×

எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் பிருத்விராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்

சென்னை: எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் பிருத்விராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கரூர் மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ், தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை மனைவி, மகளை மிரட்டி அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளனர் என கரூர் டவுன் போலீசில் கடந்த ஜூன் 14ம் தேதி புகார் செய்திருந்தார்.

இதேபோல் மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதரும், போலியான சான்றிதழ்கள் கொடுத்து நிலத்தை பத்திரப்பதிவு செய்தவர்கள் மற்றும் தன்னை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகார் கொடுத்தார். சார்பதிவாளர் கொடுத்த புகாரின்பேரில் யுவராஜ், பிரவீன், ரகு, சித்தார்த்தன், மாரப்பன், செல்வராஜ், நில உரிமையாளர் பிரகாஷின் மகள் ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், பிரவீன் உட்பட 13 பேர் மீது கொலை மிரட்டல், மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் ரூ.100 கோடி நிலஅபகரிப்பு விவகாரத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவியதாக வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிருத்விராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் பிருத்விராஜ், தற்போது 15 காவலில் சேலம் சிறையில் உள்ளார். காவல் ஆய்வாளர் பிருத்விராஜை சிபிசிஐடி போலீசார் இன்று கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் பிருத்விராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

The post எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கில் காவல் ஆய்வாளர் பிருத்விராஜை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம் appeared first on Dinakaran.

Tags : M. R. Police ,Prithviraj ,Vijayabaskar ,Chennai ,Prakash ,Vangal Kupchipalaya, Karur district ,Dinakaran ,
× RELATED ரூ.100 கோடி நில மோசடி வழக்கு:...