ஈரோடு : மகளின் கொலை வழக்கினை முறையாக விசாரிக்கக்கோரி குழந்தைகளுடன் தந்தை கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு சூரம்பட்டி மாரப்பகவுண்டர் முதல் வீதியை சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி கோகிலவாணி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கோகிலவாணிக்கு மேட்டூரை சேர்ந்த வேறொரு நபருடன் கள்ளத்தொடர்பு இருந்ததை கணவர் சென்னியப்பன் கண்டித்து வந்துள்ளார்.
ஆனால், தொடர்பை துண்டிக்காமல் இருந்து வந்ததால் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் வீட்டில் இருந்த மனைவி கோகிலவாணியின் தலையில் கல்லை போட்டு கணவர் சென்னியப்பன் கொலை செய்தார். இது தொடர்பாக ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சென்னியப்பனை கைது செய்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கின் பின்னணியில் வேறு சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், நிலம் விற்ற வகையில் வந்த பணத்திற்காக இக்கொலை நடந்துள்ளதால் முறையாக விசாரிக்க வேண்டும் என்றும் கூறி நேற்று கொலை செய்யப்பட்ட கோகிலவாணியின் தந்தை சண்முகசுந்தரம் 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டார்.
The post மகளின் கொலை வழக்கை முறையாக விசாரிக்க கோரி குழந்தைகளுடன் தந்தை கலெக்டர் ஆபீசில் தர்ணா appeared first on Dinakaran.