×

ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் பட்ஜெட்டில் கூற முடியாது.. நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என்ற குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்!!

டெல்லி :நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என்று தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு பட்ஜெட்டில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், இ.கம்யூ., மார்க்சிஸ்ட், விசிக, மதிமுக எம்.பி.க்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். சமாஜ்வாதி, திரிணாமுல் காங்., ஆம் ஆத்மி உள்பட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து, பதாகைகளை ஏந்தியபடி, தமிழகத்திற்கு நிதி எங்கே, பழிவாங்கும் ஒன்றிய அரசு போன்ற கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் பேசிய மல்லிகார்ஜுன கார்கே,”நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட். பல்வேறு மாநிலங்கள் மத்திய பட்ஜெட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை; பல மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது,”என சாடினார். இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் நாங்கள் புறக்கணிக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் பட்ஜெட்டில் கூற முடியாது. திட்டமிட்டே எதிர்க்கட்சிகள் மத்திய அரசு மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். மாநில பெயர்களை குறிப்பிடவில்லை என்றால் அது புறக்கணிப்பு என்று ஆகிவிடாது,”இவ்வாறு தெரிவித்தார். இதனிடையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளிக்க முயன்றபோது எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.

The post ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் பட்ஜெட்டில் கூற முடியாது.. நாற்காலியை காப்பாற்றும் பட்ஜெட் என்ற குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் விளக்கம்!! appeared first on Dinakaran.

Tags : Nirmala Sitharaman ,DELHI ,Finance Minister ,National Congress Party ,Mallikarjuna Gharke ,India ,EU ,Dinakaran ,
× RELATED சமூக வலைதளங்களில் சரியான தகவலை பகிர்ந்திடுக: நிர்மலா சீதாராமன் பேச்சு