×
Saravana Stores

ஒன்றிய பட்ஜெட்; காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சியில் நிகழ்த்தியதை ஆயிரம் அண்ணாமலைகள் ஒன்று சேர்ந்தாலும் மூடி மறைத்துவிட முடியாது: செல்வப்பெருந்தகை காட்டம்

சென்னை: காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சியில் நிகழ்த்தியதை ஆயிரம் அண்ணாமலைகள் ஒன்று சேர்ந்தாலும் மூடி மறைத்துவிட முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு ரூபாய் 1 லட்சம் கோடி திட்டங்களுக்கு நிதியுதவி அளித்திருப்பதாக நேற்று எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில் ஆதாரமற்ற கருத்தை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியிருக்கிறார். அதோடு நிற்காமல் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் அன்றைய காங்கிரஸ், தி.மு.க. ஒன்றிய கூட்டணி அரசு ரூபாய் 8 ஆயிரத்து 54 கோடி அளவிற்கு நலத்திட்டங்கள் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கியதாக கோணிப் புளுகன் கோயபல்சை மிஞ்சுகிற வகையில் பிரச்சாரத்தின் மூலம் பொய் மூட்டையை அவிழ்த்து விட்டிருக்கிறார். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிப்பதோடு, கடுமையாக மறுக்க விரும்புகிறேன்.

அன்னை சோனியா காந்தி வழிகாட்டுதலோடு, மன்மோகன்சிங் தலைமையில் 2004 முதல் 2014 வரை நடைபெற்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலம் இந்தியாவின் பொற்காலம் என்று பொருளாதார வல்லுநர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அந்த 10 ஆண்டு ஆட்சிக் காலத்தில் தான் தொடர்ந்து மூன்றாண்டுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் முறையே 9.5, 9.7, 9.3 என வளர்ச்சி கண்டதைப் போல 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் அந்த வளர்ச்சியின் அருகில் நெருங்க முடியவில்லை. அதற்கு மாறாக 6 சதவிகிதத்திற்கும், 7 சதவிகிதத்திற்கும் போராடிக் கொண்டிருக்கிறது. கடந்த 67 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் பெற்ற மொத்த கடன் 55 லட்சம் கோடி ரூபாய். ஆனால், 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி பெற்ற கடன் 100 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சென்று விட்டது.

இத்தகைய அவலநிலையில் ஆட்சி செய்து கொண்டிருப்பதை மூடிமறைக்க முயலும் அண்ணாமலைக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு வளம் சேர்த்த திட்டங்கள் குறித்து பட்டியலிட விரும்புகிறேன்.கிராமப்புற மக்களின் வறுமையை போக்குவதற்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் அறிமுகம், 6 முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி பெறுகிற உரிமை, நாட்டிலுள்ள அன்றைய 120 கோடி மக்களில் 81 கோடி பேருக்கு உணவு தானியங்கள் வழங்கும் உணவு பாதுகாப்புச் சட்டம், அரிசி, சர்க்கரைக்கு மானியம், விவசாயிகளுக்கு கடன் என பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி 10 ஆண்டு கால ஆட்சியில் 14 கோடி மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டு சாதனை படைத்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி.

2004 முதல் 2014 வரை நடந்த ஒன்றிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தமிழகத்திற்கு கிடைத்த நிதி ஒதுக்கீடும், வளர்ச்சித் திட்டங்களைப் போல் கடந்த 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் கடுகளவு கூட கிடைத்ததில்லை. சென்னைக்கு அருகில் ஒரகடத்தில் ரூபாய் 470 கோடி முதலீட்டில் ஒன்றிய அரசின் தேசிய மோட்டார் வாகன சோதனை மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட வளர்ச்சிக் கட்டமைப்பு மையம் நவம்பர் 2006 இல் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கப்பட்டன. ஆகஸ்ட் 2007 இல் தமிழ் செம்மொழி திட்டம் நிறைவேற்றப்பட்டு செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் நிதியுதவியோடு சென்னையில் தொடங்கப்பட்டது.

தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம் தாம்பரத்தில் நிறுவப்பட்டுள்ளது. சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே மண்டலம் அமைக்கப்பட்டது. சேலம் உருட்டாலையை சர்வதேச அளவுக்கு உயர்த்தி ரூபாய் 1553 கோடி செலவில் புதிய குளிர் உருட்டாலை அமைக்கப்பட்டது. அனைத்து துறைகளையும் விட நெடுஞ்சாலைத்துறையில் மெகா புரட்சி நடந்தது. அன்று தமிழகத்தில் உள்ள 4676 கி.மீ. நீள தேசிய நெடுஞ்சாலைகளில் 3226 கி.மீ. நீள சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மேம்படுத்தப்பட்டன. 650 கி.மீ. நீள மாநில நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டன.

