×

ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தில் கோரிக்கை வைத்த 2 மாற்றுத்திறனாளிகளுக்கு சொந்த செலவில் உடனே சக்கர நாற்காலி வழங்கிய எம்எல்ஏ

*மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் நெகிழ்ச்சி

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் கோரிக்கை வைத்ததும் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு சொந்த செலவில் எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் சக்கர நாற்காலிகள் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட கீழ்கொத்தூர், வரதலம்பட்டு, பின்னத்துரை, ஓங்கபாடி ஆகிய ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் கீழ்கொத்தூர் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஒன்றிய கவுன்சிலர்கள் கணபதி, குமார் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர்கள் உதயகுமார், செல்வி பாலசுப்பிரமணி, அன்னலட்சுமி (பொறுப்பு), வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார். தாசில்தார் வேண்டா, பிடிஓ சுதாகரன் அனைவரையும் வரவேற்றனர்.

இதில், சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று ஆய்வு செய்தார். அப்போது, சின்னபுதூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி யசோதாம்மாள், கீழ்கொத்தூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி மகாராணி ஆகிய இருவரும் தங்களுக்கு சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என்று எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். உடனே அதிகாரிகளிடம் இருவருக்கும் சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என்று எம்எல்ஏ பரிந்துரைத்தார்.

அதற்கு அதிகாரிகள், சக்கர நாற்காலிகள் தேவை குறித்து பதிவு செய்து 2 மாதங்கள் கழித்து தான் கிடைக்கும் என்றனர். உடனே எம்எல்ஏ நந்தகுமார் தனது சொந்த செலவில் ₹15 ஆயிரம் மதிப்புள்ள 2 சக்கர நாற்காலிகளை உடனே வாங்கி 2 மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க ஏற்பாடு செய்தார். அதன்படி 2 மணி நேரத்திற்குள் 2 சக்கர நாற்காலிகள் வாங்கி அந்த முகாமிலேயே 2 மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கப்பட்டது.

மனு அளித்ததும் அந்த முகாமிலேயே 2 மாற்றுத்திறனாளிகளுக்கு சொந்த செலவில் சக்கர நாற்காலிகள் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, ஒவ்வொரு துறைக்கும் சென்று பொதுமக்கள் வழங்கி வரும் மனுக்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த முகாமில் 4 ஊராட்சிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை மனுக்களாக துறை சார்ந்த அதிகாரிகளிடம் நேரடியாக அளித்தனர். இதில், மொத்தம் பெறப்பட்ட 440 மனுக்களில் 20 மனுக்களை விரைந்து விசாரணை செய்து அந்த முகாமிலேயே எம்எல்ஏ நந்தகுமார் சான்றுகளை வழங்கினார்.

மேலும், முகாமில் தீர்க்க இயலாத மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் துறை சார்ந்த அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று எம்எல்ஏ கேட்டுக்கொண்டார். பொதுமக்கள் கொடுக்கும் பெரும்பாலான மனுக்கள் பட்டா கேட்டும், வீட்டுமனை, விபத்து காப்பீடு, முதியோர் உதவித் தொகை, மாற்றுத்திறனாளி உதவி தொகை உள்ளிட்ட மனுக்களையே அதிகளவில் கொடுத்துள்ளனர். அதற்கு விரைவில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இதில், மத்திய ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய சேர்மன் பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பிரகாஷ், குமார், அனைத்து துறை அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டுறவு சங்க கிளை கட்டிடம் திறப்பு

ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் ஊராட்சியில் நடந்த முகாமை எம்எல்ஏ நந்தகுமார் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார். அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கட்டிடம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். அதன்படி, ராஜாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தை பிரித்து அதன் கிளை கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட எம்எல்ஏ நந்தகுமார் புதிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கிளை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசினார்.

The post ஒடுகத்தூர் அடுத்த கீழ்கொத்தூர் கிராமத்தில் கோரிக்கை வைத்த 2 மாற்றுத்திறனாளிகளுக்கு சொந்த செலவில் உடனே சக்கர நாற்காலி வழங்கிய எம்எல்ஏ appeared first on Dinakaran.

Tags : MLA ,Odugathur ,Minister ,Kilikottur ,A.P. Nandakumar ,Vellore district ,Dinakaran ,
× RELATED கந்தர்வகோட்டையில் ஓவிய போட்டியில்...