×
Saravana Stores

கேத்தி அருகே அல்லாஞ்சி பகுதியில் ரூ.24.57 கோடியில் குடியிருப்புகளை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார்

*அமைச்சர் ராமச்சந்திரன், எம்பி ஆ.ராசா பங்கேற்பு

ஊட்டி : கேத்தி அருகே அல்லாஞ்சி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.24.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடியிருப்பு வீடுகளை காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராமச்சந்திரன், எம்பி ஆ.ராசா பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தலைமைச்செயலகத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில், கேத்தி பேரூராட்சிக்கு உட்பட்ட அல்லாஞ்சி பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் ரூ.24.57 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட குடியிருப்பு வீடுகளை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து, தமிழ்நாடு சுற்றுலா துறை ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து, குடியிருப்புகளை பார்வையிட்டனர். நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து, அதிகாரிகள் கூறியதாவது:

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலமாக நீலகிரி மாவட்டம், கேத்தி பேரூராட்சி பகுதியில் 1623 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அல்லாஞ்சி திட்டப்பகுதியில் பிரதான் மந்திரி ஆவாஸ்யோஜனா எனும் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அனைத்து அடிப்படை வசதிகளுடன் தரைதளத்துடன் கூடிய 180 குடியிருப்புகளுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய ஒப்புதல் வழங்கப்பட்டு ரூ.24.57 கோடி மதிப்பில் ஒவ்வொரு குடியிருப்பும் தலா ரூ.13.60 லட்சம் மதிப்பில் மொத்தம் 180 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது.

இந்த குடியிருப்புகள் 391 சதுரடி பரப்பளவில், 3630 சதுரமீட்டர் அளவும், ஒரு வரவேற்பறை, ஒரு படுக்கை அறையும், ஒரு சமையலறை, ஒரு குளியலறை, ஒரு கழிவறை மற்றும் ஒரு பயன்பாட்டு பகுதியுடன் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பும் 2 கதவுகள், 2 பிவிசி கழிவறை கதவுகள், 3 யுபிவிசி சன்னல்கள், 2 கழிவறை வெண்டிலேட்டர்களுடன் கட்டப்பட்டுள்ளது.

வீட்டின் உட்புறப்பகுதியில் வெள்ளை நிறப்பூச்சும், வெளிப்புற பகுதியில் வண்ண சிமெண்ட் பூச்சும் செய்யப்பட்டுள்ளது. மேலும் கேத்தி பேரூராட்சி மூலமாக குடிநீர் இணைப்பு பெறப்பட்டு, இந்த வளாகத்தில் அமைக்கப்படவுள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டி வாயிலாக குடிநீர் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு குடியிருப்பிலிருந்தும் வெளியேறும் கழிவுநீர் உரிய சிறு கழிவுநீர் தொட்டி வாயிலாக சேகரிக்கப்படுகிறது.

இந்த திட்டப்பகுதியில் கட்டப்பட்ட 80 குடியிருப்புகளுக்கு மாவட்ட கலெக்டர் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளுக்கு குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. தமிழ்நாடு தேயிலை தோட்டக்கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்காக குடியிருப்பிற்காக நிர்ணயிக்கப்பட்ட பயனாளி பங்களிப்பு தொகையை பெற்றுக்கொண்டு இத்திட்டப்பகுதியில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்து தருவதாக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணையின் படி முதற்கட்டமாக 23 பயனாளிகளின் பங்களிப்பு தொகையான ரூ.79 லட்சத்து 35 ஆயிரம் பெறப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெற்ற பயனாளிகளில் 64 நபர்கள் முழுமையான பயனாளி பங்களிப்புத் தொகையை செலுத்தியுள்ளனர். மீதமுள்ள 116 குடியிருப்புகளுக்கான பயனாளிகளின் பங்களிப்புத்தொகை பெற வேண்டியுள்ளது. இந்த திட்டப்பகுதியில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீர் இணைப்பிற்கான பணிகளை கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் மூலம் செயல்படுத்த வேண்டியுள்ளது. இப்பணிக்காக ரூ.47 லட்சம் வாரியத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டப்பகுதிக்கான மின்மாற்றி, மின் கம்பம், மின் கம்பிகள் மற்றும் தெரு விளக்குகள் அமைக்க செயல் அலுவலர், கேத்தி பேரூராட்சி அவர்களுக்கு ரூ.12.83 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

இந்நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் சதீஸ், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ராஜா, கேத்தி பேரூராட்சி தலைவர் ஹேமமாலினி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேற்பார்வை பொறியாளர் ஜெகநாதன், நிர்வாக பொறியாளர் மாடசாமி, உதவி நிர்வாக பொறியாளர் சுதர்சன், திட்டக்குழு உறுப்பினர் ஜார்ஜ், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நட்ராஜ், உதவி பொறியாளர் விவேக், குன்னூர் வட்டாட்சியர் கனி சுந்தரம், கேத்தி லாரன்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post கேத்தி அருகே அல்லாஞ்சி பகுதியில் ரூ.24.57 கோடியில் குடியிருப்புகளை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Allanchi ,Kethi ,Minister ,Ramachandran ,A. Raza ,Ooty ,Stalin ,Tamil Nadu Urban Habitat Development Board ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED புதிய தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க...