×
Saravana Stores

காரிமங்கலத்தில் சாலையின் இருபுறமும் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

*ஆக்கிரமிப்பு அகற்ற வலியுறுத்தல்

காரிமங்கலம் : தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக, நாள்தோறும் பல்வேறு வாகனங்கள் சென்று வருகிறது.வாகனங்கள் பெருக்கம் ஒரு புறம் என்றாலும், சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ராமசாமி கோவில், கடைவீதி, பாலக்கோடு பிரிவு ரோடு, பஸ் ஸ்டாண்ட் ஆகிய பகுதிகளில் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ளது. ஏற்கனவே காரிமங்கலம் நகருக்குள் செல்லும் சாலை குறுகி உள்ளதால், வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

அதிக வாகனங்கள் நிறுத்துவதால், ராமசாமி கோயில் பகுதியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் சரக்கு வாகனங்கள் இஷ்டம் போல் பீக் ஹவர்ஸ் நேரத்திலேயே சரக்குவாகனங்களை சாலையிலேயே நிறுத்தி பொருட்களை இறக்கி வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் நீண்ட வரிசையில் கார், வேன், டூவீலர்கள் என அனைத்து வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது.

இந்த நிலைமைக்கு, சாலையின் இருபுறமும் சில கடை உரிமையாளர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் வாகன போக்குவரத்து கடும் பாதிப்பு அடைகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை பெயரளவிற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றினர். ஆனால் முழுமையாக அகற்றவில்லை. சாலை ஆக்கிரமிப்பு காரணமாக பல அரசு மற்றும் தனியார் பஸ்கள் காரிமங்கலம் நகருக்குள் செல்வதை தவிர்த்து வருகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம், காரிமங்கலம் நகரத்திற்குள் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதுடன் சாலையை மறித்து வாகனங்களை நிறுத்துவோர் மீது காவல் துறை நடவடிக்கை வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காரிமங்கலத்தில் சாலையின் இருபுறமும் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Dharmapuri district ,Ramasamy temple ,Kadavedee ,Palakode ,
× RELATED அரசு தொடக்க பள்ளிகளில் போலி...