×

ஹாக்கியில் கோலோச்சிய இந்தியா


ஒலிம்பிக் ஹாக்கியில் இந்தியாவின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த காலம் ஒன்று இருந்தது. அதில் ஒன்றல்ல… இரண்டல்ல… 8 தங்கப் பதக்கங்களை வாரிக் குவித்துள்ளது.

* 1928ல் நெதர்லாந்தில நடந்த ஒலிம்பிக் போட்டியில் பிரிட்டிஷ் இந்திய அணியாக முதல் முறை களம் கண்ட ஜெய்பால் சிங் தலைமையிலான இந்தியா பைனலில் நெதர்லாந்தை 3-0 என வீழ்த்தி முதல் தங்கத்தை முத்தமிட்டது. பைனலில் 2 கோல் உட்பட 5 ஆட்டங்களில் தயான் சந்த் 15 கோல் அடித்து முதலிடம் பிடித்தார்.

* 1932ல் அமெரிக்காவில் நடந்த அடுத்த ஒலிம்பிக்சில் லால் ஷா போக்ஹரி தலைமையில் பங்கேற்ற இந்தியா மீண்டும் தங்கம் வென்று அசத்தியது. அதிகபட்சமாக அமெரிக்காவுக்கு எதிராக 24, ஜப்பானுக்கு எதிராக 11 கோல் அடித்து மிரட்டியது. இந்த 35 கோல்களில் தயான் சந்த் 12, ரூப் சிங் ஒரே ஆட்டத்தில் 10 கோல், குலார் 8 கோல் அடித்திருந்தனர்.

* 1936ல் ஜெர்மனியில் நடந்த போட்டியில் தயான் சந்த் கேப்டனாக களமிறங்கினார். வழக்கம்போல அனைத்து அணிகளுக்கும் எதிராக கோல் மழை பொழிந்த இந்தியா, பைனலில் 8-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி ஹாட்ரிக் சாம்பியனாக முத்திரை பதித்தது. தயான் சந்த் மட்டையில் காந்தம் ஏதாவது இருக்கிறதா என்று சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் சோதனையிட்டது, தனது படையில் சேர்ந்தால் தளபதி பதவி தருவதாக ஆசை காட்டியது… வியப்பூட்டும் சரித்திரப் பதிவுகள்.

* இரண்டாம் உலகப் போரால் 1940, 1944ல் ஒலிம்பிக் நடைபெறவில்லை. 1948ல் இங்கிலாந்தில் நடந்த ஒலிம்பிக்சில் சுதந்திர இந்தியா கிஷண் லால் தலைமையில் விளையாடியது. பைனலில் பிரிட்டனை 4-0 என வீழ்த்தி 4வது தங்கத்தை வசப்படுத்தியது. இந்திய அணியில் முதல்முறையாக ஒரு தமிழ் வீரர் மாணிக்கம் (எ) ரங்கநாதன் பங்கேற்றார். ‘சிங்கம்’ என ரசிகர்களால் கொண்டாப்பட்ட ரங்கநாதன் பர்மாவில் பிறந்தவர். 3 ஒலிம்பிக் தங்கம் வென்ற 7 இந்திய வீரர்களில் இவரும் ஒருவர். எழும்பூர் ஹாக்கி அரங்கத்துக்கு இவர் பெயர் சூட்ட வேண்டும் என்று 2020ல் சென்னை மாவட்ட ஹாக்கி சங்கம் விடுத்த கோரிக்கை அப்படியே உள்ளது.

* 1952ல் பின்லாந்தில் கேப்டன் கே.டி சிங் தலைமையில் களமிறங்கிய இந்திய அணியில் ரங்கநாதனுடன், இன்னொரு தமிழக வீரர் சின்னதுரையும் இடம் பெற்றிருந்தார். கோவிந்த் பெருமாள் (மகாராஷ்டிரா), முனுசாமி ராஜகோபால் (கர்நாடகா) என தமிழர்களின் எண்ணிக்கை 4 ஆக இருந்தது. இந்த தொடரிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த இந்தியா 5வது ஒலிம்பிக் தங்கத்தை கைப்பற்றியது.

* 1956ல் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பல்பீர் சிங் சீனியர் தலைமையிலான இந்தியா பைனலில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதல் முறையாக பைனலுக்கு முன்னேறிய பாகிஸ்தான் 0-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவிடம் போராடி தோற்றது. இந்தியா 2வது ஹாட்ரிக்குடன் தொடர்ந்து 6வது முறையாக தங்கத்தை முத்தமிட்டது.

* 1960ல் இத்தாலியில் லெஸ்லி வால்டர் கிளாடியஸ் தலைமையிலான இந்திய அணி இம்முறை பைனலில் பாகிஸ்தானிடம் தோற்று முதல் முறையாக வெள்ளியுடன் திருப்தியடைந்தது. தமிழ் நாட்டில் இருந்து விக்டர் ஜான் பீட்டர் மட்டும் இடம் பெற்றார். தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3விதமான ஒலிம்பிக் பதக்கங்களையும் வென்ற ஒரே தமிழக வீரர் இவர்.

