×

சென்னை காவல் துறையின் பயன்பாட்டிற்காக ரூ.74 லட்சம் செலவில் 85 நவீன இருசக்கர வாகனங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை காவல் துறையின் பயன்பாட்டிற்காக ரூ.74 லட்சத்து 8 ஆயிரம் செலவில் மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 85 இருசக்கர வாகனங்களின் சேவைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மே 2021 முதல் தற்போதுவரை 39 புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், அவசர காலங்களில் காவல்துறையின் உதவியை உடனடியாக பெறும் பொருட்டு, 60க்கும் மேற்பட்ட சிறப்பு அம்சங்களுடன் கூடிய ‘காவல் உதவி செயலி’ தொடங்கி வைக்கப்பட்டது.

காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், குழந்தைகள் மீதான குற்ற நடவடிக்கை தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரூ.40 லட்சம் மதிப்பிலான ஒளி, ஒலி கட்டமைப்புடன் கூடிய 2 பல்நோக்கு பயன்பாட்டு விழிப்புணர்வு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலர்கள் இணைந்து 50 ஆண்டு நிறைவு பெற்றதையொட்டி நடைபெற்ற பொன் விழாவில் சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டு, பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ‘அவள்’ (AVAL – Avoid Violence Through Awareness and Learning) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக ரூ.32 கோடியே 53 லட்சத்து 71 ஆயிரம் செலவில் 323 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 2023-2024ம் ஆண்டு காவல்துறை மானிய கோரிக்கையில், கழிவு செய்யப்பட்ட காவல் துறை வாகனங்களுக்கு பதிலாக ரோந்து பணிகளை மேற்கொள்ள 200 புதிய இரு சக்கர வாகனங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட்ட நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 40 பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனங்கள் ரூ.39 லட்சத்து 38 ஆயிரத்து 500 செலவிலும், 45 டிவிஎஸ் ஜுபிடர் இருசக்கர வாகனங்கள் ரூ.34 லட்சத்து 69 ஆயிரத்து 500 செலவிலும், ஆக மொத்தம் 85 இருசக்கர வாகனங்கள் ரூ.74 லட்சத்து 8 ஆயிரம் செலவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை பெருநகர காவல்துறையின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த இரு சக்கர வாகனங்கள், சென்னை பெருநகரத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணி மேற்கொண்டு குற்றங்கள் நிகழாமல் கண்காணித்தல், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரித்தல், பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துதல், குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பில் தனிக்கவனம் செலுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் அரசு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் தீரஜ்குமார், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை காவல் துறையின் பயன்பாட்டிற்காக ரூ.74 லட்சம் செலவில் 85 நவீன இருசக்கர வாகனங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chennai Police Department ,Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,DMK government ,M.K.Stalin ,
× RELATED அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி: முதல்வர் மு.க.ஸ்டாலின்