சேலம்: அதிமுகவில் ஓபிஎஸ்சை இணைக்க எடப்பாடிக்கு மாஜி அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் மீண்டும், மீண்டும் அழுத்தம் தந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் அதிமுக இரண்டாக உடைந்தது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பிறகு பொதுக்குழுவை கூட்டிய அவர், ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கினார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், பாஜ கூட்டணியில் இணைந்து சுயேச்சையாக போட்டியிட்டார். எடப்பாடி பழனிசாமியோ, பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறி தனித்து போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக உரிமை மீட்பு குழு என தொடங்கி அதனை நடத்தி வருகிறார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கையும் விடுத்து வருகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் சேர்க்கப்பட மாட்டார்கள் என உறுதிபட கூறி வருகிறார். இதற்கிடையே, பாஜ மேலிடம் கொடுத்த அழுத்தத்தின் பேரில் அதிமுக மாஜி அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்ளிட்ட 6 பேர், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் நேரில் வலியுறுத்தினர்.
அப்போது ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் ஓபிஎஸ்சை கட்சிக்குள் இணைப்பது குறித்து முடிவை அறிவிக்க வேண்டும் என்று பாஜ மேலிடம் கெடு விதித்து உள்ளதாக எடப்பாடியிடம் தெரிவித்தனர். ஆனால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை சேர்க்க மாட்டேன் என்று உறுதியாக உள்ளார். இருப்பினும், ஓபிஎஸ்சை அதிமுகவில் மீண்டும் சேர்க்க மாஜி அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. மாவட்ட வாரியாக எடப்பாடி நடத்தி வரும் ஆலோசனை கூட்டத்தில் தென் மாவட்டம் உட்பட பல மாவட்ட நிர்வாகிகள் ஓபிஎஸ்சை சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர்.
எடப்பாடி தொடர்ந்து ஓபிஎஸ்சை சேர்க்க மாட்டேன் என்று அடம் பிடித்தால் கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு மாஜி அமைச்சர் தலைமையில் கட்சியை கொண்டு சென்று ஓபிஎஸ்சை இணைக்கலாம் என்று மூத்த தலைவர்கள் யோசனை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் மீண்டும் சேர்க்கப்பட உள்ளதாக புதுத்தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்களை தனித்தனியாக அழைத்து அதிமுகவில் இணைவது குறித்து கருத்துக்களை கேட்டுள்ளார். அதற்கு சில மாவட்ட செயலாளர்கள் மீண்டும் நாம் அதிமுகவில் இணைந்தால் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கி வைத்து விடுவார். என்ன நடந்தாலும் தனியாகவே இருக்கலாம் என்றும் சிலர் இணையலாம் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய நிர்வாகிகள் கூறுகையில், `எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பொறுப்பேற்ற பிறகு அதிமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதேநிலை நீடித்தால் கட்சி காணாமல் போய்விடும் என்ற கருத்து நிர்வாகிகளிடையே ஏற்பட்டுள்ளது. எனவே அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நிர்வாகிகள் விரும்புகின்றனர். எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருப்பவர்களும், ஒன்றாக இணைய வேண்டும் என வலியுறுத்தி உள்ளதால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகளை சேர்க்க எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்துள்ளார். அப்படியே சேர்த்தால் தேவையில்லாத பிரச்னை, குழப்பம், முக்கிய பொறுப்புகளை கேட்பார்கள் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஆனால், ஓ.பன்னீர்செல்வம் பெரியதாக எந்த பொறுப்பையும் எதிர்பார்க்க வில்லை. இவ்வாறு ஒன்றிணையும்போது தொண்டர்களிடையே எழுச்சி ஏற்படும். வரும் உள்ளாட்சி, சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கு வாய்ப்பாகும். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகளை மட்டுமே சேர்ப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ள நிலையில், சசிகலாவை அதிமுகவில் சேர்க்க எந்த வற்புறுத்தலும் இல்லை. டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கி விட்டார். அவரை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்பது போன்ற கருத்துகள் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மேல்மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கூடிய விரையில் அனைவரும் ஒன்றாக இணைவோம்’ என்றனர்.
The post திரைமறைவில் நடக்கும் ரகசிய பேச்சுவார்த்தை அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்சை இணைக்க எடப்பாடிக்கு நெருக்கடி: மாஜி அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் அழுத்தம் appeared first on Dinakaran.