×
Saravana Stores

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் துல்லியமாக செயல்படும் இதய துடிப்பு சிக்கல்களை கண்டறியும் ஐசிடி கருவி

அசாதாரண அல்லது ஒழுங்கற்ற இதய துடிப்புகள், அரித்மியா என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன. நமது இதய துடிப்புகளை ஒருங்கிணைக்கும் மின் தூண்டுதல்கள் சரியாக வேலை செய்யாதபோது அவை நிகழ்கின்றன. இதன் விளைவாக நமது இதயம் மிக வேகமாக அல்லது மிக மெதுவாக அல்லது ஒழுங்கற்ற முறையில் துடிக்கலாம். படபடப்பு, தலைசுற்றல், மூச்சுத்திணறல், மார்பு வலி அல்லது மயக்கம் ஆகியவை அரித்மியாவின் அறிகுறிகளாகும்.

எனினும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பினால் உயிருக்கு ஆபத்து என பரிசோதனையில் கண்டறியப்பட்டாலும், அவற்றின் பல வகைகளை திறம்பட கையாளலாம் அல்லது சிகிச்சை அளிக்கலாம். அத்தகைய ஒழுங்கற்ற இதயத்துடிப்புள்ள நபர்கள் இயல்பான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முறையான சிகிச்சை வழிவகுக்கிறது. இந்நோயாளிகள் தங்கள் இதய துடிப்பு மற்றும் ஒட்டுமொத்த இதய ஆரோக்கியத்தை கவனமாக கண்காணிப்பது அவசியம். அதுமட்டுமின்றி ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி போன்ற சரியான வாழ்க்கை முறை மாற்றங்களையும் அவர்கள் செயல்படுத்த வேண்டும். இதுகுறித்து, எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை இதய அறிவியல் துறை இயக்குநர் முரளிதரன் கூறியதாவது:

இதயத்துடிப்பு சீரற்றதாக இருந்தால் அதனை கண்காணிக்க பேஸ்மேக்கரை பொருத்தி கண்காணிப்பது வழக்கம். பேஸ்மேக்கர் என்பது ஒரு சிறிய பேட்டரி மூலம் இயங்கும் மருத்துவ சாதனமாகும். இது மார்பகத்தின் மேற்பகுதியில் தோலின் கீழ் பொருத்தப்படுகிறது. இது லீட்ஸ் எனப்படும் மெல்லிய இன்சுலேட்டட் கம்பிகளால் இதயத்துடன் இணைக்கப்படுகிறது. பொருத்தப்படும் பேஸ்மேக்கர் இதயத்துடிப்பை தொடர்ந்து கண்காணிக்கிறது. உலகெங்கிலும் எண்ணற்ற நபர்களுக்கு பொருத்தப்பட்டு, இதயங்களின் பாதுகாவலனாக பேஸ்மேக்கர்கள் உள்ளன. இதன்மூலம் சீரற்ற இதயத்துடிப்புள்ள நபர்கள் மற்றவர்களைப் போலவே ஆரோக்கியமான மற்றும் அதிக உற்சாகமான வாழ்க்கையை வாழ முடியும். பேஸ்மேக்கரின் பயணம் 1950களில் தொடங்கியது. முதல் பேஸ்மேக்கர்கள் வெளிப்புற சாதனங்களாக, அளவில் பெரியவையாக இருந்ததோடு அதை இயக்குவதற்கு பெரிய பேட்டரிகள் தேவைப்பட்டன. 1960களில் முதல் முறையாக உடலுக்குள் பொருத்தக்கூடிய பேஸ்மேக்கர் அறிமுகப்படுத்தப்பட்டது.

அதன்பிறகு பல்வேறு முன்னேற்றங்களுக்கு உட்படுத்தப்பட்ட பேஸ்மேக்கர் இப்போது மிகச்சிறிய அளவுள்ளதாக பன்முகத் திறன் கொண்டதாக மேம்படுத்தப்பட்டிருக்கின்றன. நோயாளிக்கு ஏற்றவாறு இதயத்துடிப்பின் வேகத்தை மாற்றக்கூடிய திறன் கொண்டதாகவும், இதயத்தின் பல்வேறு அறைகளில் முடுக்கத்தை ஏற்படுத்தும் திறன் உள்ளதாகவும் நவீன பேஸ்மேக்கர்கள் வெளி வருகின்றன.

