×

நியாய விலை கடைகளை திறக்க மக்கள் வலியுறுத்தல் தமிழக ரேஷன் கடைக்கு புதுவை முதல்வர் திடீர் விசிட்: செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்

புதுச்சேரி: தமிழக பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி நேற்று திடீரென சென்று பார்வையிட்டார். புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. ரேஷன் அரிசிக்குப் பதிலாக, பயனாளியின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. அரிசி, பருப்பு விலை தற்போது கடுமையாக உயர்ந்துள்ளதால் புதுச்சேரி மக்கள் மீண்டும் ரேஷன் கடை வேண்டும் என போராடி வருகின்றனர். இதையடுத்து நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ரங்கசாமியிடம் ரேஷன் கடைகளை திறக்காதது குறித்து மக்கள் கேள்வி கேட்டு தினறடித்தனர். இந்நிலையில், புதுச்சேரியில் ரேஷன் கடைகள் மூலம் இலவச ரேஷன் அரிசி, மானிய விலையில் பருப்பு வகைகள், சர்க்கரை, எண்ணெய் வழங்க முடிவு செய்திருப்பதாகவும், அதற்கான கோப்புக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், விரைவில் டெண்டர் விடப்படும் எனவும் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

இதைதொடர்ந்து நேற்று முன்தினம் டென்னிஸ் பயிற்சியை முடித்ததும் முதல்வர் ரங்கசாமி திடீரென காரில் புறப்பட்டு, புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதியான சின்ன முதலியார்சாவடிக்கு சென்றார். அங்குள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை பார்வையிட்டு அதன் தரம் குறித்து ஊழியரிடம் கேட்டறிந்தார். ரேஷன் கடைகளில் மாதந்தோறும் என்னென்ன பொருட்கள் வழங்கப்படுகிறது என்பதையும் விசாரித்து தெரிந்து கொண்டார். இதனால் விரைவில் புதுவையில் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டு பொருட்கள் வழங்கப்படும் என தெரிகிறது.

 

The post நியாய விலை கடைகளை திறக்க மக்கள் வலியுறுத்தல் தமிழக ரேஷன் கடைக்கு புதுவை முதல்வர் திடீர் விசிட்: செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார் appeared first on Dinakaran.

Tags : Puduwai ,Chief Minister ,Tamil Nadu ,Puducherry ,Rangaswamy ,
× RELATED புதுவை கவர்னருடன் நடிகர் விஜய் சேதுபதி சந்திப்பு