*வேளாண் இணை இயக்குனர் தகவல்
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் இதுவரையில் 60 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ள நிலையில் சாகுபடிக்கு தேவையான உரங்கள் கூட்டுறவு சங்கங்களில் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் இணை இயக்குனர் ஏழுமலை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி தி.மு.க தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர் விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து 3 ஆண்டு காலமாக கடந்தாண்டு வரையில் தூர்வாரும் பணியானது முடிக்கப்பட்டு விவசாயத்திற்காக உரிய நாளில் மேட்டூர் அணையானது குறித்த காலத்தில் திறக்கப்பட்டது. இந்நிலையில் குறுவை தொகுப்பு திட்டம், பயிர் கடன்கள் வழங்கியது.
விவசாயத்திற்கு தேவையான விதை மற்றும் உரங்கள் உரிய நேரத்தில் வழங்கப்பட்டது போன்றவற்றின் காரணமாக வழக்கத்தை விட கூடுதலான பரப்பளவில் குறுவை சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் வழக்கமான குறுவை சாகுபடி பரபரப்பளவு 97 ஆயிரம் ஏக்கர் என்ற நிலையில் கூடுதலாக 80 ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவு என மொத்தம் ஒரு லட்சத்து 77 ஆயிரம் ஏக்கரில் சாகுபடியினை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடப்பாண்டில் மேட்டூர் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் அளவிற்கு தேவையான நீர் இருப்பு இல்லாததால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு குறுவை சாகுபடியை தொய்வின்றி செயல்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக முதல்வர் டெல்டா மாவட்டங்களுக்கென பிரத்யேகமாக குறுவை சிறப்பு தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார்.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 92 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் நடப்பாண்டில் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.11 கோடியே 35 லட்சம் மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
மேலும் திருவாரூர் மாவட்டத்தில் போர்வெல்கள் இருந்து வரும் பகுதிகளில் விதை நாற்றாங்கால் அமைப்பது மட்டுமின்றி நேரடி விதைப்பு மற்றும் நடவு மற்றும் இயந்திர நடவு பணிகளிலும் விவசாயிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நன்னிலம், குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம் மற்றும் மன்னார்குடி ஆகிய ஒன்றியங்களில் தற்போது வரையில் 60 ஆயிரம் ஏக்கரில் இந்த குறுவை சாகுபடி பணி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் குறுவை சாகுபடிக்கு தேவையான விதை நெல்களான கோ55, ஆடுதுறை 53, ஏ.எஸ்.டி 16 மற்றும் டிபிஎஸ் 5 ஆகிய விதை நெல் ரகங்கள் கையிருப்பில் இருப்பதாகவும், சாகுபடிக்கு தேவையான காம்ளக்ஸ், யூரியா மற்றும் பொட்டாஷ் போன்ற உரங்கள் கூட்டுறவு சங்கங்களில் கையிருப்பு உள்ளது. உரங்களை விவசாயிகள் பெற்று பயனடையலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
The post இதுவரையில் 60 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி தேவையான அளவு உரங்கள் கையிருப்பு appeared first on Dinakaran.