பேஸ்மேக்கர்கள் மற்றும் கார்டியோவர்ட்டர் – டிபிபிரிலேட்டர்கள் (ஐசிடி -திடீர் இறப்பை தடுக்கும் கருவி): பேஸ்மேக்கர்கள் பிரதானமாக மெதுவான இதயத்துடிப்பு பிரச்னையை சரிசெய்கின்றபோது, கார்டியோவர்ட்டர் – டிபிபிரிலேட்டர்கள் அதிவேக இதயத்துடிப்பு மற்றும் சீரற்ற இதயத்துடிப்பு போன்ற உயிருக்கு அச்சுறுத்தலான பாதிப்புகளை கண்டறிவதற்கும் மற்றும் அந்த குறைபாட்டை சரிசெய்வதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. உடலில் பொருத்தக்கூடிய சாதனமான ஐசிடிக்கள் அதிக இதய துடிப்பு அல்லது குளறுபடியான இதயத்துடிப்பு இருப்பதை கண்டறியும்போது குறிப்பிட்ட ஆற்றலுள்ள மின்அதிர்ச்சியை வழங்கி ரத்த ஓட்டத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வருகிறது.

ஐசிடிகளின் அறிமுகம் இதய பராமரிப்பு சிகிச்சையில் ஒரு பெரும் மாற்றத்தைக்கொண்டு வந்திருக்கிறது. 1980ம் ஆண்டு ஐசிடி முதன் முறையாக பொருத்தப்பட்டபோது, அளவில் பெரிதாக அது இருந்தது மற்றும் அதை பொருத்துவதற்கு பெரிய அறுவை சிகிச்சையும் அவசியமாக இருந்தது. சீரற்ற இதயத்துடிப்பை கண்டறிந்து சிகிச்சையளிக்கும் துல்லியத்தன்மை இப்போது தயாரிக்கப்படும் ஐசிடிகளில் மேம்பட்டிருக்கிறது. இவை தேவையின்றி இதய அதிர்ச்சி வழங்கப்படுவதை குறைக்கின்றன. சில ஐசிடிகள், பேஸ்மேக்கர்கள் மற்றும் டிபிப்ரிலேட்டர் ஆகிய இரண்டின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து குறைவான இதயத்துடிப்பு மற்றும் வேகமான இதயத்துடிப்பு ஆகிய இரு நிலைகளுக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சையை வழங்குகின்றன.

செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) பயன்பாடு: பேஸ்மேக்கர் மற்றும் ஐசிடிகளின் மேம்பாடு மற்றும் செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிக்கிறது. இதயத்தில் ஏற்படும் நிகழ்வுகளை அதிக துல்லியத்துடன் செயல்திறனுடனும் கணிக்கவும், கண்டறியவும் மற்றும் பதில்வினையாற்றவும் இச்சாதனங்களை செயற்கை நுண்ணறிவு மேம்படுத்துகிறது. சீரற்ற இதயத்துடிப்புகளுக்கு முன்னதாக நிகழ்பவற்றை அடையாளம் காண, இதயத்தின் மின் செயல்பாட்டிலிருந்து ஏராளமான தாவுகளை ஏஐ அல்கோரிதம்கள் பகுப்பாய்வு செய்து சீரற்ற இதயத்துடிப்பு பிரச்னை வராமல் தடுக்கிறது.

மேலும் செயற்கை நுண்ணறிவு, உடலில் பொருத்தப்படுகின்ற சாதன அமைப்புகளை நோயாளியின் தேவைகள் மற்றும் நிலைமைகளுக்கேற்ப மாற்றியமைத்து சிகிச்சை அளிக்கிறது. செயற்கை நுண்ணறிவு கொண்ட பேஸ்மேக்கர் மற்றும் ஐசிடிகளை கட்டுப்படுத்தும் அல்கோரிதம்களை செம்மைப்படுத்த செயற்கை நுண்ணறிவின் ஒரு துணைப்பிரிவான இயந்திரக்கற்றல் பயன்படுத்தப்படுகிறது. இந்த அல்கோரிதம்கள் நோயாளிகளின் இதயத்துடிப்புகளிலிருந்து தரவுகளை பெற்று பேஸ்மேக்கர் மற்றும் ஐசிடிகளது செயல்திறனை மேம்படுத்துகின்றன. இதனால் நோயாளியின் நிலைமை மாறும் போதுகூட இச்சாதனங்கள் வழங்கும் சிகிச்சை தொடர்ந்து பயனளிப்பதாக இருப்பது உறுதி செய்யப்படும்.

