×

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில் இன்று (23.07.2024) திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம், காவல் துறை, வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை போன்ற துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அறிவுரைகளை வழங்கினர்.

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடு என்று போற்றப்படும் திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை பெருவிழா 27.07.2024 முதல் 31.07.2024 வரை 5 நாட்கள் நடைபெறுகிறது. கடந்தாண்டு ஆடிக்கிருத்திகை விழாவின்போது சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருகை தந்தார்கள். இந்தாண்டு கூடுதலாக 25 சதவீத பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திருவிழாவிற்கு வருகின்ற பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றுவதற்காக இன்றைய தினம் அனைத்து துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

ஆடிக்கிருத்திகை பெருவிழாவில் கலந்துக் கொண்டு பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்து திரும்பும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்தாண்டை விட பல்வேறு அடிப்படை வசதிகள் இந்தாண்டு கூடுதலாக ஏற்படுத்தப்படுத்தப்பட உள்ளன. பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி 120 இடங்களிலும், கழிப்பிட வசதி 160 இடங்களிலும், தற்காலிக குளியலறை வசதி 60 இடங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் 160 இடங்களிலும், பொது தகவல் அறிவிப்பு மையம் 10 இடங்களிலும், கண்காணிப்பு கோபுரங்கள் 24 இடங்களிலும் அமைக்கப்படவுள்ளன.

இந்த திருவிழாவின் 5 நாட்களும், குப்பைகள் எங்கும் சேரா வண்ணம் உடனுக்குடன் அகற்ற திருக்கோயில் நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் 900 தூய்மைப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும், பாதுகாப்பு பணியில் கடந்தாண்டை விட கூடுதலாக காவல் துறையினர் சுழற்சி முறையில் பணியமர்த்தம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருக்கோயில் வளாகம், மலைப்பாதை முழுவதும் போதிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டும், திருக்கோயிலும் 4 பிரகாரங்களில் வெயிலிருந்து பக்தர்களை காக்கும் வகையில் தேங்காய் நார் தரை விரிப்புகள் அமைக்கப்பட்டும் அதில் அவ்வபோது தண்ணீர் பீச்சியும், பக்தர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழிவகை ஏற்படுத்தப்படும்.

அரசு போக்குவரத்துக் கழகத்தின் மூலம் கூடுதல் பேருந்துகள் இயக்கவும், 4 தற்காலிக பேருந்துகள் அமைக்கவும், தென்னக இரயில்வேயின் மூலம் சிறப்பு இரயில் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆடிக்கிருத்திகை விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு தரமான உணவு வழங்கிடும் வகையில் திருக்கோயில் நிர்வாகத்தின் மூலம் உபயதாரர்கள் பங்களிப்புடன் 50,000 நபர்களுக்கு உணவு வழங்கப்படவுள்ளது. பக்தர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கிடும் வகையில் சிறப்பு மருத்துவக் குழுக்கள், அரசு மருத்துவக் கல்லூரி, அப்பல்லோ மருத்துவமனை, போரூர் இராமச்சந்திரா மருத்துவமனை, காவேரி மருத்துவமனை மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்களின் அனைத்து நலன்களை காத்திடும் வகையில் கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொண்டு அனைத்து வகையிலும் பக்தர்கள் மகிழ்ச்சியடையும் வகையில் ஒருங்கிணைந்து பணிகளை மேற்கொள்ள உள்ளோம். இந்த அரசு பொறுப்பேற்ற பின் திருக்கோயில்களில் சிறப்புக் கட்டணத்தை குறைப்பதற்கு படிப்படியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். திருவண்ணாமலையில் பௌர்ணமி தினத்தன்று சிறப்பு தரிசனக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல இந்தாண்டு ஆடிக்கிருத்திகை விழாவிற்கு 200 ரூபாய் சிறப்பு தரிசனக் கட்டணத்தை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர்.த.பிரபுசங்கர், இ.ஆ.ப., இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் உமா மகேஸ்வரி, அறங்காவலர் குழு தலைவர் சு.ஸ்ரீதரன் மற்றும் அறங்காவலர்கள், வேலூர் மண்டல இணை ஆணையர் (பொ.) இரா.வான்மதி, திருத்தணி நகர் மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, திருக்கோயில் இணை ஆணையர் (கூ.பொ.) அ.அருணாச்சலம் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முன்னேற்பாடு பணிகள் குறித்த கூட்டம் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Reverend Arulmiku Subramania Swamy Temple ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Handloom and Textiles ,R.Gandhi ,Hindu ,P.K.Sekharbabu ,Reverend Arulmiku Subramania Swami Temple ,
× RELATED கார் ரேஸ் நடந்தபோது போக்குவரத்து இடையூறு இல்லை: அமைச்சர் சேகர்பாபு