×

ஊட்டியில் வரலாறு காணாத சூறாவளி காற்று வீசியது

* 48 மரங்கள் விழுந்தன

* போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி : ஊட்டியில் வரலாறு காணாத வகையில் சூறாவளி காற்று வீசி வருவதால் 48 இடங்களில் மரங்கள் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்து வந்தது.

கடந்த 2 நாட்களாக மழை குறைந்த நிலையில், நேற்று முன்தினம் காலை முதல் ஊட்டி, குந்தா குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வரலாறு காணாத காற்று வீசி வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் இரவு முதல் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் தலைக்குந்தா முதல் ஷூட்டிங் மட்டும் வரை சுமார் 4 இடங்களில் மரங்கள் விழுந்தன. கலெக்டர் பங்களாவிற்கு செல்லும் வழித்தடத்தில் 2 மரங்களும், தமிழகம் சாலையில் 3 மரங்களும், மேரிஸ் ஹில், தீட்டுக்கல், முள்ளிக்கொரை, ரோஜா பூங்கா செல்லும் சாலை, ஊட்டி கார்டன் மந்து ஆகிய பகுதிகளில் தலா ஒரு மரமும் விழுந்தன.

ஊட்டி-குன்னூர் ரயில் பாதையில் பெர்ண் ஹில், கேத்தி மற்றும் லவ்டேல் பகுதிகளில் மரங்கள் சாய்ந்தன. நுந்தளாவில் ராட்சத மரம் விழுந்து கோயில் மற்றும் சாலை சேதமடைந்தது. தீட்டுக்கல் பகுதியில் மினி பஸ் மீது மரம் இருந்து மினி பஸ் சேதம் அடைந்தது. தமிழகம் மந்து சாலையில் 4 கார்கள் சேதம் அடைந்தன. தீட்டுக்கல் பகுதியில் லாரி மீது மரம் விழுந்து லாரி சேதம் அடைந்தது. ஊட்டி எட்டினர் சாலையில் மரம் விழுந்ததில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஊட்டி-மஞ்சூர் சாலையில் காந்தி பேட்டையில் மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் விழுந்தும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து பலத்த காற்று வீசி வரும் நிலையில், பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் விழுந்த வண்ணம் உள்ளன.

இவைகளை அகற்றும் பணியில் தீயணைப்புத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மரங்களுக்கு அடியில் நிற்க வேண்டாம். வாகனங்களை நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மழை குறைந்த நிலையில், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

ஆனால் தற்போது பலத்த சூறாவளி காற்றுடன் மீண்டும் ஊட்டியில் மழை துவங்கியுள்ளதால் பொதுமக்கள் கடும் அச்சத்திற்கு உள்ளாகி உள்ளனர். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு 2014ம் ஆண்டு இதேபோல ஊட்டி மற்றும் குந்தா பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசியது. அப்போது 300க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. அந்த மரங்களை அகற்ற 2 நாட்கள் ஆனது. அதன் பின்னர், தற்போதுதான் வரலாறு காணாத வகையில் பலத்த சூறாவளி காற்று வீசியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு முதல் வீசிய காற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் 19 இடங்களிலும், குன்னூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் 15 இடங்களிலும், ஊட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 11 இடங்களிலும், குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 3 இடங்களிலும் மரங்கள் விழுந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இருளில் மூழ்கிய ஊட்டி

மரங்கள் மின் கம்பங்களின் மீதும், குடியிருப்புகள் மற்றும் வாகனங்களின் மீதும் விழுந்துள்ளன. இதனால், சில இடங்களில் குடியிருப்புகள், வாகனங்கள் மற்றும் மின் கம்பங்கள் சேதமடைந்தன. எனினும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. அதே சமயம், மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததால், நேற்று முன்தினம் இரவு முதல் ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் தடை ஏற்பட்டு ஊட்டி நகரம் இருளில் மூழ்கியது.

பள்ளிகளுக்கு விடுமுறை

பலத்த சூறாவளி காற்று வீசி வரும் நிலையில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி ஊட்டி, குந்தா, கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நேற்று ஒருநாள் விடுமுறை அளித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டார்.

40 வீடுகளின் கூரைகள் சேதம்

பலத்த காற்று காரணமாக பல இடங்களில் வீடுகளின் கூரைகள் பெயர்ந்து விழுந்தன. காற்றின் வேகத்தால் ஊட்டி அருகில் உள்ள கோயில்மேடு கிராமமே உருக்குலைந்து காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று முன்தினம் இரவில் இருந்து இடைவிடாமல் சூறாவளி காற்று வீசியது. காற்றின் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் வீடுகளின் கூரைகள் பெயர்ந்தது. கூரை ஓடுகள் தரையில் கிடக்கின்றன.

சுமார் 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. மரங்களும் சாய்ந்துள்ளன. கிராம மக்கள் கூறுகையில், ‘‘கூலி தொழிலாளர்கள் அதிகம் வாழும் எங்கள் கிராமத்தில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் கிடையாது. இருந்த வீட்டையும்‌ காற்றால் இழந்து தவிக்கிறோம். அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

The post ஊட்டியில் வரலாறு காணாத சூறாவளி காற்று வீசியது appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiris… ,Dinakaran ,
× RELATED காவலர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல வாகன சேவை