×

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாளாக பெய்த மழையால் 97 வீடுகள் பகுதி சேதம்

*சுற்றுலா துறை அமைச்சர் தகவல்

ஊட்டி : ஊட்டியில் உள்ள தமிழகம் மாளிகையில் தென்மேற்கு பருவமழை பாதிப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பும் வகையில் நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மைத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில், நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, நீலகிரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு செயலாளர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்பி ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டு, நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெய்த தென்மேற்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடத்தில் கேட்டறிந்தனர். மேலும், மழை பாதிப்புக்களை உடனடியாக சீரமைப்பது குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்கள் சென்றடைய மேற்கொள்ள வேண்டி நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழையின் போது மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரை வழங்கினர்.
இதைத்தொடர்ந்து நீலகிரி எம்பி ஆ.ராசா செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பெய்து வந்தது. இந்த மழை காரணமாக பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன.

இதனை கேட்டறிந்த தமிழக முதல்வர், உடனடியாக என்னையும், சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரனையும் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரண பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து, நாங்கள் இருவரும் மாவட்டத்தில் மழை பாதிப்புகள் ஏற்பட்ட பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கினோம். மேலும், நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் குறித்தும், அதனை எதிர் கொண்டது மற்றும் தொடர்ந்து எதிர்கொள்வது குறித்தும் நீலகிரி மாவட்ட கலெக்டர், கண்காணிப்பு அலுவலர் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அரசு துறை அலுவலர்களுடன் ஆலோசனை இன்று (நேற்று) நடத்தப்பட்டது.வழக்கத்தை விட அதிகமாக இந்த ஆண்டு கன மழை பெய்த போதிலும், சேதம் குறைந்துள்ளதற்கு காரணம், இந்த மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள முன் எச்சரிக்கை நடவடிக்கை சிறப்பாகவும், துரிதமாகவும் எடுத்ததே காரணம். இது வரை நீலகிரி மாவட்டத்தில் அனைத்து நிவாரண பணிகள் சிறப்பாக நடந்துள்ளது.

மழையின் காரணமாக பந்தலூர் பகுதியில் உயிரிழந்த இருவரது குடும்பத்திற்கு தமிழக அரசின் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மழை அதிகமாக பெய்தால், கொசுக்கள் மூலமாக மலோியா உட்பட பல்வேறு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனை எப்படி சமாளிப்பது, பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், தற்போது தென்மேற்கு பருவமழை காரணமாக கூடலூர், பந்தலூர், ஊட்டி, குந்தா போன்ற பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழையின் போது குன்னூர் மற்றும் ஊட்டி ஆகிய பகுதிகள் பாதிக்க வாய்ப்புள்ளது.

எனவே, அப்போது மேற்கொள்ள வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தற்போது பெய்த மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒவ்வொரு துறை மூலம் கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை எங்களிடம் கலெக்டர் அளித்துள்ளார். இதனை நாங்கள் தமிழக முதல்வரிடம் கொண்டு சென்று வழங்கி அதனை விரைவாக பெற்று தருவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் எவ்வித அச்சமும் கொள்ள தேவையில்லை. அதிகாரிகள் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்வார்கள். அரசு உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு எம்பி ஆ.ராசா கூறினார்.

இதைத்தொடர்ந்து, சுற்றுலா துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையின் காரணமாக 97 வீடுகள் பகுதி சேதமடைந்துள்ளன. நான்கு வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளது.பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ.8 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 32 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டள்ளன. இதனை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் 140 இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. இந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டுள்ளது. மின் விநியாகமும் உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 8 இடங்களில் தடுப்புச்சுவர் இடிந்துள்ளது. அதனை மீண்டும் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து காற்று வீசி வருவதால், ஒரு சில இடங்களில் மரங்கள் விழுந்து மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மின் வாரியத்தினர் பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகள் முடிந்தவுடன் தமிழக அரசுக்கு அனுப்பப்படும். விபத்து அபாயம் உள்ள மரங்கள் அனைத்தும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் மரங்கள் என கண்டறியப்பட்டு உடனடியாக அவைகளை அகற்ற வனத்துறை அதிகாரிகள், ஆர்டிஓ அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார். ஆய்வு கூட்டத்தில் ஊட்டி எம்எல்ஏ கணேஷ், கூடுதல் கலெக்டர் கௌசிக், நீலகிரி எஸ்பி சுந்தரவடிவேல், வன அலுவலர் கௌதம், ஊட்டி நகராட்சி துணை தலைவர் ரவிக்குமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாளாக பெய்த மழையால் 97 வீடுகள் பகுதி சேதம் appeared first on Dinakaran.

Tags : Nilgiris district ,Tourism Minister ,Ooty ,Highways Department ,Agriculture Department, ,Revenue and Disaster Management Department ,Fire Department ,South West Monsoon ,Tamil ,Nadu ,House ,Ooty. Dinakaran ,
× RELATED காவலர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல வாகன சேவை