×

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.35.57 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.35.57 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.20.53 கோடி மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, இரத்தினகிரீஸ்வரர் கோயிலில் ரூ.9.10 கோடி மதிப்பீட்டிலான கம்பிவட ஊர்தியை பக்தர்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்து, செயல் அலுவலர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

கழக அரசு பொறுப்பேற்றத்திலிருந்து புதிய உத்வேகத்துடன் இந்து சமய அறநிலையத் துறையானது தன் ஆளுகைக்குட்பட்ட திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துதல், திருத்தேர் மற்றும் திருக்குளங்களை சீரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல், திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்து பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது.

கடந்த மே 2021 முதல் இதுநாள் வரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 1,921 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதோடு, திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.6,075 கோடி மதிப்பிலான 6,597.59 ஏக்கர் சொத்துகளும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் மேலும், புதிதாக 9 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டமும் 17 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 774 திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்னதான திட்டத்தின் வாயிலாக நாள் ஒன்றுக்கு சுமார் 92,000 பக்தர்கள் பயனடைந்து வருகின்றனர்.

9 திருக்கோயில்களில் 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்
ஈரோடு மாவட்டம், சென்னிமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ.7.53 கோடி மதிப்பீட்டில் மலைப்பாதை மேம்படுத்துதல் மற்றும் பக்தர்கள் உணவருந்தும் கூடம் கட்டும் பணிகள், கொடுமுடி, அருள்மிகு மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் திருக்கோயிலில் ரூ.64 இலட்சம் மதிப்பீட்டில் இளைப்பாறும் மண்டபம் மற்றும் பரிகார மண்டபம் கட்டும் பணிகள்; தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம், முத்தாரம்மன் திருக்கோயிலில் ரூ.6.43 கோடி மதிப்பீட்டில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகள்; திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம், அருள்மிகு காட்டழகிய சிங்கர் திருக்கோயிலில் ரூ.5.66 கோடி மதிப்பீட்டில் உணவருந்தும் கூடம், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மற்றும் விடுதி கட்டும் பணிகள்;

திருவண்ணாமலை, அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ரூ.2.95 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பசுக்கள் காப்பகம் கட்டும் பணி மற்றும் திருவண்ணாமலையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் மண்டல இணை ஆணையர் அலுவலகம் கட்டும் பணி; கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார், ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயிலில் ரூ.2.05 கோடி மதிப்பீட்டில் தங்கும் விடுதி கட்டும் பணி; விவேகானந்தபுரம், அருள்மிகு சக்கர தீர்த்த விஸ்வநாதர் திருக்கோயிலில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகம் கட்டும் பணி; சென்னை, மயிலாப்பூர், அருள்மிகு திருவள்ளுவர் திருக்கோயிலில் ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் வாகன மண்டபம், மடப்பள்ளி,

நூலகம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள்; கரூரில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் உதவி ஆணையர் அலுவலகம் கட்டும் பணி; நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, அருள்மிகு அத்தனூரம்மன் திருக்கோயிலில் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் ஐந்து நிலை இராஜகோபுரம் மற்றும் பிரகார மண்டபம் கட்டும் பணிகள்; என மொத்தம் ரூ.35.57 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

9 திருக்கோயில்களில் 13 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல்
மயிலாடுதுறை மாவட்டம், மேலையூர், பூம்புகார் கல்லூரியில் ரூ.3.99 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 24 வகுப்பறை கட்டடங்கள்; தேனி மாவட்டம், வீரபாண்டி, அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் ரூ.3.40 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டம் மற்றும் ரூ.1.16 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதி; பெரியகுளம், மூங்கிலனை காமாட்சியம்மன் திருக்கோயிலில் ரூ.3.30 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள திருமண மண்டபம்; மதுரை மாவட்டம், மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ரூ.2.08 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகம்;

சென்னை, கொசப்பேட்டை, கந்தசாமி ஆதி மொட்டையம்மன் திருக்கோயிலில் ரூ.1.55 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சந்தை; சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, கொப்புடைய நாயகியம்மன் திருக்கோயிலில் ரூ.1.50 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள சந்தை; விருதுநகர் மாவட்டம், பெத்தவநல்லூர், மாயூரநாதசுவாமி திருக்கோயிலில் ரூ.94.50 இலட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட திருமண மண்டபம்; குற்றாலம், ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரியில் ரூ.94 லட்சம் செலவில் புதியதாக கூடுதல் வகுப்பறை கட்டடங்கள்; கோயம்புத்தூர் மாவட்டம், மருதமலை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ.87.20 இலட்சம் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் அடிப்படை வசதிகள்;

சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் திருக்கோயிலில் ரூ.45 இலட்சம் செலவில் நிர்வாக அலுவலர் குடியிருப்பு, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ரூ. 35 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய குடில்; என மொத்தம் 20.53 கோடி ரூபாய் செலவிலான 13 முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

அய்யர்மலை, அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்தியை பக்தர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தல்

முதலமைச்சர் அவர்களால் கடந்த 8.3.2024 அன்று இராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர், அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோயிலில் ரூ.20.30 கோடி செலவில் பக்தர்களுக்கான காத்திருப்பு அறை, மின்தூக்கி, உணவகம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கட்டணச் சீட்டு மையம் போன்ற பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளுடன் திறந்து வைக்கப்பட்ட கம்பிவட ஊர்தியானது பக்தர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம், அய்யர்மலை, அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயிலானது 1,178 அடி உயரத்தில் அமைந்துள்ள மலைக்கோயிலாகும். இத்திருக்கோயிலுக்கு வருகைதரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பக்தர்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்திடும் வகையில் ரூ.6.70 கோடி செலவில் கம்பிவட ஊர்தி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.2.40 கோடி செலவில் காத்திருப்பு அறை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகள், கட்டணச் சீட்டு மையம் போன்ற அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒரு மணி நேரத்தில் 192 நபர்கள் பயணம் செய்திடும் வகையில் ரூ.9.10 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கம்பிவட ஊர்தி மற்றும் அடிப்படை வசதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று பக்தர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செயல் அலுவலர் நிலை-1 பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குதல்

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களை முறையாக பராமரித்தல், சொத்துகளை பாதுகாத்தல் மற்றும் நிர்வகிக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் செயல் அலுவலர் பணியிடங்களில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செயல் அலுவலர் (நிலை-1, நிலை-3 மற்றும் நிலை-4) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 159 நபர்களுக்கு ஏற்கனவே பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது, இந்து சமய அறநிலையத்துறையின் சார்நிலைப்பணியில் செயல் அலுவலர் நிலை-1 பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 10 நபர்களுக்கு முதலமைச்சர் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் .மு.பெ. சாமிநாதன், அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, பி.சந்தர மோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர் இரா.சுகுமார், தலைமைப் பொறியாளர் பொ. பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். காணொலிக் காட்சி வாயிலாக கரூர் மாவட்டத்திலிருந்து சட்டமன்ற உறுப்பினர்கள் இரா. மாணிக்கம், க. சிவகாமசுந்தரி, மாவட்ட ஆட்சித் தலைவர் மீ. தங்கவேல், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் கே. பரணிபால்ராஜ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.35.57 கோடி மதிப்பீட்டிலான 14 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Hindu Religious Foundation ,K. Stalin ,Chennai ,Hindu Religious Foundation Department ,Gambivada Orthi ,Ratnagriswarar Temple ,Dinakaran ,
× RELATED வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை ரூ.5,180...