×

காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் குறித்து எதையும் அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார்: டாஸ்மாக் பணியாளர் சங்கம் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மது பாட்டில்கள் விற்பனை செய்யும் போது கூடுதலாக பாட்டிலுக்கு தலா ரூ.10ஐ பெற்று, அந்த பாட்டிலை திரும்ப ஒப்படைக்கும்போது வசூலிக்கப்பட்ட ரூ.10ஐ திரும்ப வழங்கலாம் என்று உயர்நீதிமன்றம் யோசனையை தெரிவித்தது. இதனை டாஸ்மாக் நிறுவனம் ஏற்று மலைப்பகுதிகளில் இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்த தொடங்கியது. இந்தப் பணியை தற்போதுள்ள பணியாளர்கள் மூலம் செயல்படுத்துவது, அவர்களது வேலைப் பளுவால் நடைமுறை சிரமங்களை உருவாக்கியது. மேலும் பணியாளர்களுக்கு தொற்று நோய் தாக்குதலும் ஏற்படுகிறது. இதனால் காலி மதுப் பாட்டில்களை திரும்பப் பெறும் பணிக்காக தனியாக கூடுதல் பணியாளரை நியமிக்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கைகளை முன் வைத்தன.

இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் நிர்வாகம், மதுபானங்கள் விநியோகிக்கும் மதுபான உற்பத்தி நிறுவனங்களே பணியாளர்களை நியமித்து காலிப் பாட்டில்களை திரும்பப் பெற வேண்டும் என்று கூறி, இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையிலும் காலிப் பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்தில் கடந்த ஆண்டு ரூ.306 கோடியை வசூலித்து, ரூ.297 கோடியை திரும்ப வழங்கியுள்ளோம். இவைகள் எதனையும் அறியாமல் எதிர்கட்சித் தலைவர் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு என்று கூறியிருப்பது அவரது ஒப்பந்ததாரர்களின் குரலை எதிரொலிப்பதாகும். டாஸ்மாக் பணியாளர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை அதிகாரத்தில் இருந்த காலத்தில் அலட்சியம் செய்து விட்டு, இன்று அரசின் வருவாய் இழப்பு குறித்து கூக்குரல் எழுப்பவது அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலாகும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் குறித்து எதையும் அறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் பேசுகிறார்: டாஸ்மாக் பணியாளர் சங்கம் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,CHENNAI ,Tamil Nadu Tasmac Employees Union ,High Court ,Tasmac Employees Union ,Dinakaran ,
× RELATED பள்ளிகள் அருகே டாஸ்மாக் வைக்க தேர்வு செய்வது ஏன்?: ஐகோர்ட் கிளை கேள்வி