×

ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது விவசாயிகளின் முதுகில் குத்திய பட்ஜெட்: தலைவர்கள் கொந்தளிப்பு

திருச்சி: ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. விவசாயிகளின் முதுகில் குத்திய பட்ஜெட் என டெல்டா மாவட்ட விவசாய சங்க தலைவர்கள் கொந்தளித்துள்ளனர். ஒன்றிய அரசின் பட்ஜெட் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. இதில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை. வேளாண்துறை பற்றி கண்டுகொள்ளப்படவில்லை. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க தலைவர்கள் கொந்தளிப்படைந்துள்ளனர். இந்திய விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் புதுக்கோட்டை தனபதி: பிஎம் கிசான் திட்டத்தில் ஆண்டிற்கு ரூ.6000 என்பதை ரூ.12,000 ஆக உயர்த்தி அறிவிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அறிவிப்பு இல்லை. இத்திட்டத்தில் பாரபட்சமான நடைமுறை இருந்து வருகிறது. இந்தியாவில் சுமார் 2 கோடியே 10 லட்சம் குத்தகை உழவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த திட்டம் இதுவரை நீட்டிக்கப்படாமல் இருப்பது அரசியல் சாசன சட்டத்தின் படி பாரபட்சமானது. நதிகள் இணைப்பு பற்றியும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. குறிப்பாக காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு குறித்து கூட்டத்தொடரில் தெரிவிக்க வேண்டும். 58 வயதை கடந்த ஆண், பெண் விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதிய தொகை ரூ.5000 அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு இந்த ஆண்டும் பாஜ அரசு செவி சாய்க்காதது வருத்தமளிக்கிறது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் திருவாரூர் மாசிலாமணி: நாடு தழுவிய அளவில் விவசாயிகளின் 13 மாத கால தீவிர தொடர் போராட்டங்கள் மற்றும் 734 விவசாயிகள் இறந்த சூழலில் ஒன்றிய அரசு எழுதிக்கொடுத்த கோரிக்கைகளான விவசாயிகள் உற்பத்தி பொருட்களுக்கான விலை மற்றும் முதலீட்டுக்கான வட்டி, இவற்றுடன் 50 சதவிகிதம் கூடுதலான விலை நிர்ணயம் மற்றும் வேளாண் கடன் தள்ளுபடிக்கான நிதி ஒதுக்கீடு என்பதை எல்லாம் ஒன்றிய நிதி அமைச்சர் மறந்து விட்டார். விவசாயிகளுக்கான கிசான் சமான் நிதி உதவி உயர்த்தப்படும் என எதிர்பார்த்த நிலையில் அதுதொடர்பாக எந்தவித அறிவிப்பும் இல்லாமல் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். ஒரு கோடி இயற்கை விவசாயிகளுக்கு மானிய உதவி மற்றும் வேளாண்மை டிஜிட்டல் மயம் என்பதெல்லாம் 80 சதவீமாக இந்தியாவில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு முழுப்பயன் அளிக்கப்போவதில்லை. வேளாண்மை இடுபொருட்களோ 17 சதவிகிதம் வரை உயர்ந்திருக்கிறது. மொத்தத்தில் விவசாயிகளையும், தமிழக மக்களையும் ஏமாற்றிய பட்ஜெட்.

தஞ்சை விவசாயி ஜீவகுமார்: ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் வெள்ளம், இயற்கை பேரிடர்களுக்காக சல்லி காசு கூட அறிவிக்கப்படவில்லை. ஆந்திரா, பீகார் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாஜ தேர்தல் அறிக்கையில் விவசாயத்தில் இரண்டு மடங்கு லாபம் தரக்கூடிய எம்.எஸ். சாமிநாதன் அறிக்கை செயல்படுத்தப்படும் என்கிற அறிவிப்பும் இல்லை. தமிழகத்திற்கு பேரிடர் கால நிவாரண தொகை இழப்பிற்கு ஏற்ப உயர்த்திட வேண்டும் என்பது மறுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடந்து கொண்டுள்ளது. விவசாயிகளின் முதுகில் குத்திய பட்ஜெட்டாக உள்ளது.

தென்னிந்திய கரும்பு விவசாய சங்க மாநில தலைவர் போளூர் கே.வி.ராஜ்குமார்: விவசாயிகளுக்கு ஏற்கனவே கொடுத்த 3 வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வந்த நிலையில், மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம் மக்கள் வேளாண் சார்ந்த நாட்டில் ரூ.1.50 லட்சம் கோடியை மட்டும் வேளாண் துறைக்கு ஒதுக்கீடு என்பது, அடிப்படை தேவைகளுக்கு கூட தேவையான நிதியை ஒதுக்காதது, விவசாயிகளின் நலன் மீதான பாஜ ஒன்றிய அரசு கொண்டுள்ள அக்கறையின்மையை வெளிப்படுத்துகிறது.

