×

கலெக்டர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய தொழிலாளி

*ஆவணங்களை எரிக்க முயன்றதால் பரபரப்பு

நாகர்கோவில் : மகளுக்கு திருமண உதவித்தொகை விண்ணப்பித்து கிடைக்கவில்லை என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய தொழிலாளி ஆவணங்களை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.குமரி மாவட்டம் திருவட்டாறு, செங்கோடி, மதிலகம் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் நேற்று காலை நாகர்கோவிலில் உள்ள குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். பின்னர் அவர் அங்கிருந்து மாமரத்து அடியில் அமர்ந்து பிச்சை எடுப்பதாக கூறி பிளக்ஸ் போர்டு வைத்து போராட்டத்தை நடத்தினார்.

தமிழக அரசால் தொழிலாளியான எனக்கு வழங்கப்பட அரசு கட்டுமான தொழிலாளர் நலவாரிய அட்டையை பயன்படுத்தி இதனால் வரை எனக்கு எந்த உதவியும் தரப்படவில்லை. இந்த நிலையில் மகள் திருமண உதவித்தொகை பெறுவதற்கு தொடர்பாக விதிகளின் படி விண்ணப்பித்து எனக்கு இதுவரை உதவித்தொகை தராமல் அரசு அலுவலர் தேவையில்லாமல் அலைக்கழித்து வருகிறார்.

எனவே தொழிலாளர் நல அதிகாரி மீது நடவடிக்கைக்கு எடுக்க வேண்டும், மகளிர் திருமண உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தி அவர் தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது போலீசாருடன் அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவர், தன்னிடம் இருந்த நலவாரிய அட்டை உள்ளிட்ட ஆவணங்களை தீயிட்டு கொளுத்த முயன்றார்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அதனை தடுத்தனர். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post கலெக்டர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்திய தொழிலாளி appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kumari district ,Thiruvattaru ,Sengodi ,Mathilagam ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார...