×

நீலாங்கரையில் நடைபெற்ற விழாவில் 1,984 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார் அமைச்சர் உதயநிதிஸ்டாலின்

சென்னை: சென்னை, நீலாங்கரையில் இன்று (24.07.2024) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் நடைபெற்ற வீட்டுமனை பட்டா வழங்கும் விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1,984 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இவ்விழா வருவாய்த் துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் நடைபெற்றது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வீட்டுமனைப்பட்டா பெறுவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை தீர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையின்படி, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையின் சார்பில் அரசாணை எண்.12, 01.03.2024 அன்று பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வீட்டு மனை பட்டா வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்க்க வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சரின் தலைமையில் வீட்டு வசதி மற்றும் நகர்புர வளர்ச்சித்துறை அமைச்சர், மாண்புமிகு குறு,சிறு(ம)நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மற்றும் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் உட்பட 18 உறுப்பினர்கள் கொண்ட மாநில அளவிலான உயர்நிலை குழு அமைக்கப்பட்டது.

இக்குழு 13.06.2024 அன்று கூடி, தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கிரய பத்திரங்கள் வழங்கப்பட்ட மனைகளுக்கு பட்டா வழங்குவது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கிரய பத்திரங்கள் வழங்கப்பட்ட மனைகளுக்கு பட்டா வழங்குவது. அரசாணை(நிலை)எண்.168, வருவாய் துறை, நாள்.27.03.2000 மற்றும் அரசாணை(நிலை)எண்.854, வருவாய் துறை, நாள்.30.12.2006-ன்படி ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வீட்டு மனைப்பட்டாக்களை வருவாய் ஆவணங்களில் பதிவேற்றம் செய்து கணினி பட்டா வழங்குவது, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும மனைகளுக்கு பட்டா வழங்குவது – ஆகியவற்றில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அச்சிக்கல்களுக்கு தீர்வு காணுவது குறித்தும் விவாதித்து, தொடர்புடைய துறைத்தலைவர்களுக்கும், சென்னை மாவட்ட ஆட்சியருக்கும் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டன.

அடிப்படையில். தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மனை இடங்களில் 411 பட்டாக்கள், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய அம்பத்தூர் திட்டப்பகுதி மனை இடங்களில் 516 பட்டாக்கள், நகர நிலவரித்திட்டத்தின் கீழ் மாதவரம் மற்றும் அம்பத்தூர் வட்டங்களில் 5070 பட்டாக்கள், ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் வரன்முறை செய்து வழங்கப்பட்ட மனை பட்டாக்கள் வருவாய் ஆவணங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு சோழிங்கநல்லூர் வட்டத்தில் 484 பட்டாக்கள் மற்றும் அரசாணை எண்.105, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள்:13.03.2024-ன்படி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், திருவொற்றியூர், மதுரவாயல் மற்றும் மாதவரம் வட்டங்களில் நத்தம் நிலஆவணங்களில் ரயத்துவாரி மனை என மாற்றம் செய்யப்பட்ட 19,114 பட்டாக்கள், நகர நிலஅளவை ஆவணங்களில் தனியார் நிலங்கள் சர்கார் நஞ்சை/புஞ்சை என பதிவாகியுள்ளதை சரி செய்து ரயத்துவாரி நஞ்சை/புஞ்சை என வகைபாடு மாற்றம் செய்யப்பட்ட 3253 பட்டாக்கள், ஆக மொத்தம் 28,848 பட்டாக்கள் பொது மக்களுக்கு அரசால் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்;
சோழிங்கநல்லூர் பகுதிகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 2,000 பயனாளிகளுக்கு வீட்டு மனைக்கான பட்டாக்கள் வழங்குகின்ற இந்த சிறப்புக்குரிய நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் மிகுந்த பெருமைப்படுகிறேன். மகிழ்ச்சி அடைகின்றேன்.

முதலமைச்சர் தலைமையிலான நம்முடைய திராவிட மாடல் அரசு உங்களுக்கு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிக் கொண்டு வருகிறது. நம்முடைய அரசின் சாதனைகளை முதலமைச்சரின் உழைப்பை அங்கீகரிக்கின்ற வகையில் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 என்ற 100 சதவீத வெற்றியை கொடுத்து, மிகப்பெரிய வெற்றியை நம்முடைய திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் வழங்கினீர்கள். அதற்கும் இந்த நேரத்தில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான கழக அரசாக இருந்தாலும், நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசாக இருந்தாலும் ஏழை, எளிய அடித்தட்டு மக்கள், நடுத்தர வர்க்க மக்களுடைய ஏற்றதிற்காக தினம், தினம் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து நமது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அளித்துக் கொண்டு வருகிறார்கள். திராவிட முன்னேற்ற கழகமும், திராவிட மாடல் அரசும், எப்போதும் உங்களுடன் நிற்கிறது. அதே போல நீங்களும் எப்பொழுதும் நம்முடைய தலைவருக்கும், நம்முடைய அரசுக்கும் பக்க பலமாக தொடர்ந்து இருந்து கொண்டு வருகிறீர்கள்.

உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்ற தேவைகள் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை உரிமையாகும். கலைஞருடைய ஆட்சி காலத்தில் இருந்தே உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் என்கின்ற அடிப்படைத் தேவைகளை பார்த்து, பார்த்து நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, வீடு என்பது எல்லோருக்குமான ஒரு அத்தியாவசிய தேவையாகும். அது ஒரு கனவு. அதற்காகதான் கலைஞர் அவர்கள் 1970-களிலேயே இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை தொடங்கி வைத்தார்கள்.

இன்றைக்கு அதனை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மேம்படுத்தியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக கட்டட அனுமதி ஆன்லைன் மூலமாக உடனடியாக பெற வேண்டும் என்ற திட்டத்தையும் நேற்று முன்தினம் நம்முடைய முதலமைச்சர் துவக்கி வைத்திருக்கிறார்கள். வீடு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு, அந்த வீட்டுக்கான பட்டாவும் மிக மிக முக்கியம். அந்த வகையில் பார்த்தால் உங்கள் ஒவ்வொருவருக்கும் இந்த நாள் மிக மிக மகிழ்ச்சியான முக்கியமான ஒரு நாள். ஏனென்றால், பட்டா வேண்டும் என்பவருடைய பல வருட கனவு இன்று நனவாகி இருக்கிறது. குறிப்பாக, சென்னையில் நான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, முதலமைச்சரின் அறிவுரைப்படி, உங்களுக்கெல்லாம் ஒரு வாக்குறுதியை வழங்கியிருந்தேன். சென்னையில் பட்டா பிரச்சினை பல வருடங்களாக இருக்கிறது. அப்படி பட்டா கிடைக்காமல் இருப்பவர்களுக்கு நிச்சயம் பட்டா வழங்கப்படும் என்ற அந்த வாக்குறுதியை தேர்தல் பிரச்சாரத்தின்போது நான் அளித்திருந்தேன். தேர்தல் முடிவுகள் முடிந்து 2 மாதம் தான் ஆகியிருக்கிறது. இந்த 2 மாதத்திற்குள் முதலமைச்சர் அவர்கள், உங்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார்கள். நம்முடைய திராவிட மாடல் அரசு, பல வருடங்களாக பட்டா இல்லாமல் இருந்தவர்களுக்கு கூட இன்றைக்கு பட்டா வழங்கியுள்ளது.

பட்டா வழங்குவதில் பல நிர்வாக சிக்கல்கள் இருந்து வந்தது. ஆனால் இந்த சிக்கல்களை எல்லாம் நம்முடைய முதலமைச்சரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது, எத்தனை சிக்கல்கள் இருந்தாலும் சரி, மக்களுடைய மகிழ்ச்சி தான் முக்கியம் என்று ஒரே குறிக்கோளோடு பணியாற்றவேண்டும், அந்த சிக்கல்களை எல்லாம் தீர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் எங்களுக்கும், அதிகாரிகளுக்கும் உத்திரவிட்டு இருந்தார்கள்.

உங்கள் வீட்டுக்கான பட்டா என்பது உங்கள் ஒவ்வொருடைய உரிமை. அதனால்தான், இந்த பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க, ஒரு குழுவை நம்முடைய முதலமைச்சர் நியமித்தார்கள். அதன் காரணமாகதான் இன்றைக்கு அந்த குழு எடுத்த முயற்சியின் காரணமாக 28 ஆயிரத்து 848 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்க தயார் நிலையில் இருக்கிறது.

குறிப்பாக, இன்றைக்கு சோலிங்கநல்லூர் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 2000 குடும்பங்களுக்கு பட்டாக்களை வழங்க இருக்கின்றோம். நேற்று இதே போன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாதவரம் மற்றும் அருகாமையில் உள்ள தொகுதிகளைச் சேர்ந்த 2,124 பட்டாக்களை வழங்கியிருக்கின்றோம். இதை தொடர்ந்து சென்னையில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில், அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக தொடர்ந்து பட்டாக்கள் வழங்கப்பட இருக்கிறது.

நம்முடைய திராவிட மாடல் அரசின் முயற்சியால் இன்றைக்கு உங்களுடைய ஒவ்வொருடைய கையிலும், வீட்டு மனை பட்டாக்கள் வந்து சேர்ந்திருக்கின்றது. இவ்வளவு நாள் சொந்த வீடாக இருந்தாலும், பட்டா இல்லையே என்று ஒரு தயக்கமும் – கலக்கமும் இருந்திருக்கும். இனிமேல், அந்த பிரச்சினை உங்களுக்கு எதுவும் கிடையாது. இன்றிலிருந்து உங்கள் வீட்டுமனை, வீடு சட்டப்பூர்வமாக உங்களுக்கு சொந்தமாகி இருக்கிறது.

நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்திட்டு இருக்கிறது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து விடியல் பயணத்திட்டம் மூலமாக கிட்டத்தட்ட 500 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு இருக்கிறார்கள். மகளிரின் சுமையை குறைக்கின்ற வகையில், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அறிமுகம் செய்தார்கள். இந்தத் திட்டத்தை இன்றைக்கு பல வெளி மாநிலங்களும் பின்பற்றிக் கொண்டிருக்கிறார்கள். கனடா, இலங்கை போன்ற வெளி நாடுகளும் நம்முடைய திட்டங்களை எல்லாம் பின்பற்றி கொண்டிருக்கின்றன என்பதை நான் பெருமையாக கூறிக்கொள்கிறேன்.

இன்றைக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலமாக கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் 20 லட்சம் மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே தரமான காலை உணவு வழங்கப்படுகிறது. அதேபோல, புதுமைப்பெண் திட்டம் மூலமாக அரசுப்பள்ளியில படித்து, உயர்கல்வி படிக்கின்ற 3 இலட்சத்து 25 ஆயிரம் மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது.

இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமான ஒரு திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். இந்த திட்டம், பெண்கள் மத்தியில மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றிருக்கின்றது. இதுவரை கிட்டத்தட்ட ஒரு கோடியே 16 லட்சம் மகளிர் கடந்த 11 மாதங்களாக மாதம் 1000 ரூபாய் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் மூலமாக பயன்பெற்று வருகிறார்கள்.

இதுபோல, நம்முடைய அரசு தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சியையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துக்கொண்டு போகின்ற வகையில் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்த திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் செயல்படுத்தியிருக்கின்ற காரணத்தால்தான் தமிழ்நாடு அரசு இன்றைக்கு வறுமை ஒழிப்பு – மகளிர் முன்னேற்றம், தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தை பிடித்திருக்கிறது.

நம்முடைய திராவிட மாடல் அரசின் சாதனைகளில் ஒன்றாகதான் இன்றைக்கு உங்களுக்கு எல்லாம் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டிருக்கிறது. நீங்கள் அனைவரும் கழக அரசின் திட்டங்களுடைய பயனாளிகள் மட்டுமல்ல. நீங்கள் அனைவரும் இந்த திட்டங்களின் பங்கேற்பாளர்கள். திராவிட மாடல் அரசின் சாதனை திட்டங்களை எல்லாம் நீங்கள் அனைவருக்கும் எடுத்துச் செல்லவேண்டும். இந்த அரசின் பிராண்ட் தூதராக நீங்கள் திகழவேண்டும். உங்களுக்காக இந்த திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து உங்களுக்கும், உங்களுடைய அடுத்தடுத்த தலைமுறைகளுக்காகவும் உழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்களை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இந்தப் பட்டாக்களை தயார் செய்ய இரவு பகல் பார்க்காமல் உழைத்துக் கொண்டிருக்கும் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் செயலாளர் டாரேஸ் அகமது ஐ.ஏ.எஸ், பட்டா வழங்குவதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட குழு மற்றும் அக்குழுவின் சிறப்பு அதிகாரி மதுசூதன் ரெட்டி ஐ.ஏ.எஸ், அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும், சென்னை மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள், அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், மருத்துவர் நா.எழிலன், காரப்பாக்கம் கணபதி, ஏ.எம்.வி.பிரபாகரராஜா, மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ்குமார், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவர் பூச்சி எஸ்.முருகன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, இ.ஆ.ப., பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அரசு செயலாளர் மருத்துவர் தாரேஸ் அகமது, இ.ஆ.ப., நில நிர்வாக ஆணையர் டாக்டர்.கே.எஸ்.பழனிசாமி, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் ராஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப, நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் பி.மதுசூதன் ரெட்டி, இ.ஆ.ப, மாநகராட்சியின் கல்வி நிலைய குழுத் தலைவர் பாலவாக்கம் த.விசுவநாதன், மாநகராட்சியின் மண்டலக் குழு தலைவர்கள் எஸ்.வி.ரவிச்சந்திரன், வி.ஏ.மதியழகன் உள்ளிட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு உயர் அலுவலர்கள், கழகத்தின் மூத்த நிர்வாகிகள் மற்றும் பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post நீலாங்கரையில் நடைபெற்ற விழாவில் 1,984 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhistalin ,Neelangarai ,Chennai ,Minister of Youth Welfare and Sports Development ,Udhayanidhi Stalin ,Department of Revenue and Disaster Management ,Nilangarai, Chennai.… ,Udayanidhistal ,
× RELATED செங்குன்றம்-நீலாங்கரை இடையே மாநகர...