×
Saravana Stores

தங்கத்தின் விலை குறைவதால் வயிறு நிரம்பி விடாது… ஒன்றிய அரசின் பட்ஜெட் ஏமாற்றத்தையே தருகிறது

மதுரை : தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக்காலம் முடியும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஒன்றிய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன்பிறகு தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்துள்ள நிலையில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 2024-25ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஒன்றிய அரசின் பட்ஜெட் நடுத்தர மற்றும் ஏழை மக்களிடம் மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது.

தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்க துணைத் தலைவர் டெம்பிள் சிட்டி குமார்:

தங்கத்திற்கு கொடுத்த முக்கியத்துவம் உணவு தொழிலுக்கும் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். விவசாய பொருட்களின் விலையை குறைக்கவும் முயற்சி எடுத்து இருக்கலாம். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்களின் விலைகளை குறைப்பதற்கான வரி விகிதத்தை குறைத்து இருக்க வேண்டும். தங்கத்தின் விலை குறைவதால் மட்டும் மக்களின் வயிறு நிரம்பி விடாது. ஏழை எளியவர்களின் வயிறு நிரம்ப வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை.

தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்க தலைவர் திருமுருகன்:

தொழில்துறைக்கு குறிப்பாக சிறு, குறு தொழில்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அவர்களை காப்பாற்றுவதற்கான எந்த ஒரு சாராம்சமும் இந்த பட்ஜெட்டில் இல்லை. குறிப்பாக சிறு, குறு தொழில்கள் பெற்றிருக்கின்ற கடனை கட்ட முடியாமல் 34 சதவீதம் மூடப்பட்டு விட்டன. இவர்களுக்கு மாற்று ஏற்பாடு எதுவும் ஏற்படுத்தவில்லை. மதுரை விமான நிலையம், எய்ம்ஸ் மருத்துவமனை, மெட்ரோ திட்டம் தொடர்பாக எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை.

வேறு எந்தவிதமான திட்டமும் வகுக்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். உலக புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் திருக்கோவிலுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை என்பது வேதனை அளிக்கின்றது. சுத்தம், சுகாதாரம், சாலை வசதி, நதிநீர் இணைப்பு போன்ற திட்டங்களும் வகுக்கப்படவில்லை. மதுரையில் ஸ்மார்ட் சிட்டி அறிவிக்கப்பட்டு வேலைப்பாடுகள் நடந்தாலும் முழுமை பெறாமல் இருக்கிறது. கிருதுமால் நதியை சரி செய்து படகு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தவில்லை. வைகை நதியை சுத்தப்படுத்துவதற்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுவர செயலாளர் சாய்சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயபிரகாசம்:இந்தியா முதுவதும் சுற்றுலா துறைக்கு பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பல கோவில்கள், மலை வாசஸ்தலங்கள், பல கடற்கரைகள், பல நீர்வீழ்ச்சிகள் உள்ள பகுதிக்கு எந்த திட்டமும் அறிவிக்காதது வருத்தமளிக்கிறது. ஜனாதிபதி உரையில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கான ராணுவ தொழிற்சாலை, மதுரை-தூத்துக்குடி இன்டஸ்டிரியல் காரிடாராக அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தை தருகிறது.சென்றஆண்டு வெள்ளத்தால் பாதிக்கபட்ட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தூத்துக்குடி,தென்காசி மாவட்டத்திற்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படாதது வருத்தமளிக்கிறது.

வேளாண் உணவு தொழில் வர்த்தக சங்க தலைவர் ரத்னவேல், செயலாளர் திருப்பதி ராஜன்:

ஜிஎஸ்டி வரியில் இரண்டாவது தலைமுறைச் சீர்திருத்தம் அறிவிக்கப்படாதது ஏமாற்றம் தருகிறது. முற்போக்கான வரிமுறையான ஜி.எஸ்.டி அமலாக்கத்தில் ஒன்றிய அரசு கடந்த 7 ஆண்டுகளாக வெளியிட்டு வரும் நூற்றுக்கணக்கான திருத்தங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் காரணமாகப் பெரும் குழப்பங்கள் நிலவுகின்றன. சட்டப்பிரிவுகளை முறையாகக் கடைபிடிக்க அதிக அளவில் செலவழிக்க வேண்டியுள்ளது. ஒன்றிய மறைமுக வரி வாரியத்தின் தலைவர் ஜி.எஸ்.டி வரி விதிப்பு அதிகாரியின் பொறுப்பற்ற முறையில் வணிகர்களுக்கு வரி கேட்பு மற்றும் அபராத நோட்டீஸ் அனுப்பக் கூடாது என எச்சரிக்கை கொடுத்துள்ள சூழ்நிலையில் ஜிஎஸ்டி 2.0 என்ற இரண்டாவது தலைமுறை சீர்திருத்தம் வெளிவரும் என்று பட்ஜெட்டில் அறிவிக்காதது ஏமாற்றமளிக்கிறது.