மேலும், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக்கற்றல் ஆகியவை தொலைநிலை கண்காணிப்பு அமைப்புகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இது பேஸ்மேக்கர் மற்றும் ஐசிடிகள் பொருத்தப்பட்டுள்ள நோயாளிகள் மீது தொடர்ச்சியான நிகழ்நேர கண்காணிப்புக்கு உதவுகிறது. இந்த வகை அமைப்புகள் நிகழ்வதற்கு சாத்தியமுள்ள பிரச்னைகள் பற்றி மருத்துவர்களுக்கு எச்சரிக்கின்றன. அதுமட்டுமின்றி அடிக்கடி நேரில் பரிசோதனை செய்து கொள்வதற்கான தேவையை குறைக்கின்றன. இன்னும் செயற்கை நுண்ணறிவினால் பல முன்னேற்றங்கள் இச்சாதனங்களின் பயன்பாட்டில் வரக்கூடும் என நம்பப்படுகிறது.

மொபைல் மற்றும் கிளவுட் தொழில்நுட்பங்கள்: பேஸ்மேக்கர்கள் மற்றும் ஐசிடிகளின் மேலாண்மைக்கு மொபைல்போன்கள், கிளவுட் ஸ்டோரேஜ், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் பிற டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பது கணிசமான நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக, மொபைல் போன்களை கொண்டு ப்ளூடூத் அல்லது பிற வயர்லெஸ் தொழில்நுட்பங்களின் வழியாக பேஸ்மேக்கர்கள் அல்லது ஐசிடிகளிலிருந்து தரவை பெறலாம். இந்த தரவுகளில் இதய துடிப்பு, பேட்டரி ஆயுள் மற்றும் சாதனத்தின் செயல்திறன் ஆகியவை அடங்கும்.

நோயாளிகளின் சீரற்ற இதயத்துடிப்பு மற்றும் சாதனத்தில் சாத்தியமுள்ள சிக்கல்கள் குறித்து நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கு மொபைல் செயலி மூலமாக இத்தொழில்நுட்பங்கள் எச்சரிக்கும்.
பேஸ்மேக்கர் மற்றும் ஐசிடிகளில் இருந்து நோயாளி குறித்த தாவுகளை கிளவுட் ஸ்டோரேஜில் பாதுகாப்பாக சேமிக்க முடியும், நீண்டகால கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வை செய்ய இது உதவியாக இருக்கும். இதய துடிப்பின் போக்குகளை கண்டறிவது போன்ற மேம்பட்ட தரவு பகுப்பாய்வை கிளவுட் கம்ப்யூட்டிங் செயல்படுத்துகிறது.

கிளவுட் ஸ்டோரேஜில் இருக்கும் தரவுகளை அங்கீகாரம் பெற்ற மருத்துவப் பணியாளர்கள் எந்த இடத்திலிருந்தும் காணமுடியும். இதனால், தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் மற்றும் தொடர் சிகிச்சைகள் எளிதாகின்றன. இத்தகைய தொழில்நுட்பங்கள் நோயாளியின் பங்கேற்பையும், கல்வியையும் மேம்படுத்துகின்றன. உதாரணமாக தங்களது இதய நலம் பற்றி நிகழ்நேர தரவுகளை மொபைல் செயலிகள் நோயாளிகளுக்கு வழங்க முடியும். அவர்களின் நிலைமை குறித்து தகவல் அளிப்பதோடு பேஸ்மேக்கர் மற்றும் ஐசிடிக்களின் பராமரிப்பு குறித்து ஆலோசனை குறிப்புகளை அவைகளால் வழங்கவும் இயலும். மேலும் பாதுகாப்பான கிளவுட் செயல்தளங்களின் மூலம் நோயாளிகள் தங்களது உடல்நலப் பதிவுருக்களை பெறவும் மற்றும் தங்களது உடல்நிலை பற்றி புரிந்து கொள்ளவும் முடியும்.

