மதுரை: ‘நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு விசாரணைக்கு தேசிய தேர்வு முகமை ஒத்துழைக்கவில்லை. நீட் தேர்வில் தற்போது வரை முறைகேடுகள் நடக்கிறது’ என ஐகோர்ட் கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 5.5.2019ம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் சென்னையை சேர்ந்த மாணவர், ஆள் மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்துள்ளார். இந்த மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, நீட் தேர்வு எழுதிய மாணவர்கள், அவர்களது பெற்றோர், இடைத்தரகர்கள் என அனைவரையும் கைது செய்தனர். மேலும், சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி சென்னையை சேர்ந்த தருண்மோகன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, ‘‘நீட் தேர்வு நடந்து 5 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், வழக்கு விசாரணையில் இதுவரை எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. என்ன ஆவணங்களை கைப்பற்றப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என சரமாரியாக கேள்வி எழுப்பினார். சிபிசிஐடி தரப்பில், ‘‘ஓஎம்ஆர் நகல், வருகை பதிவேடு ஆகியவற்றை தேசியதேர்வு முகமையான என்டிஏ விடம் கேட்டோம். ஓஎம்ஆர் சீட் மட்டுமே வழங்கியுள்ளனர். வருகை பதிவேடு தரவில்லை’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதி, ‘‘ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிய ஆதார் கார்டு குறித்த தகவல்களை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றியுள்ளார்களா’’ என்றார்.
சிபிசிஐடி தரப்பில், ‘‘தேர்வு எழுதியவர்களின் ஆதார் கார்டு புகைப்படம், கைரேகைகளை பெற்றுவிட்டோம். ஆனால், தேர்வு எழுத சென்றவர்களின் முகவரியையே கொடுத்து தேர்வில் ஆள் மாறாட்டம் செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை முறைகேடு செய்த மாணவர்கள், அவர்களது பெற்றோர்கள், இடைத்தரகர்களை கைது செய்துள்ளோம். ஆள் மாறாட்டம் செய்த நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களது முகவரி கிடைக்கவில்லை. தேசிய தேர்வு முகமையிடம் அனைத்து விவரங்களையும் கேட்டுள்ளோம். போதுமான ஒத்துழைப்பு இல்லை.
ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டவர்களை பிடித்தால் மட்டுமே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய முடியும்’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதி, நீட் தேர்வில் தற்போது வரை முறைகேடு நடப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை விரைவில் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால் மட்டுமே வழக்கின் முழு முறைகேடுகள் தெரிய வரும். எனவே, இந்த வழக்கின் விசாரணை ஆக.2க்கு தள்ளி வைக்கப்படுகிறது என உத்தரவிட்டுள்ளார்.
The post விசாரணைக்கு தேசிய தேர்வு முகமை ஒத்துழைக்கவில்லை நீட் தேர்வில் தற்போதுவரை முறைகேடுகள் நடக்கிறது: ஆள்மாறாட்ட வழக்கில் ஐகோர்ட் கிளை கண்டனம் appeared first on Dinakaran.