சமூக ஆர்வலர் நாகஜோதி:

ஒன்றிய பாஜ அரசு ஆட்சியை காப்பாற்றுவதற்காக, கூட்டணி கட்சியை சமரசப்படுத்தும் நோக்கில் பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு சிறப்பு நிதியை ஒதுக்கி உள்ளது. கடந்த முறையை போல், இம்முறையும் பட்ஜெட்டில் நிதியமைச்சரின் வார்த்தை ஜாலங்களே தென்பட்டுள்ளது. 2014ல் முதல் முதலில் பாஜ ஆட்சிக்கு வந்தபோது, ஆண்டுக்கு இரண்டு கோடிக்கு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அறிவித்தபடி, தற்போது வரை எவ்வளவு பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளனர் என்ற புள்ளிவிபரம் அவர்களிடம் இல்லை. இவ்வாறான சூழலில் தற்போதைய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள, ஐந்தாண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் வழங்கும் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது கேள்விக்குறியே.

ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் பால்ராஜ்:

பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய ஒரு நாட்டில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட சில மாநிலங்களை மட்டுமே மனதில் வைத்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு போன்ற எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ள மாநிலங்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது. பெயரளவில் கூட எந்த ஒரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை குறிப்பாக பல்வேறு வகையான சாலை பணிகள் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லை. இதனால் முன் மொழியப்பட்ட திட்டங்கள் நிலை என்ன என்பது தெரியாமல் உள்ளது. குறிப்பிட்ட சில மாநிலங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டும் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை புறக்கணிக்கும் வகையிலும் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய அரசின் பட்ஜெட் முழுக்க ஏமாற்றம் தரக்கூடியது.

சிபிஐ எம்.எல் மாநில குழு உறுப்பினர் மதிவாணன்:

தொழில்துறையில் பெரு முதலாளிகளுக்கான சலுகைகள் வாரி வழங்கப்பட்டிருந்தாலும், உள்நாட்டு தொழில் முனைவோருக்கு பெரியளவில் வரி சலுகைகள் அறிவிக்கப்படவில்லை. வெளிநாட்டு நிறுவனங்களின் கூடுதல் முதலீடுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டு உற்பத்தியானது வெளிநாடுகளைச் சார்ந்து இருக்கும் சூழலைய அதிகப்படுத்தும். பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறப்பு நிதியானது, கூட்டணி கட்சியை சமானதப்படுத்தும் முயற்சியாகவே உள்ளது.

கல்வி வளர்ச்சியில் தனியார் மயமாவதையே அதிகப்படுத்தும். மாணவர்களுக்கு கல்விக்கான ஊக்கத் தொகை மற்றும் உதவி தொகைகளின் அளவு குறைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் கல்வி கடன் வாங்கியே பயிலும் நிலை அதிகரிக்கும் சூழல் ஏற்படும். அது, ஏழைகளை அதிகம் பாதிக்கும். வேளாண்துறை அறிவிப்புகள் அனைத்தும் வெறும் கண்துடைப்பாகவே அமைந்துள்ளதால், கிராமப்புற வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது, வெறும் கட்டுக்கதையாகவே அமையும்.

அமெரிக்கன் கல்லூரி பொருளாதாரத்துறை தலைவர் சி.முத்துராஜா:

இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டம் வேளா ண்மை, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு, உள்ளார்ந்த வளர்ச்சி வழிவகைகள், உற்பத்தி மற்றும் பணித்துறை மேம்பாடு, நகர்பொருளாதார முன்னேற்றம், எரிசக்தி துறை முன்னுரிமை, கட்டமைப்பு சேவைகள் அடிப்படை மற்றும் பொருளாதார மேம்பாட்டு கொள்கை திட்டங்கள் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. வேளாண்மை துறையில் குறிப்பாக கிட்டங்கி வசதி, புதிய உற்பத்தி உத்திகள், விவசாயக் கடன் அட்டை, அங்காடிப்படுத்துதல் ஆகியவற்றில் தொழில்நுட்பம் பயன்படுத்த முடிவு செய்தல் மற்றும் தேசிய கூட்டுறவு கொள்கை உருவாக்கம் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தது.

அதிகரித்துவரும் நிதிப் பற்றாக்குறை, தினம் தினம் மக்களை மிரட்டும் உணவுப் பணவீக்கம், நீண்டகால நோக்கில் பார்க்கும்போது நம்பிக்கை இல்லாமல் இருப்பது, ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி சரியாக சென்றடைகிறதா, அப்பிடி இல்லையென்றால் அதைச் சரிசெய்ய தேவையான நடவடிக்கைகள் இல்லாதிருந்தால் மற்றும் வரவு செலவுத் திட்ட விவரங்களையும் நன்மைகளையும் பாமரமக்களுக்கு முழுவதுமாக கொண்டுசெல்ல புதிய வழிமுறைகள் செயல்படுத்தாமை இவைகள் எல்லாம் கவலை அளிக்கிறது.

The post தங்கத்தின் விலை குறைவதால் வயிறு நிரம்பி விடாது… ஒன்றிய அரசின் பட்ஜெட் ஏமாற்றத்தையே தருகிறது appeared first on Dinakaran.

Tags : Union govt ,Madurai ,Finance Minister ,Nirmala Sitharaman ,Union Government ,National Democratic Alliance ,Union ,Nirmala ,Dinakaran ,
× RELATED கூல் லிப்-க்கு கட்டுப்பாடு: ஒன்றிய அரசு பதில்தர ஐகோர்ட் கிளை ஆணை