×

அடையாளத்தை உறுதி செய்ய என்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறீர்கள் ஏழை விவசாயிகளுக்குதான் ஆதாரா தேர்வர்களுக்கு கட்டாயமில்லையா? நீட் ஆள்மாறாட்ட வழக்கில் ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி

சென்னை: ஆதார் விவரத்தை ஏழை விவசாயிகளிடம் மட்டும் தான் கேட்பீர்களா? தேர்வு எழுதுவோரின் அடையாளத்தை உறுதி செய்ய என்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறீர்கள் என நீட் முறைகேடு வழக்கில் ஐகோர்ட் கிளை சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2019ல் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த தருண் மோகன், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘சிபிசிஐடி சிறப்பு குழு அமைத்து விசாரிக்க நடவடிக்கை எடுத்ததா’’ என நீதிபதி கேட்டார். இதற்குரிய பணிகள் நடப்பதாக சிபிசிஐடி தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, ‘‘ஐகோர்ட் உத்தரவிட்ட பிறகும் இதுவரை ஏன் சிறப்பு குழு அமைக்கவில்லை? 2019ல் பதிவு செய்யப்பட்ட வழக்கில் 5 ஆண்டுகளாக விசாரணை தொய்வாக உள்ளதை ஏற்க முடியாது.

எனவே இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்க நேரிடும். சிபிசிஐடி கேட்ட ஆவணங்கள் தேசிய தேர்வு முகமை தரப்பில் வழங்கப்பட்டதா’’ என்றார். அப்போது சிபிசிஐடி கேட்ட ஆவணங்கள் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. ‘‘ஒரு மாணவருக்காக 3 பேர் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களுடைய ஆதார் விவரங்கள் வழங்கப்பட்டதா’’ என நீதிபதி கேட்க, ஆதார் அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளதாக ஒன்றிய அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதைக் கேட்டு கோபம் அடைந்த நீதிபதி, ‘‘ஏழை விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்க ஆதார் அவசியம். ஆனால் மருத்துவக்கல்விக்கு தேர்வு எழுத வந்தவர்களுக்கு ஆதார் அவசியமில்லையா? இதுதான் உங்களுடைய கொள்கை முடிவா? விவசாயிகளுக்கு மட்டும் தான் ஆதார் அவசியமானது என உச்ச நீதிமன்றம் உங்களிடம் தெரிவித்துள்ளதா? தேர்வு எழுத வரும் மாணவர்களை அனைத்துவிதமான சோதனையும் செய்கிறீர்கள்.

ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுத வருபவர்களை சோதனை செய்வதற்கான போதிய தொழில்நுட்பங்கள் தேசிய தேர்வு முகமையிடம் இல்லையா? சிபிசிஐடி போலீசாரின் திறமையற்ற விசாரணையை தேசிய தேர்வு முகமை சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. எனவே, இந்த வழக்கின் தற்போதைய நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அந்த அறிக்கை திருப்தி அளிக்காவிட்டால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ எனக் கூறி விசாரணையை தள்ளி வைத்தார்.

The post அடையாளத்தை உறுதி செய்ய என்ன தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறீர்கள் ஏழை விவசாயிகளுக்குதான் ஆதாரா தேர்வர்களுக்கு கட்டாயமில்லையா? நீட் ஆள்மாறாட்ட வழக்கில் ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Aadhaar ,NEET ,iCourt branch ,Dinakaran ,
× RELATED ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கும்,...