×
Saravana Stores

ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற சென்ற போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

*அதிர்ச்சியில் அதிகாரிகள் திரும்பி சென்றனர்

அந்தியூர் : ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் ஊராட்சி, கள்ளிமாடைகுட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் முத்துசாமி (45), மகாலிங்கம் (42). இவர்கள் தங்களது விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அரசு சார்பில் வருவாய் துறையினருக்கு கிடைத்த உத்தரவின் பேரில் புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வட்டாட்சியர் கவியரசு சார்பில் 3 பொக்லைன் இயந்திரங்களுடன் அப்பகுதிக்கு 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்போடு சென்றனர்.

அந்தப்பகுதியில் 3.5 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்து வாழை மற்றும் தென்னை மரங்கள் பயிரிட்டுள்ளனர். அப்போது அந்த புறம்போக்கு நிலத்தை பயன்படுத்தி வருபவர்கள் தங்களது குடும்பத்தினருடன், எங்களுடைய நிலம் மட்டும் தான் புறம்போக்கில் உள்ளதா?, மற்றவர்கள் புறம்போக்கு நிலத்தை அனுபவித்து வரவில்லையா? என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும், புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்றினால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொள்வோம் என மிரட்டல் விடுத்து உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றினர். அப்போது, அங்கிருந்த போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அவர்களை தடுத்து மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில், எந்த ஒரு உடன்பாடும் ஏற்படாததால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியினை தேதி குறிப்பிடாமல் மற்றொரு நாளுக்கு வருவாய்த் துறையினர் தள்ளி வைத்தனர். இதனால், அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற வருவாய்த் துறையினர் 3வது முறையாக ஏமாற்றத்துடன் திரும்பினர்.

The post ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற சென்ற போது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி விவசாயிகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Andhiyur ,Muthuswamy ,Mahalingam ,Michael ,Palayam Panchayat ,Kallimadaikuttai ,Andhiyur, Erode district ,
× RELATED ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே...