×

விவசாயம், குடிநீர் தேவையை சமாளிக்க மூலவைகையில் கூடுதல் தடுப்பணைகள்: விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

வருசநாடு: மூலவைகை ஆற்றில் தண்ணீர் வரத்து சீராக இல்லாத நிலையில், கூடுதல் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். வருசநாடு அருகே மூல வைகை அணைத் திட்டத்தை செயல்படுத்த 1980களிலேயே திட்டமிடப்பட்டது. ஆனால் துவங்கப்படாமலேயே கைவிடப்பட்டது. தற்போது வரை பல்வேறு காரணங்களால் மூலவைகை அணையானது திட்ட அளவிலேயே இருந்து வருகிறது. இந்தப் பகுதி மக்களும் தொடர்ச்சியாக மூலவைகை அணைத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்காக காத்திருக்கின்றனர். இது ஒருபுறமிருக்க, கடமலை மயிலை ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளுக்கும் தற்போது மூல வைகை ஆற்றில் இருந்து குடிநீர் உறை கிணறுகள் அமைத்து குழாய்கள் வாயிலாக தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மூல வைகையில் நீர் வரத்து குறைவாகவே இருந்தது. இதனால் இந்தக் கிராமங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள், வனவிலங்குகள் அவதியடையும் நிலை ஏற்பட்டது.

கடமலை-மயிலை ஒன்றிய பகுதியிலும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் விநியோகம் செய்வதற்காக பணிகள் தீவிரமாக நடைபெற்று முடிவடைந்தது. இருந்தபோதிலும் மூலவைகையில் தண்ணீர் வரத்து சீராக இல்லாததால் தொடர்ச்சியாக போதுமான அளவுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய இயலவில்லை. இருப்பினும் நீர் வரத்தைப் பொருத்து தண்ணீர் விநியோகம் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் தங்கதமிழ்ச்செல்வன் எம்பி முயற்சியில் 2 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க கடமலை அருகே உறைகிணறு அமைக்குப் பணிகள் தொடங்கின.

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் சில இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், கூடுதலாக 4-5 இடங்களில் தடுப்பணைகள் கட்டினால், மூலவைகையில் கிடைக்கும் நீரை தேக்கிவைக்க முடியும் எனவும், இதனால் நீர் மட்டம் உயரும் என்பதால் 18 கிராமங்களுக்கும் தொடர்ச்சியாக போதுமான தண்ணீர் விநியோகம் என செய்ய முடியும் எனவும் பொதுமக்கள், விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மேலும் வாலிப்பாறை மலை அடிவாரத்தில் மூல வைகை அணை அமைத்து, வருசநாடு தங்கம்மாள்புரம் போன்ற பகுதிகளில் கூடுதலாக தடுப்பணைகள் கட்டி நீரை தேக்கினால் சிரமமின்றி குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும், கண்டமனூரில் இருந்து வாலிப்பாறை வரையும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் விவசாய நிலங்களாக உள்ளது. இதற்கு முக்கிய ஆதாரமாக மூல வைகை உள்ளது. இப்பகுதியில் தென்னை வாழை கரும்பு போன்ற விவசாயங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எனவே கூடுதல் தடுப்பணைகள் கட்டினால், இந்த விவசாய நிலங்களுக்கும் பயனளிக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மூல வைகை திட்டம் நிறைவேறினால், தேனி மாவட்டம் மட்டுமின்றி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் உதவுவதாக இருக்கும் எனவும் விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

The post விவசாயம், குடிநீர் தேவையை சமாளிக்க மூலவைகையில் கூடுதல் தடுப்பணைகள்: விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Muilhaiga River ,Raw Viagai Dam ,Varasanadu ,
× RELATED வருசநாடு அருகே மலைக்கிராமங்களுக்கு சாலை வசதி வேண்டும்