×

அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் மூலம் 19,16,292 தொழிலாளர்களுக்கு ரூ.1,665 கோடி நலத்திட்ட உதவி: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

சென்னை: தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களின் செயல்பாடுகள் குறித்து தொழிலாளர் துறையின் உயர் அலுவலர்களின் திறனாய்வு கூட்டம் சென்னை டிஎம்எஸ் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. தொழிலாளர் ஆணையர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பேசியதாவது:

தொழிலாளர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 20 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் 22.7.2024 தேதி வரை மொத்தம் 44,61,486 தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்து பயன்பெற்று வருகின்றனர். மாவட்ட அளவில் வாரிய பணிகளான பதிவு, புதுப்பித்தல், கேட்பு மனுக்கள் பெறுதல் மற்றும் ஒப்பளிப்பு செய்து பணப்பயன்களை தொழிலாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்புதல் ஆகிய பணிகள் 40 தொழிலாளர் உதவி ஆணையர்களால் (சமூக பாதுகாப்பு திட்டம்) இணையதள வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம், விபத்து மரணம், இயற்கை மரணம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் புதியதாக 16,78,138 தொழிலாளர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ளனர்.

மேலும் 19,16,292 தொழிலாளர்களுக்கு ரூ.1,664.71 கோடி நலத்திட்ட உதவிகள் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 8.6.2024 அன்று பணித்திறனாய்வு கூட்டம் நடந்தது. அதில் மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக நிலுவையில் உள்ள கேட்பு மனுக்களை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து 3,71,922 தொழிலாளர்களுக்கு ரூ.216.10 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. பிற துறைகளுடன் சரிபார்ப்பு பணிகளுக்காக நிலுவையில் உள்ள கேட்பு மனுக்களையும், விவரங்களை விரைவில் பெற்று காலதாமதமின்றி விரைந்து முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் மூலம் 19,16,292 தொழிலாளர்களுக்கு ரூ.1,665 கோடி நலத்திட்ட உதவி: அமைச்சர் சி.வி.கணேசன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Welfare Boards ,Minister ,C. V. Ganesan ,Chennai ,Labour Welfare ,and Skills Development ,C. V. ,Ganesan ,Labour Department ,Non-Organization Labour Welfare Boards ,TMS ,Organised ,Workers' Welfare Boards ,Dinakaran ,
× RELATED வீடு கட்டுவதற்கான நிதி உதவி திட்டம்...