×

5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ராணிப்பேட்டையில் டாடா கார் உற்பத்தி ஆலை: அடுத்த மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்!!

சென்னை: உலகின் தலைசிறந்த சொகுசு கார்களில் ஒன்றான ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் தமிழ்நாட்டில் தயாராகிறது. தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கடந்த மார்ச் 13ம் தேதி (13.03.2024) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 5 ஆண்டுகளில் 9,000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும் டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் வளாகத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைய உள்ளது. இந்த புதிய தொழிற்சாலைக்கு அடுத்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்ட இருப்பதாக தொழில்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ரேஞ்ச் ரோவர், லேண்ட் ரோவர், டிஃபண்டர் போன்ற உயர் ரக சொகுசு கார்கள் ராணிப்பேட்டையில் தயாரிக்கப்பட உள்ளன. இதன் மூலம் வாகன தொழிற்சாலைகள் அமைவதன் மூலம் சொகுசு கார்களின் உற்பத்தி மையமாக ராணிப்பேட்டை மாவட்டம் உருவாக உள்ளது. டாடா மோட்டார்ஸ் ஆலை மூலம் பொறியியல் பட்டதாரிகளுக்கு கணிசமான ஊதியத்துடன் கூடிய தரமான வேலை கிடைக்கும்.

மேலும் இந்த புதிய தொழிற்சாலையில் ஆண்டுக்கு 2 லட்சம் ஜாகுவார் லேண்டு ரோவர் கார்களை தயாரிக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. படிப்படியாக உற்பத்தியை மேலும் அதிகரிக்கவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தயாராகும் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் மின்சார வாகனங்களையும் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

The post 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ராணிப்பேட்டையில் டாடா கார் உற்பத்தி ஆலை: அடுத்த மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்!! appeared first on Dinakaran.

Tags : Tata car manufacturing plant ,Ranipetta ,CM ,Chennai ,Jaguar Land Rover ,Tamil Nadu ,Chief Minister ,K. ,Stalin ,CM lays foundation ,
× RELATED தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம்...