சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் பத்திரிகையாளர் நல வாரியத்தின் ஏழாவது கூட்டம் நடந்தது. பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து நிலையிலான அலுவலர்களையும் மஜிதியா ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், பத்திரிகையாளர் நலவாரிய உறுப்பினராக சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:
பத்திரிகையாளர்களின் நலன் காக்க, பத்திரிகையாளர் நல வாரியம் தோற்றுவித்து, 3270 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, வாரியத்தின் மூலமாக 97 பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் 38 பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப உதவி நிதி உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், முதல்வரின் ஆணைக்கிணங்க பத்திரிகையாளர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது அனைத்து வகையிலும் குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 1,20,000 லிருந்து ரூ.2,50,000 ஆக உயர்த்தப்படுவதாகவும் தெரிவித்தார்.
பத்திரிகையாளர் நல வாரியக் குழுவின் உறுப்பினர்களாக, அச்சு, காட்சி மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரிபவர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது குறித்து பரிசீலித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து, வாரியத்தின் மூலமாக வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை போன்றவை உயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கைகள் வந்திருக்கிறது. இக்கோரிக்கைகளை ஆய்வு செய்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வைத்திநாதன், வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை இணை செயலாளர் ஷ்ரவன் குமார் ஜடாவத், பத்திரிகையாளர் நல வாரியத்தின் அலுவல் சாரா உறுப்பினர்கள் ஆர்.எம்.ஆர்.ரமேஷ், பி.கோலப்பன், லட்சுமி சுப்பிரமணியன், எஸ்.கவாஸ்கர், எம்.ரமேஷ், அலுவல்சார் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
The post முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று பத்திரிகையாளர் கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: நலவாரிய கூட்டத்தில் அமைச்சர் சாமிநாதன் தகவல் appeared first on Dinakaran.