* 1964ல் (ஜப்பான்) சரண்ஜித் சிங் தலைமையில் விளையாடிய இந்தியா பைனலில் 1-0 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி பழிதீர்த்ததுடன் மீண்டும் தங்கப் பதக்கத்தை வென்று தலைநிமிர்ந்தது.

* 1968ல் (மெக்சிகோ) முதலில் குர்பக்ஸ் சிங் தலைமையில் களம் கண்ட இந்தியா, இடையில் தடுமாறவே பிரித்திபால் சிங் கேப்டனாக பொறுப்பேற்றார்.
தமிழ்நாட்டில் இருந்து ஜான் பீட்டர், கிருஷ்ணமூர்த்தி பெருமாள், பெங்களூரில் இருந்து ராஜேந்திரன் கிறிஸ்டி வாய்ப்பு பெற்றனர். பல்பீர் சிங் என்ற பெயரிலேயே 3 வீரர்கள் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் கூடுதல் நேரத்தில் 1-2 என தோற்றதால், வெண்கலப் பதக்கத்துக்காக விளையாடி முதல் முறையாக 3வது இடம் பிடித்தது.

* 1972ல் (மேற்கு ஜெர்மனி) ஹர்மிக் பால் தலைமையில் விளையாடியது. தமிழ்நாட்டில் இருந்து கிருஷ்ணமூர்த்தி பெருமாள், விக்டர் பிலிப்ஸ் வாய்ப்பு பெற்றனர். டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸின் தந்தை வேஸ் பயசும் விளையாடினார். இந்த தொடரில் இந்தியா வெண்கலம், பாகிஸ்தான் வெள்ளி, ஜெர்மனி தங்கம் வென்றன. பைனலில் பாகிஸ்தான் தோற்றதால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபட்டதுடன் காவலர்களையும் தாக்கியதால் அரங்கம் போர்க்களமானது.

* 1976ல் (கனடா) அஜித் பால் சிங் தலைமையிலான இந்திய அணிக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. தமிழ்நாட்டில் இருந்து வடிவேலு பிலிப்ஸ், 16வது வீரராக வாசுதேவன் பாஸ்கரன் இடம் பிடித்தனர். இத்தொடரில் இந்தியாவுக்கு 7வது இடம் தான் கிடைத்தது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலம் வென்றன.

* 1980ல் (சோவியத் ரஷ்யா) தமிழக வீரர் வாசுதேவன் பாஸ்கரன் தலைமையிலான இந்தியா, ரவுண்டு ராபின் முறையில் எல்லா ஆட்டங்களிலும் வென்று முதலிடம் பிடித்து மீண்டும் தங்கப் பதக்கத்தை முத்தமிட்டது. ஸ்பெயின், சோவியத் ரஷ்யா வெள்ளி, வெண்கலம் பெற்றன. அமெரிக்கா-ரஷ்யா இடையிலான பனிப்போர் காரணமாக அமெரிக்க ஆதரவு நாடுகள் இந்த ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. 1964க்கு பிறகு ஹாக்கியில் தமிழக வீரர் பாஸ்கரன் தலைமையில் தங்கப்பதக்கம் வென்றதால், தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
அதன் பிறகு ஒலிம்பிக் ஹாக்கியில் இந்திய அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 1984ல் (அமெரிக்கா) 5வது இடம், 1988ல் (தென் கொரியா) 6வது இடம், 1992ல் (ஸ்பெயின்) 7வது இடம், 1996ல் (அமெரிக்கா) 8வது இடம், 2000(ஆஸ்திரேலியா), 2004ல் (கிரீஸ்) தொடர்ந்து 7வது இடம், 2012ல் (இங்கிலாந்து) 12வது இடம், 2016ல் (பிரேசில்) 8வது இடம் என இறங்குமுகமாகவே இருந்தது.

* கொரோனா காரணமாக 2020 ஒலிம்பிக்ஸ் 2021ல் நடந்தது (ஜப்பான்). மன்பிரீத் சிங் தலைமையில் இந்தியா களமிறங்கியது. தமிழ்நாட்டு வீரர்கள் இடம் பெறுவது அரிதாகிவிட்டது. வெண்கலத்துக்கான மோதலில் 5-4 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதக்கம் வென்றது இந்தியா. 2024 ஒலிம்பிக்சில் மீண்டும் தங்கத்தை குறிவைத்து ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. பி பிரிவில் நடப்பு சாம்பியன் பெல்ஜியம், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, நியூசிலாந்து, அயர்லாந்து அணிகளின் சவாலை எதிர்கொள்ளும் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் (ஜூலை 27, இரவு 9.00) நியூசிலாந்துடன் மோதுகிறது.

The post ஹாக்கியில் கோலோச்சிய இந்தியா appeared first on Dinakaran.

Tags : India ,Olympic ,Olympic Games ,Netherlands ,Dinakaran ,
× RELATED பாராலிம்பிக் கோலாகல தொடக்கம்: களைகட்டியது பாரிஸ்