×

தொகுப்பூதிய பணியாளருக்கு ரூ.6,000 சம்பளமா? தினசரி ரூ.600 வீதம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கலாமே: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் யோசனை

மதுரை: அரசு மாதிரி பள்ளிகளில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுவது வேதனையளிக்கிறது. தினசரி ரூ.600 என கணக்கிட்டு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கலாமே என்று ஐகோர்ட் கிளை நீதிபதிகள் யோசனை தெரிவித்துள்ளனர். மதுரை, இமயம் நகரை சேர்ந்த கிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மாதிரி பள்ளியில் தொகுப்பூதிய அடிப்படையில் கடந்த 2011 முதல் பணியாற்றி வருகிறேன்.

எனக்கு சம்பளமாக மாதம் ரூ.6 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த சம்பளத்தில் என்னால் குடும்பத்தை நடத்த முடியவில்லை. என் குடும்பமே வறுமையில் வாடுவதால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குமாறும், உரிய ஊதிய உயர்வு வழங்குமாறும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர், ‘‘மனுதாரர் தொகுப்பூதிய அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ளார்.

அவர் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் கேட்பது மனுதாரருக்கு பொருந்தாது. அதே நேரம், மனுதாரர் தனது பணியை தொடர விரும்பவில்லை. எனவே இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. ஆனால், அரசு மாதிரி பள்ளிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது. இது குறைந்தபட்ச கூலி வழங்கும் சட்டத்தில் கூட வராது.

தினசரி வேலைக்கு ரூ.200 என கணக்கிட்டு மாதம் ரூ.6 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுவது மிகவும் வேதனையளிக்கிறது. தினசரி ரூ.600 வீதம் சம்பளம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கலாமே? பழைய சம்பளம் வழங்கும் ஆணையை ரத்து செய்து, திருத்தம் செய்த புதிய அரசாணை தொடர்பான அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும’’ என உத்தரவிட்டனர்.

The post தொகுப்பூதிய பணியாளருக்கு ரூ.6,000 சம்பளமா? தினசரி ரூ.600 வீதம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கலாமே: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் யோசனை appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,iCourt branch ,Imam Nagar ,Dinakaran ,
× RELATED கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக பதிவு...