவயல் போன்ற 5 இடங்களில் நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிபா வைரஸ் பாதிப்புகள் தமிழ்நாட்டில் யாருக்கும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

The post சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : dengue ,Chennai, Coimbatore ,Madurai ,Minister ,M. Subramanian ,CHENNAI ,Coimbatore ,Thiagaraya Nagar ,CIT Nagar ,Sriram Colony ,Chennai Kodambakkam Zone ,Chennai, ,Dinakaran ,
× RELATED டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க வேண்டும்: ஒபிஎஸ் வலியுறுத்தல்