×

சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் உரிமை குழு நோட்டீசை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து வழக்கு: திமுக எம்.எல்.ஏக்கள் வாதிட ஐகோர்ட் அனுமதி

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில், உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்த உத்தரவை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதங்களை முன் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் 2017ம் ஆண்டு சட்டமன்றத்துக்குள் குட்கா பொருட்களை எடுத்துச் சென்றதாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், தற்போதைய முதல்வருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக அப்போதைய உரிமைக்குழு, உரிமை மீறல் நோட்டீசை அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.

இது தொடர்பான 2வது நோட்டீசும் ரத்து செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து முந்தைய ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்விடம், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்.ஏ.க்கள் தரப்பிடம் விளக்கம் கேட்கப்படவில்லை என்று சுட்டிக் காட்டப்பட்டதை அடுத்து, அவர்கள் தரப்புக்கு நோட்டீஸ் பிறப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுராஜ், எம்.எல்.ஏ. கு.க.செல்வம் காலமாகிவிட்டதால் அவரைத்தவிர, மற்ற எதிர்மனுதாரர்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் வாதங்களை முன்வைக்க அனுமதி வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஜூலை 29க்கு தள்ளிவைத்தனர்.

The post சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் உரிமை குழு நோட்டீசை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து வழக்கு: திமுக எம்.எல்.ஏக்கள் வாதிட ஐகோர்ட் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Gutka ,Legislative Assembly ,DMK ,Chennai ,AIADMK ,Chief Minister ,M. K. Stalin ,Rights Committee ,DMK MLAs ,Dinakaran ,
× RELATED லாலாபேட்டையில் குட்கா விற்ற ஒருவர் மீது வழக்கு