தொலைதூர நோயாளி கண்காணிப்பு: தொலைதூரத்திலிருக்கும் நோயாளிகள் மீதான கண்காணிப்பு என்பது பேஸ்மேக்கர் மற்றும் ஐசிடி பொருத்தப்பட்ட நோயாளிகளது மேலாண்மையில் ஒரு சிறப்பான முன்னேற்றமாகும். இதயத்துடிப்பு, பேட்டரி ஆயுள் மற்றும் சாதன செயல்பாடு உள்ளிட்ட தரவுகள் உட்பட பொருத்தப்பட்ட சாதனத்திலிருந்து வயர்லெஸ் முறையில் மருத்துவர்கள் சேகரிப்பதற்கு இது உதவுகிறது. மருத்துவமனைக்கு அடிக்கடி நேரில் செல்வதற்கான தேவையை இது நீக்குவதுடன் அவர்களது வாழ்க்கை தரத்தையும் மேம்படுத்துகிறது.

வழக்கமான கண்காணிப்பின் மூலம் சாதனத்திலுள்ள பிரச்னைகளை அல்லது நோயாளியின் இதய துடிப்பு சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிய முடியும். தொலைதூர நோயாளி கண்காணிப்பு மூலம் தொடக்க நிலையிலேயே சிகிச்சையளிப்பது சிக்கல்கள் வராமல் தடுக்கும், மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிப்பதற்கான அவசியத்தையும் தவிர்ப்பதால் செலவு மிச்சமாகும். தொலைதூர நோயாளி கண்காணிப்பு, நோயாளியின் ஈடுபாட்டையும், சிகிச்சைத் திட்டங்களை நோயாளிகள் பின்பற்றுவதை ஊக்குவிக்கிறது. மேலும் நோயாளிகள் தங்கள் உடல்நல தரவுகளை பெறமுடியும் மற்றும் தங்களது மருத்துவர்களிடமிருந்து அதன் அடிப்படையில் ஆலோசனையைப் பெற முடியும். இது பரிந்துரைக்கப்பட்ட சிகிச்சை முறைகள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களை தொடர்ந்து பின்பற்ற அவர்களை ஊக்குவிக்கும். தொலைதூர நோயாளி கண்காணிப்பை பின்பற்றுவதால் பேஸ்மேக்கர் மற்றும் ஐசிடி நோயாளிகள் சுறுசுறுப்பான, உற்சாகமான வாழ்க்கையை வாழமுடியும்.

தொழில்நுட்ப முன்னேற்றம்: திறன்மிக்க ரத்த ஓட்டத்தை உறுதிசெய்து உடலுக்கு ஆக்சிஜனையும், ஊட்டச்சத்துகளையும் இதயம் வழங்குவதால் அதன் ஆரோக்கியத்தைப் பேணுவது மிக முக்கியம். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட இதயநாள நோய்களின் அபாயத்தை குறைத்து ஒட்டுமொத்த நலவாழ்வை சீராக இயங்கும் இதயம் சாத்தியமாக்குகிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் கண்டறியப்பட்டுள்ள பேஸ்மேக்கர்கள் மற்றும் ஐசிடிகளின் பரிணாம வளர்ச்சியும், செயற்கை நுண்ணறிவின் ஒருங்கிணைப்பும், இதய பராமரிப்பு செயல்தளத்தை கணிசமாக மாற்றியுள்ளன. இந்த சாதனங்கள் இதுவரை எண்ணற்ற நபர்களின் உயிர்களை காப்பாற்றியிருக்கின்றன மற்றும் சீரற்ற இதயத்துடிப்பு பிரச்னை உள்ள நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தியுள்ளன என்பதை மறுக்க இயலாது. தொலைதூர நோயாளி கண்காணிப்பு செயல்முறை இந்த நன்மைகளை மேலும் அதிகரித்து நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பராமரிப்பை சாத்தியமாக்கியிருக்கிறது. மருத்துவத்துறையில் தொழில்நுட்பம் தொடர்ந்து முன்னேறி வருவதால் பேஸ்மேக்கர்கள் மற்றும் ஐசிடிக்களின் பயன்கள் இனிவரும் காலங்களில் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் துல்லியமாக செயல்படும் இதய துடிப்பு சிக்கல்களை கண்டறியும் ஐசிடி கருவி appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED விபத்தில் புதுவை தினகரன் பொது மேலாளர் பலி