காத்மண்டு: நேபாளத்தில் பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு வௌிநாட்டவர் உள்பட 18 பேர் பலியாகினர். நேபாளத்தின் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று சவுர்யா ஏர்லைன்ஸ் என்ற தனியாருக்கு சொந்தமான விமான நிறுவனத்தின் சிறிய ரக விமானம் வழக்கமான பராமரிப்பு பணிகளுக்காக பொக்ரா என்ற இடத்துக்கு நேற்று காலை 11.11 மணிக்கு புறப்பட்டது. இதில் சவுர்யா ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் 17 பேர், நேபாள நாட்டை சேர்ந்த ஒரு பெண் மற்றும் ஏமன் நாட்டை சேர்ந்த ஒருவர் என 19 பேர் இருந்தனர். இந்த விமானம் ஓடுபாதையில் மிக வேகமாக ஓடி மேலே பறக்க முயன்றது. அப்போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையில் விழுந்த விமானம் பயங்கரமாக தீப்பற்றி எரிந்தது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இருப்பினும் விமானம் முழுவதும் எரிந்து சாம்பலாகி எலும்புக்கூடாக மாறியது. இந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள், வௌிநாட்டவர் உள்பட 18 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். விமானி மட்டும் அதிர்ஷ்டவசமாக சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். நேபாளத்தில் அடிக்கடி விமான விபத்துகள் அரங்கேறி வருகின்றன. கடந்த 1955 ஆகஸ்ட்டில் நேபாளத்தில் முதல் விமான விபத்தில் இருந்து இதுவரை 914 பேர் விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டு எட்டி ஏர்லைன்ஸ் விமானம் பொக்கராவில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 5 இந்தியர்கள் உள்பட 72 பேர் உயிரிழந்தனர். மனித தவறுகள் காரணமாக இந்த விபத்து நேரிட்டது. 1992ம் ஆண்டு ஜூலை மாதம் தாய் ஏர்வேஸ் நிறுவன விமானம் விபத்துக்குள்ளானதில் 113 பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் விமானம் விபத்துக்குள்ளானதில் 167 பேர் பலியாகினர். 2022 மே 29ம் தேதி முஸ்டாங் மாவட்டத்தில் தாரா ஏர்லைன்ஸ் விமான விபத்தில் இந்தியாவை சேர்ந்த 4 பேர் உள்பட விமானத்தில் பயணம் செய்த 22 பேரும் கொல்லப்பட்டனர். 2016ம் ஆண்டு அதே தாரா விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் சென்ற 23 பேரும் உயிரிழந்தனர். 2018ம் ஆண்டு திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் யுஎஸ் – பங்களா விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் சென்ற 51 பேரும் பலியாகினர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்ட விமானம் விழுந்து நொறுங்கி 18 பேர் பலி: நேபாளத்தில் பயங்கரம் appeared first on Dinakaran.