நலிந்து வரும் கரும்பு விவசாயிகளை கைதூக்கி விடும் எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. விலை உயர்ந்த ஆடம்பர பொருட்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம், சலுகைகள் கூட நாட்டு மக்களின் பசியை போக்கும் வேளாண்மைக்கு அளிக்கப்படவில்லை. வேளாண்மையை முற்றிலுமாக அழிக்க முற்பட்டு ஒரு கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்றுவோம் என்ற அறிவிப்பு ஏமாற்றும் வகையில் வேடிக்கையான சிறுபிள்ளைத்தனம். கூட்டணி கட்சிகள் ஆளும் பீகாருக்கு ரூ.26,000 கோடியும், ஆந்திராவிற்கு ரூ.15,000 கோடியும் ஒதுக்கியுள்ள இந்த நிதிநிலை அறிக்கை இந்தியாவின் இதர மாநில மக்களை தெருக்கோடியில் நிறுத்தி உள்ளது ஏன்? இந்தியாவிலேயே அதிகம் வரி செலுத்துவதில் முதன்மையான இடத்தில் உள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் எவ்வித சிறப்பு திட்டத்தையும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்காதது வெட்கக்கேடானது.

வேளாண் சார்ந்த நாட்டு மக்களை இரண்டாந்தர குடிமக்களாகக் கருதி, அவர்கள் வளர்ச்சிக்காக உரிய நிதி ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து விவசாயிகளை மீண்டும் மிகப்பெரிய போராட்டம் நடத்திட வழிவகுத்துள்ளது. கூட்டணி கட்சிகள் ஆளும் பீகாருக்கு ரூ.26,000 கோடியும், ஆந்திராவிற்கு ரூ.15,000 கோடியும் ஒதுக்கியுள்ள இந்த நிதிநிலை அறிக்கை இந்தியாவின் இதர மாநில மக்களை தெருக்கோடியில் நிறுத்தி உள்ளது ஏன்? இந்தியாவிலேயே அதிகம் வரி செலுத்துவதில் முதன்மையான இடத்தில் உள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் எவ்வித சிறப்பு திட்டத்தையும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்காதது வெட்கக்கேடானது. ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் வெள்ளம், இயற்கை பேரிடர்களுக்காக சல்லி காசு கூட அறிவிக்கப்படவில்லை. பாஜ தேர்தல் அறிக்கையில் விவசாயத்தில் இரண்டு மடங்கு லாபம் தரக்கூடிய எம்.எஸ். சாமிநாதன் அறிக்கை செயல்படுத்தப்படும் என்கிற அறிவிப்பும் இல்லை.

* தமிழ்நாடு இந்தியாவிற்குள்தான் இருக்கிறதா? விக்கிரமராஜா விரக்தி
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா ஸ்ரீவைகுண்டத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நகராட்சி கடை உரிமத்தை 9ல் இருந்து 12 ஆண்டுகளாகவும், தமிழ்நாடு வணிகர் பேரமைப்பின் கோரிக்கையை ஏற்று ஆண்டுதோறும் லைசென்ஸ் எடுக்கும் திட்டத்தை 3 ஆண்டுகளாகவும் உயர்த்திக் கொடுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். வணிகர் நலவாரிய இழப்பீடு தொகையை ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி தருவார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். தமிழக முதல்வரையும், பிரதமரையும் நேரில் சந்தித்து சிறப்பு வணிகர் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். ஒன்றிய பட்ஜெட்டில் பல்வேறு சலுகைகள் கிடைக்கும், ஜிஎஸ்டியை எளிமைப்படுத்துவார்கள் என்ற நம்பிக்கையோடு காத்திருந்தோம். ஆனால் அத்தனை எண்ணங்களும் பொய்த்து போய்விட்டது. தமிழகம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை மறுபரிசீலனை செய்து தமிழகம் இந்தியாவில் இருக்கிறது என்ற அடிப்படையில் தமிழகத்திற்கும் பல திட்டங்களை அமல்படுத்திட வேண்டும்’ என்றார்.

The post ஒன்றிய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது விவசாயிகளின் முதுகில் குத்திய பட்ஜெட்: தலைவர்கள் கொந்தளிப்பு appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Tamil Nadu ,Union Government ,Tamil ,Nadu ,Delta District ,Union ,
× RELATED ஒன்றிய அரசின் அனுமதியின்றி தேசிய...