சென்னை: நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி அடுத்த மாதம் முதல் தொடங்குகிறது. அதற்கான ஆய்வு பணியை தமிழக அரசு தொடங்கி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஸ்மார்ட் கார்டுகள் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டது. அதனால் புதிய கார்டுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானது. தமிழகத்தில் மொத்தம் 2 கோடியே 24 லட்சத்து 19 ஆயிரத்து 359 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த நிலையில் 2022ம் ஆண்டு ஜனவரி தொடங்கி 2023 ஜூலை வரை தமிழகம் முழுவதும் 8 லட்சத்து 92 ஆயிரத்து, 481 பேர் புதிய ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு விண்ணப்பம் செய்தனர்.
மனுக்களை பரிசீலனை செய்து புதிய கார்டுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தொடங்கியது. தேர்தலுக்கு பிறகு விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு தெரிவித்து இருந்தது. தற்போது தேர்தல் முடிந்த நிலையில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவதற்கான ஆய்வு பணிகள் தொடங்கி உள்ளன. இந்நிலையி்ல், குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்த 5 லட்சத்து 63 ஆயிரத்து 246 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 31,984 அட்டைகள் பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளன. இதில் தகுதி இல்லாத 2 லட்சத்து 71 ஆயிரத்து 91 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ளவர்களுக்கு அடுத்த மாதம் முதல் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என தமிழக அரசின் கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
The post விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த மாதம் முதல் புதிய ரேஷன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும்: தமிழக அரசின் உயர் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.