- சத்துராஜகிரி கோவில்
- ஆடி அமாவாசை திருவிழா
- சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில்
- மதுரை மாவட்டம்
- அத்தியாயம்
- Chathuragiri
- மேற்குத்தொடர்ச்சி
வத்திராயிருப்பு: ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆக.1ம் தேதி முதல் 5ம் தேதி வரை 5 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சாப்டூர் வழியாகவும், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வழியாக தாணிப்பாறை சென்று, அங்கிருந்து மலைப்பாதை வழியாகவும் கோயிலுக்குச் செல்லலாம். 90 சதவீத பக்தர்கள் தாணிப்பாறை வழியாகத்தான் கோயிலுக்கு சென்று வருகின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் தற்போதும் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்பகுதி சித்தர்களின் சொர்க்கபூமி என அழைக்கப்படுகிறது. இதனால், முக்கிய விஷேச நாட்களில் விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வர். கோயிலில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்களும், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மொத்தம் 8 நாள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.
முக்கிய திருவிழாவாக ஆடி அமாவாசை திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஆடி அமாவாசை திருவிழா வரும் ஆக.4ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஆக.1 முதல் 5ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆக.1ல் பிரதோஷம், 2ம் தேதி சிவராத்திரி, 3ம் தேதி ஆடி 18ம் பெருக்கு, 4ம் தேதி ஆடி அமாவாசை என வரிசையாக விஷேச நாட்கள் வருகின்றன. இதனால், இந்தாண்டு பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடி அமாவாசை திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.
The post ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி சதுரகிரி கோயிலுக்கு செல்ல 5 நாட்கள் அனுமதி appeared first on Dinakaran.