×
Saravana Stores

முக்கொம்பு காவிரி ஆற்றில் ரூ.16 கோடியில் கதவணைகள் சீரமைப்பு பணி நிறைவு

ஜீயபுரம்: முக்கொம்பு காவிரி ஆற்றிலுள்ள 41 கதவணைகளை ரூ.16 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது இப்பணி முழுமையாக முடிவடைந்து பாசன நீர் திறப்பிற்கு தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் மேலணை எனப்படும் முக்கொம்பில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகள் மூன்று பிரிவுகளாக பிரிந்து செல்கிறது. இதனால் முக்கொம்பு எனும் சிறப்பு பெயர் பெற்றது. மேட்டூருக்கு அடுத்தபடியாகவும் கல்லணைக்கு மேற்கே 25 கிலோ மீட்டருக்கு முன்பாகவும் கடந்த 1974ல் முன்னாள் முதல்வர் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது அடிக்கல் நாட்டப்பட்டு 1977ல் மேலணை கட்டி முடிக்கப்பட்டது. அதற்கு முன்னர் இப்பகுதி மக்கள் காவிரியை கடக்க பரிசல்களை மட்டுமே பயன்படுத்திய நிலையில் வாகன போக்குவரத்துடன் கூடிய புதிய கதவணை கட்டப்பட்டது.

இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் பெருகியதுடன் விவசாயிகளின் பாசன தேவைக்கு ஏற்ப தண்ணீர் வசதியும் கிடைத்து வந்தது. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் 1836ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட நீரொழுங்கி அதிக நீர் பெருக்கின் காரணமாக கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி 9 மதகுகள் உடைந்து சேதமடைந்தன. அதன் பிறகு ரூ.414 கோடி மதிப்பீட்டில் புதிய கொள்ளிடம் கதவணை கட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கானொளி மூலமாக திறந்து வைத்தார். இந்நிலையில் காவிரி ஆற்றின் கதவணைகளை ஒவ்வொரு ஆண்டும் குறுவை பாசனத்துக்காக டெல்டா மாவட்டங்களுக்கு ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் முன்பாக சீரமைப்பது வழக்கம். இந்தாண்டு நீர்வளத்துறை மூலம் காவிரியின் குறுக்கேயுள்ள 41 கதவணைகளை ரூ.16 கோடியில் சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடைபெற்றது. தற்போது இந்த பணிகள் முடிவடைந்து வர்ணம் பூசும் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து நீர்வளத்துறை பொறியாளர்கள் கூறுகையில், சேதமடைந்த கதவணைகளின் இருப்பு பட்டைகள் அகற்றி புதிய பட்டைகள் பொருத்துவது, கதவணைகளை கீழும் மேலுமாக இயக்க ஏதுவாக செயல்படும் பேரிங் உருளைகள், சேதமடைந்த செயின் லிங்க் உள்ளிட்ட தளவாடங்களை அகற்றி புதிதாக மாற்றி அமைக்கும் பணியில் 6 தனியார் நிறுவனங்கள் ஈடுபட்டன. இப்பணியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளது. மேலும் ஷர்ட்டர்கள் எளிதாக இயக்க ஏதுவாக கிரீஸ் வைத்தல், பெயின்டிங் வேலைகள் போன்ற கடைசி கட்ட பணிகளும் முழு வீச்சில் நடைபெறுகிறது. தற்போது மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ள நிலையில் பாசனத்துக்கு நீர் திறக்கும் பட்சத்தில் அதனை எதிர்கொள்ளும் வகையில் முக்கொம்பில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தண்ணீர் திறக்க மேலணை தயார் நிலையில் உள்ளது என்றனர்.

The post முக்கொம்பு காவிரி ஆற்றில் ரூ.16 கோடியில் கதவணைகள் சீரமைப்பு பணி நிறைவு appeared first on Dinakaran.

Tags : Mukkombu Cauvery river ,Jeeyapuram ,Trichy district ,Mukkombu Cauvery ,Dinakaran ,
× RELATED தொட்டியம் அருகே தனியார் பள்ளி விடுதியில் சிறுமி தூக்கிட்டு தற்கொலை