இவ்வகையில் தமிழ்நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூபாய் 54 ஆயிரத்து 323 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 21,000 கோடி துறைமுகங்களின் மேம்பாட்டிற்கும், ரூபாய் 33,000 கோடி சாலை மேம்பாட்டிற்கும் செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்கள், ‘இது நம்ம ஊர் தானா ? இல்லை, வெளிநாட்டில் பயணம் செய்கிறோமா ?” என்று வியக்கும் வண்ணம் சாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
சென்னை கத்திபாரா சந்திப்பு, பாடி சந்திப்பு, கோயம்பேடு சந்திப்பு ஆகிய இடங்களில் ரூபாய் 490 கோடி செலவில் மிக பிரம்மாண்டமான மேம்பாலங்களை கட்டும் பணிகள் ஆட்சியமைந்த மறு ஆண்டே 2005 இல் தொடங்கப்பட்டு மேம்பாலங்கள் திறக்கப்பட்டன.

சென்னை விமான நிலையத்தின் எதிரே திரிசூலத்தில் மேம்பாலமும், ரூபாய் 1650 கோடி மதிப்பீட்டில் சென்னை துறைமுகம் – மதுரவாயல் இடையே பறக்கும் சாலை அமைந்திட அனுமதிக்கப்பட்டு 8.1.2009 அன்று பிரதமர் மன்மோகன்சிங் அடிக்கல் நாட்டி 40 சதவிகித பணிகள் முடிக்கப்பட்ட நிலையில் அன்றைய ஜெயலலிதா ஆட்சியால் பா.ஜ.க. துணையோடு அத்திட்டம் முடக்கப்பட்டது. தென் மாவட்டங்களின் நூற்றாண்டு கால கனவு திட்டமான சேது சமுத்திர திட்டத்திற்கு ரூபாய் 2427 கோடி ஒதுக்கப்பட்டு பிரதமர் மன்மோகன்சிங் அடிக்கல் நாட்டிய பிறகு வகுப்புவாத பா.ஜ.க.வால் இன்றுவரை முடக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரின் குடிநீர் பிரச்சினை தீர ரூபாய் 908 கோடி மதிப்பீட்டில் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேற்றப்பட்டது. ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதியுதவியுடன் ரூபாய் 14,400 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை வண்டலூருக்கு அருகில் மத்திய அதிரடிப் படை மையம் அமைந்திட அன்றைய ஒன்றிய காங்கிரஸ் கூட்டணி அரசு ஒப்புதல் வழங்கியது. திருச்சி, மதுரை உள்ளிட்ட விமான நிலையங்கள் நவீனமயமாக்க நிதியுதவி.

இப்படி எண்ணற்ற சாதனைகளை அன்றயை பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சியில் நிகழ்த்தியதை ஆயிரம் அண்ணாமலைகள் ஒன்று சேர்ந்தாலும் மூடி மறைத்துவிட முடியாது. அன்றைய ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளின் அடையாளங்களாக மேலே கூறப்பட்ட திட்டங்கள் நினைவுச் சின்னங்களாக தமிழகத்தில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றன. ஊடக வெளிச்சம் கிடைக்கிறது என்பதற்காக அற்ப அரசியலுக்காக வரலாற்றில் உறுதி செய்யப்பட்ட சாதனைகளை மூடி மறைக்க முயலும் அண்ணாமலையின் முயற்சியை தமிழக மக்கள் என்றைக்கும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

The post ஒன்றிய பட்ஜெட்; காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சியில் நிகழ்த்தியதை ஆயிரம் அண்ணாமலைகள் ஒன்று சேர்ந்தாலும் மூடி மறைத்துவிட முடியாது: செல்வப்பெருந்தகை காட்டம் appeared first on Dinakaran.

Tags : Union Budget ,Congress ,DMK ,Annamalais ,Selvaperunthakai Kattam ,Chennai ,Tamil Nadu Congress Committee ,President ,Selvaperunthagai ,Tamil Nadu ,
× RELATED திமுக-காங். கூட்டணி வலிமையாக உள்ளது: செல்வப்பெருந்தகை பேட்டி