- -பங்களாதேஷியர்
- கொல்கத்தா
- சதாம் சர்தார்
- மேற்கு மாநிலத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டம்
- பாலாஷ்
- சந்திரா
- தாலி
- பருய்பூர் மாவட்டம்
- நதியா
- தின மலர்
கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த போலி சிலை கடத்தல் குற்றவாளி சதாம் சர்தார் மற்றும் அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வந்தனர். இதுகுறித்து பருய்பூர் மாவட்ட எஸ்பி பலாஷ் சந்திர தாலி கூறுகையில், ‘நாடியாவை சேர்ந்த ஒருவரிடம் ரூ. 12 லட்சம் மோசடி புகாரின் அடிப்படையில் போலி சிலை கடத்தல் கும்பலை சேர்ந்த சதாம் சர்தார் மற்றும் அவரது சகோதரர் சைருல் மற்றும் கூட்டாளிகளை தேடி வந்தோம். சதாம் சர்தாரின் வீட்டை சோதனை நடத்திய போது, சதாமின் குடும்பத்தினர், அவரது சகோதரர் சைருல் ஆகியோர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்த சம்பவத்தில் மூன்று போலீசார் காயமடைந்தனர். தொடர் சோதனை நடத்தியபோது, சர்தாரின் வீட்டிற்கு கீழே சுரங்கப்பாதை இருப்பதை கண்டுபிடித்தோம். அந்த சுரங்கப்பாதைக்குள் சென்றால், இந்தியா-வங்கதேச எல்லை மற்றும் சுந்தர்பன் டெல்டா அருகே பாயும் மட்லா நதியுடன் இணைகிறது. இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி சதாம் சர்தார் கடத்தல் தொழிலை செய்து வந்துள்ளார். செங்கல் மற்றும் கான்கிரீட்டால் கட்டப்பட்ட இந்த சுரங்கப்பாதை சுமார் 40 மீட்டர் நீளமும், 8 முதல் 10 அடி அகலமும், 5 முதல் 6 அடி உயரமும் கொண்டது. குறைந்த விலையில் தங்க சிலைகளை விற்பதாக கூறி பலரிடம் சதாம் சர்தார் கும்பல் மோசடி செய்துள்ளது. இவ்வழக்கில் சதாமின் மனைவி மசூதா சர்தார், சைருல் சர்தாரின் மனைவி ரபேயா சர்தார் உட்பட சிலரை கைது செய்துள்ளோம்.
தலைமறைவாக உள்ள சதாம் சர்தார் மற்றும் அவரது சகோதரரை தேடி வருகிறோம்’ என்றார். மேற்கண்ட சுரங்கப்பாதை கடத்தல் விவகாரம் மேற்குவங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் வெளியிட்ட பதிவில், ‘சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்ட செய்தியை கேட்டு கவலை அடைந்துள்ளேன். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அரசியல் பிரமுகர்களால் நடத்தப்படும் இதுபோன்ற குற்றச் செயல்களின் நோக்கம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடப்பதை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும். சர்வதேச எல்லையில் நடக்கும் திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை மாநில அரசு அளிக்க வேண்டும்’ என்று கோரியுள்ளார்.
The post மேற்குவங்க மாநிலத்தின் இந்திய – வங்கதேச எல்லையில் வீட்டிற்குள் சுரங்கப்பாதை அமைத்துள்ள கடத்தல் கும்பல் appeared first on Dinakaran.