×

தமிழகத்தின் மீது ஒன்றிய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது: பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றிய நிதி அமைச்சர் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில், தற்போதைய அறிவிப்புகள் மூலம் விவசாயிகள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காது. அடுத்ததாக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குதல், திறன் மேம்பாட்டிற்கான முயற்சிகள், சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்குவதில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

ஆனால் திறன் பயிற்சி வழங்குவதிலும், சிறு, குறு தொழில்களுக்கு கடன் வழங்குவதிலும் உள்ள செயல்முறை ரீதியிலான பிரச்னைகளை தீர்க்க வழிவகை காணப்படவில்லை. பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கணிசமான நிதியை ஒதுக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நிதியின் பெரும் பகுதி தற்போது ஆட்சியில் உள்ள அரசின் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யும் பீகார், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு மட்டுமே சலுகைகளை வழங்கியிருப்பது ஒன்றிய அரசின் பாரபட்சமான நிலையை காட்டுகிறது.

ஒட்டுமொத்த இந்திய திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை. நேரடி வரி விதிப்பில், புதிய வரி விதிப்பு முறையை பின்பற்றுவோருக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ.17,500 சேமிக்கக்கூடிய அளவில் வரி விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது இன்றைய சூழ்நிலையில் போதுமானதாக இல்லை. பொதுமக்கள் மத்தியில் இது ஒரு பெருத்த ஏமாற்றமே.

கோதாவரி-காவிரி இணைப்பு போன்ற திட்டங்கள் தமிழகத்தினால் முன்மொழிந்த போதிலும், மத்திய அரசு இதனை கண்டுகொள்ளாமல் விட்டது, தமிழக விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதேபோல் ஒன்றிய அரசு அறிவித்த ஓசூர், கோயம்புத்தூர் பாதுகாப்பு தளவாடங்கள் தொழில்வழி திட்டமும் அறிவிப்பு செய்ததோடு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டம் பற்றி ஜனாதிபதி அறிவிப்பில் அறிவித்ததோடு, இத்திட்டத்திற்கு தேவையான நிதியினை ஒதுக்காமல் தமிழகத்திற்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டியுள்ளது. வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக தமிழகத்திற்கு நிதி அறிவிக்கப்படாதது ஒரு பெருத்த ஏமாற்றமாகும். குறிப்பாக தமிழகத்திற்கு எந்தவிதமான திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை என்பது, தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.

The post தமிழகத்தின் மீது ஒன்றிய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது: பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து appeared first on Dinakaran.

Tags : Union government ,Tamil Nadu ,Edappadi Palaniswami ,CHENNAI ,AIADMK ,General Secretary ,Union Finance Minister ,Dinakaran ,
× RELATED மீனவர்கள் உண்ணாவிரதம் அதிமுக பங்கேற்பு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு