×

மின்கட்டண உயர்வு குறித்து போராட்டம் நடத்துவது வேடிக்கையானது அதிமுக ஆட்சியில் ஏற்படுத்திய உதய் மின் திட்டம் மூலமே மின் கட்டணம் உயர்வு: புள்ளி விவரங்களுடன் தங்கம் தென்னரசு விளக்கம்

சென்னை: தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக வீதிகளில் இறங்கி போராடுவது என்பது வேடிக்கையாக உள்ளது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மேலிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக உதய் மின்திட்டத்தில் தமிழகத்தை இணைக்க ஒப்புக் கொண்டார். அதற்கு பின் கடந்த 2017 ஜனவரி 9ம் தேதி அன்று, அன்றைய மின்துறை அமைச்சர் கையெழுத்திட்டு உதய் திட்டத்தில் தமிழ்நாட்டை இணைந்து கொண்டார்.

அதன்பிறகுதான் ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டண உயர்வுக்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் தெரிவித்து மிக முக்கியமான ஷரத்தில் கையெழுத்திட்டது. அதில் முக்கியமான ஷரத்து என்னவென்றால், ஒவ்வொரு ஆண்டும் மின்கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என்பதற்கான முழு உத்தரவாரத்தை அன்றைய அதிமுக அரசு அளித்தது. 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியின் திறனற்ற நிர்வாகத்தின் காரணத்தால் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் ஒட்டுமொத்த நிதி இழப்பு ரூ.94,312 கோடியாக இருந்தது.

அதன் பின்பு திமுக அரசு 31.3.2021ம் தேதியில் பெறுப்பேற்பதற்கு முன்பு வரை ரூ.1,13,266 கோடியாக இருந்தது. இந்த நிதி இழப்பிற்கு காரணம் யார் என்றால் அதிமுக அரசு மட்டுமே. அதை தொடர்ந்து திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு 2021ல் இந்த நிதி இழப்பினை 100 சதவீதம் ஏற்றுக் கொண்டது. அதுமட்டுமல்லாமல் நிதி இழப்பை முந்தைய அரசு வழங்காத காரணத்தால், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு இருந்த ரூ.43,493 கோடியான கடன் என்பது 10 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்ந்து 2021-22ல் திமுக ஆட்சி பொறுப்பிற்கு வருவதற்குள் கடன் மட்டும் ரூ.1,59,823 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த கடனிற்கு வட்டி கட்ட வேண்டும். 2011, 2012ல் திமுக அரசு இருந்த வரை ரூ.4,588 கோடியாக இருந்த வட்டி 259 சதவீதம் கூடி 2020-21ம் ஆண்டில் ரூ.16,511 கோடி வட்டி மட்டும் இதற்கு வந்துள்ளது. இந்த சூழ்நிலையில்தான் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் நிதியை இந்த அளவிற்கு மோசமான நிலையில் அதிமுக அரசு வைத்திருந்தது. இந்த காரணத்தால் ஏற்பட்ட தொடர்ச்சியான இழப்புகளை சரிகட்டுவதற்கு தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

* மாதம்தோறும் மின்கட்டணம்…
மாதம்தோறும் மின்கட்டணம் செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு, ‘‘இத் திட்டத்துக்கு ஸ்மார்ட் மீட்டர் தேவைப்படுகிறது. ஒவ்வொரு வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் வழங்குவதற்கான கொள்முதல் ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது. அதற்கான விலைபுள்ளிகளை ஆராய்ந்து இறுதி செய்த பிறகு நிச்சயம் இத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்’’ என்று அமைச்சர் கூறினார்.

The post மின்கட்டண உயர்வு குறித்து போராட்டம் நடத்துவது வேடிக்கையானது அதிமுக ஆட்சியில் ஏற்படுத்திய உதய் மின் திட்டம் மூலமே மின் கட்டணம் உயர்வு: புள்ளி விவரங்களுடன் தங்கம் தென்னரசு விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Uday Een ,AIADMK ,Golden State ,Chennai ,Tamil Nadu ,Finance Minister ,Thangam Thannarasu ,O. Panneerselvam ,minister ,Jayalalithaa ,Uday ,
× RELATED கள்ளக்குறிச்சி வழக்கை சிபிஐக்கு...