×

பெரியகுளம் அருகே கல்லாறு மலைக்கிராமத்தில் சாலையை ஆக்கிரமித்து சோலார் மின்வேலி

*அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பெரியகுளம் : பெரியகுளம் அருகே கல்லாறு மலைக்கிராமத்தில் சாலையை ஆக்கிரமித்து போடப்பட்ட சோலார் மின் வேலியால் உயிர்ப்பலி ஏற்படும் அபாயம் உள்ளதால், வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மின் வேலியை அகற்ற நடவடிக்கை எடுக்க மலை கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட வெள்ளகெவி ஊராட்சியின் சின்னூர் மலைக் கிராமம் உள்ளது. இந்த மலைக் கிராம மக்கள் சாலை வசதி இல்லாத நிலையில், கல்லாற்று பகுதியின் வழியாக பெரியகுளம் வந்து தான் அவர்கள் வெளியூருக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இந்த நிலையில், கல்லாறுப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் வனவிலங்குகள் புகுந்து விவசாய விளை பொருட்களை சேதப்படுத்துவதை தவிர்ப்பதற்காக சோலார் மின் வேலி அமைத்துள்ளனர். ஆனால் சில விவசாயிகள் சாலையை ஆக்கிரமித்து சோலார் மின் வேலி அமைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சோலார் மின்வேலியில் 24 மணி நேரமும் மின்சாரம் செல்வதால் மலைக் கிராமத்திற்கு செல்லும் சிறியவர் முதல் பெரியவர் வரை அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலை உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்தப் பகுதியில் தான் மலைக் கிராம மக்களுக்கு நியாய விலைப் பொருட்கள் வழங்கப்படுவதாகவும், அப்பொழுது சிறுவர் சிறுமியர் சோலார் மின் வேலியை தொட்டால் உயிர்ப்பலி ஏற்படும் நிலை உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். எனவே சோலார் மின் வேலியால் உயிர் பலி ஏற்படும் முன் சாலையை ஆக்கிரமித்து அமைத்துள்ள மின்வேலியை அகற்றி விவசாயிகள் பட்டா நிலத்திற்குள் மின் வேலி அமைக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பெரியகுளம் அருகே கல்லாறு மலைக்கிராமத்தில் சாலையை ஆக்கிரமித்து சோலார் மின்வேலி appeared first on Dinakaran.

Tags : Kallaru hill village ,Periyakulam ,Dinakaran ,
× RELATED பெரியகுளம் அருகே சீலிங் ஃபேனில் சீறிய 6 அடி நீள பாம்பு